உள்ளூர் செய்திகள்

வழக்கத்தை விட்டொழி; மாற்றி யோசி!

வித்தியாசம்நாங்கள் பள்ளி வரும் வழியில், ஒரு பூங்கா உண்டு. அதன் தோட்டக்காரர் உண்மையிலேயே கலையறிவு மிகுந்தவர். சாலையை ஒட்டிய பூங்காவின் சுற்றுச்சுவர் அருகே செடிகளில் ஒவ்வொரு வாரமும் ஏதேனும் ஒரு மாற்றத்தைக் காண்பிப்பார். பல்வேறு விதங்களில் செடிகளை வெட்டி, விதவிதமான உருவங்களை ஏற்படுத்துவார். அதைப் பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருக்கும்.“செடியெல்லாம் போய் வெட்டி, வெட்டி போட்டு... மனுஷத்தன்மையே இல்ல.” என்றாள் ஓவியா. எனக்கு இந்தக் கோணம் புதுசு. நான் இப்படிப் பார்த்ததில்லை. அதேசமயம், எனக்கு அந்தத் தோட்டக்காரரின் ஆர்வமும் முயற்சியும் பிடித்திருந்தன. அதைக் குறைசொல்வதை என்னால் ஏற்கமுடியவில்லை. ஒவ்வொருமுறையும் இது எங்களுக்குள் விவாதத்தை ஏற்படுத்திக்கொண்டே இருந்தது. ஒரு நாள் உமா மிஸ்ஸிடம் பேசும்போது இதைச் சொன்னேன்.“ஓவியா சொல்றது ஒரு கோணம். நீ பார்க்கறது ஒரு கோணம். ரெண்டுக்குமே வித்தியாசம் தான் அடிப்படை.”நான் புரியாமல் லேசாக விழித்தேன். உமா மிஸ் புரிந்துகொண்டிருக்க வேண்டும்.“ஓவியா, மரம் செடி கொடிகளை உயிருள்ள ஜீவன்களா பார்க்கறா. நீ அந்தத் தோட்டக்காரரோட முயற்சியில் இருக்கிற கலையழகைப் பார்க்கறே. உங்க ரெண்டு பேரையும் கவர்ந்தது என்ன தெரியுமா? வித்தியாசம் தான்.”நான் 'ஆமாம்' என்பது போல் தலையசைத்தேன்.“வித்தியாசம் தான் புதுமைக்கே அடிப்படை. எதைச் செய்யணும்னாலும் அதுல வித்தியாசம் இருக்கணும். வழக்கமானதைச் செய்யறதுல என்ன பெரிய 'த்ரில்' இருக்கு? சொனம் வாங்க்சுக்கைப் பத்திக் கேள்விப்பட்டு இருக்கியா?”“அது யாரு மிஸ்?”“ஜம்மு, காஷ்மீரில் லடாக்னு ஒரு பகுதி இருக்கு. அங்கே இவர் செஞ்சிருக்கிற வேலைகள் அத்தனையும் நம்மை ஆச்சரியப்பட வைக்கும். இவர் ஒரு ஸ்கூல் நடத்திக்கிட்டு வரார். அதுல 'பாஸ்' ஆன பசங்களுக்கு இடமில்ல. 'பெயில்' ஆன பசங்களுக்குத்தான் முதல் இடம். அதுவும் பலமுறை 'பெயில்' ஆனவங்களுக்குத்தான் இங்கே கவனம் அதிகம். பள்ளி முழுசையும் நடத்தறது மாணவர்கள் தான். எல்லாமே ஜனநாயகமுறைப்படியான நடைமுறைதான். நாடாளுமன்ற முறைதான். எல்லாத்துக்கும் ஒரு குழு போட்டிருக்காங்க. சமையலுக்கு, மாடுகளைப் பராமரிக்கறதுக்கு, மின்சாரத்துக்கு, தோட்டப் பராமரிப்புக்கு... எல்லாமே சீனியர்கள் வழிகாட்ட, ஜூனியர்கள் நிர்வாகம் செய்வாங்க. ரெண்டு மாசத்துக்கு ஒருமுறை, நாடாளுமன்றம் கூடும். என்ன செஞ்சாங்க, என்ன செய்யலைன்னு எடுத்துச் சொல்லணும். இன்னொரு பக்கம், படிப்பே, செயல்முறைக் கல்விதான். எல்லாத்தையும் கையால செஞ்சு பார்க்கணும். கத்துக்கணும். இதை மட்டுமல்ல, இன்னும் ஏராளமான விஷயங்களை அங்கே செஞ்சுக்கிட்டு வரார் சொனம் வாங்க்சுக். லடாக் பகுதியில் மழைக்காலத்துல தண்ணீர் ஓடும். ஆனால், வெயில் காலம் வரும்போது, தண்ணீர் பஞ்சம். இவர் ஓர் ஐடியா செஞ்சார். தண்ணீர் இருக்கிற காலத்துல, நதியிலேருந்து, தண்ணீரை பைப் மூலம் கொண்டு வந்து, உயரமான ஷவர் மாதிரி கொட்ட வெச்சார். இரவுல அங்கே அவ்வளவு குளிர். அது இமயமலைப் பகுதி இல்லையா? தண்ணி, ஐஸாக ஆயிடும். இந்த மாதிரி, ஓடிவர்ற தண்ணீரை, வீணா போக விடாமல், அதையெல்லாம் ஐஸ் குன்றுகளாக மாற்றிக்கிட்டே இருக்கார். குளிர் காலம் முடிஞ்சு, மீண்டும் வெயில் அடிக்கும்போது, அந்த ஐஸ் கரைஞ்சு மீண்டும் தண்ணீரா அலையடிச்சுகிட்டு ஓடும். அப்போது, தண்ணீர் கஷ்டமே இல்லாமல், விவசாயம் பார்க்க முடியும்.இதுபோல, பள்ளிக்கூடத்துக்கு உள்ளே மட்டும், இயற்கையாகவே வெப்பம் ஏற்படுத்தியிருக்கார். வெளியே மைனஸ் 15 டிகிரி குளிர் இருக்கும். ஆனால், பள்ளிக்கூட அறைக்குள்ளே பிளஸ் 15 டிகிரி செண்டிகிரேடு வெப்பம் இருக்கும். இதுக்கும் அடிப்படை அறிவியல்.சொனம் வாங்க்சுக் இன்னிக்கு ஜம்மு, காஷ்மீரோட கல்விமுறையை மட்டுமல்ல, பாடப் புத்தகங்களையும் சொல்லிக்கொடுக்கிற முறைகளையுமே மாத்திட்டார். எல்லாத்துக்கும் அடிப்படை என்ன தெரியுமா? வித்தியாசம். வழக்கமான முறையில எதையும் யோசிக்கல. ஒரு விஷயம் பழக்கப்பட்டுப்போனா, மூளை கெட்டி தட்டிப் போயிடும். சுறுசுறுப்பு இருக்காது. படைப்பாளுமை இருக்காது. எல்லாத்தையும் வித்தியாசமாக செஞ்சு பார்க்கணும். அதுவும் பொதுமக்களுக்குப் பயனுடைய வகையில மாத்தி யோசிக்கணும்ங்கறதுதான் இதுல முக்கியம்.”ஓவியாவும் நானும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம். ரெண்டு பேருமே வித்தியாசத்தை போற்றக்கூடியவர்களாகவே இருப்பதாகத் தோன்றியது.வித்தியாசத்துக்குக் கிடைத்த விருதுகள்!* ரோலக்ஸ் அவார்ட்ஸ் ஃபார் எண்டர்பிரைஸ்* ரியல் ஹீரோஸ் அவார்டு* அசோகா அவார்டு ஃபார் சோஷியல் ஆந்திரபர்னர்ஷிப்* ராமன் மகசேசே விருது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !