உள்ளூர் செய்திகள்

செடியில் காய்க்கும் கம்பளி!

வறட்சியைத் தாங்கி விளையும் தாவரங்களில் பருத்தி முக்கியமானது. அதனால்தான் நீர் வளம் குறைவான கரிசல் நிலங்களில் இது காணப்படுகிறது. பருத்தியின் தாவரவியல் பெயர் காசிப்பியம் லின் (Gossypium Linn). இது குத்துச் செடியாக வளரும். இதன் பூக்கள் மஞ்சள் நிறத்திலும், வெளிர் கருஞ்சிவப்பு நிறத்திலும் இருக்கும். இதன் முற்றிய காய்களில் இருந்து பஞ்சு எடுத்து, நூல் நூற்று, ஆடை நெய்யப்படுகிறது. 'உலகிலேயே சிந்து சமவெளி மக்கள்தான் பருத்தி நெசவு முறையை முதன்முதலாகத் தெரிந்துகொண்டவர்கள்' என்று வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். இந்த நாகரிகத்தின் முக்கிய நகராக இருந்த மொகஞ்சதாரோவில் செய்யப்பட்ட அகழ்வாராய்ச்சியில், 5,000 வருடங்களுக்கு முன்னால் நெய்யப்பட்ட பருத்தி ஆடைத் துண்டுகள் கிடைத்துள்ளன. 'இந்தியப் பிரதேச மக்கள் வளர்க்கும் ஒரு வகை தாவரத்தில், கனிகளுக்குப் பதிலாக, செம்மறி ஆட்டுக் கம்பளியை விடத் தரமான கம்பளி காய்க்கிறது!' இப்படி கிரேக்க வரலாற்று ஆசிரியர் ஹெரோடெட்டஸ் (Herodetus), சுமார் 2400 ஆண்டுகளுக்கு முன்னர் வேடிக்கையாகக் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் இருக்கும் 2100 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டுகளில் 'அறுவை வணிகன்' என்ற சொல் இருக்கிறது. 'அறுவை' என்பது துணியைக் குறிக்கிறது. துணி வணிகர்களைப் பற்றிய இந்தக் குறிப்பில் இருந்து, தமிழகத்தில் மிகத் தொன்மையான காலத்திலேயே பருத்தி பயன்பாட்டில் இருந்ததை அறிய முடிகிறது!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !