உள்ளூர் செய்திகள்

உலகின் உயர்ந்த மரம்

வகுப்பில் எல்லோரும் ஒரே உயரத்தில் இருப்பதில்லை, இல்லையா! அது மாதிரிதான் மரங்களும். சில குட்டையாய் இருக்கும். சில வகை மரங்கள் உயரமாய் வளரும். அப்படி உலகில் உயரமாய் வளர்ந்து நிற்கும் மரம் ரெட் வுட் (Red wood). அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ரெட் வுட் நேஷனல் அண்டு ஸ்டேட் பார்க்கில் (Redwood National and State Park) இருக்கிறது. இந்த மரங்கள் சாதாரணமாகவே 300 அடி உயரம் வரை வளரக் கூடியவை. ஆனால், 2006 ஆம் ஆண்டு மரங்களை ஆய்வு செய்யும் போது 379 அடி உயரத்துக்கு ஒரு மரம் வானளாவி உயர்ந்து நிற்பதைப் பார்த்தனர் கணக்கெடுப்பாளர்கள். மலைத்துப்போய் அந்த மரத்திற்கு ஹைபீரியன் (Hyperion) என்று பெயர் இட்டனர். இந்த ஹைபீரியன் 28 அடுக்கு மாடி உயரத்தைத் தொடும் அளவிற்கு உயரமானது. இது மட்டுமா? இன்னும் மூன்று மரங்களும் அதே பூங்காவில் வளர்ந்து நிற்பதைப் பார்த்த வல்லுநர்கள் அந்த மரங்களுக்கும் பெயர் சூட்டி விட்டார்கள். அவை ஹிலியஸ் (Hilios) 374 அடி; இகரஸ் (Icarus) 371; டேட்டல்ஸ் (Daedalus) 363.4 அடி. இந்த மரங்கள் சாதாரணமாக 500 முதல் 700 வருடங்கள் வரை உயிர் வாழக் கூடியவை. ஆனால், சில மரங்கள் அபூர்வமாக 2000 வருடம்வரை கூட வாழும். இவ்ளோ உயரமுள்ள மரங்கள் காற்றில், வெள்ளத்தில் சாய்ந்து விடாதா? என்ற கேள்வி வரும். அதுக்கும் விடை இருக்கு. மரத்தின் வேர்கள் பூமியில் 50 அடி ஆழம் வரை சென்று படருமாம். தண்டுப் பகுதியும் உறுதித் தன்மையுடன் வளர்வதால் காற்றிலோ, புயலிலோ, வெள்ளப்பெருக்கிலோ இம்மரங்கள் சாய்வதில்லை, முறிவதுமில்லை.மரங்கள் வளரட்டும், மழை பெருகட்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !