தங்கத்துக்கு மிளகு வாங்கியவர்கள்
பொங்கலில் சேர்த்திருந்த மிளகை எடுத்து ஓரமாக வைத்துவிட்டு, வெறும் சாதத்தை மட்டும் சாப்பிட்டான் கோகுல். அவன் அம்மா, ''மிளகையும் சேர்த்து சாப்பிடு. உடம்புக்கு நல்லது'' என்றாள். ''போம்மா அது காரமாய் இருக்கு'' என்றான்.''காரமாய்த்தான் இருக்கும். ஆனால், அதில் நிறைய சத்து இருக்கு. உடம்புக்குத் தேவையான ஏ, சி, இ, போன்ற வைட்டமின்களும் இருக்கு...ஜீரணத்துக்கும் நல்லது'' என்றவள், அவன் தட்டில் ஓரமாய் எடுத்து வைத்திருந்த மிளகை எடுத்து, அவனுக்கு பொங்கலுடன் சேர்த்து ஊட்டிவிட்டாள். அவன் வேண்டாவெறுப்பாக மென்று விழுங்கினான். காரம் தாங்காமல், தண்ணீரை எடுத்துக் குடித்தான்.''பழங்காலத்தில் மிளகாய் நம் நாட்டில் கிடையாது தெரியுமா?'' என்றாள் அம்மா.''அப்போ காரத்திற்கு என்ன செய்தார்கள்?'' என்றான்.''மிளகைத்தான் இடித்துச் சமையலுக்குப் பயன்படுத்தினார்கள். மிளகாய் ரொம்ப நாள் கழிச்சு வெளிநாட்டில் இருந்து இறக்குமதி ஆன பொருள்'' என்றாள்.''மிளகை எப்படி இடிச்சாங்க?'' என்றான்.''உரலில் நெல் குத்துவது போல், இடித்து பயன்படுத்தினார்கள்” என்றவள், ''மிளகை வெளிநாட்டினர் தங்கம் கொடுத்து வாங்கிட்டு போயிருக்காங்க தெரியுமா?'' என்றாள்.''தங்கம் கொடுத்து மிளகை வாங்கினார்களா?'' ஆச்சரியமாக அம்மாவைப் பார்த்தான். பொங்கலுடன் வந்த மிளகை ஒதுக்கி வைக்காமல், மென்று சாப்பிட ஆரம்பித்தான்.''ஆமாம் கோகுல். யவனர்கள் எனப்படும் கிரேக்கர்கள், நம்ப நாட்டிற்கு வந்து பொற்காசுகளைக் கொடுத்து, மிளகை வாங்கிட்டுப் போனாங்க...''''ஏன், அவங்க நாட்டில் அது இல்லையா'' என்றான்.''அப்போது, மிளகு இந்தியாவில் மட்டும்தான் விளைந்தது. அப்புறம்தான் இங்கிருந்து எடுத்துச் சென்று, வெளிநாட்டினர் அதைப் பயிரிட ஆரம்பித்தார்கள்''. ''இந்தக் கதை எல்லாம் உனக்கு எப்படித் தெரியும்? எங்க படிச்சே?'' என்றான் நம்ப மாட்டாது.தமிழில் நிறைய பாட்டு இருக்கு. அதில் ஒண்ணு ரெண்டு சொல்றேன். புரியாட்டியும் கேளு... என்றவள், அகநானூறு (149) பாடலைச் சொல்லி, விளக்கமும் தந்தாள்.'யவனர் தந்த வினைமாண் நன்கலம்பொன்னொடு வந்து கரியோடு பெயரும்வளங்கெழு முசிறி'''முசிறி என்னும் துறைமுகத்திற்கு கப்பலில் வந்த கிரேக்கர்கள், மிளகை பொற்காசுகள் கொடுத்து வாங்கிச் சென்றனர் என்பதே இந்தப் பாடல் வரிகளின் கருத்து. கறி என்பது மிளகைக் குறிக்கும்'' என்றாள்.''இன்னொரு பாடல் புறநானூற்றில் வருக்கிறது. அதில்,'மனைக் குவை இய கறிமுடையாற்கலிச்சும்மைய கரைகலக்குறுந்துகலந்தந்த பொற்பரிசம்கழித்தோணியாற் கரை சேர்க்குந்து'''முசிறி துறைமுகம் யவனர்களின் பெரிய கப்பல்கள் வந்து தங்குவதற்கு ஏற்றமாதிரி, ஆழம் இல்லாமல் இருந்தது. அதனால் கப்பல்கள் துறைமுகத்திற்கு அப்பால் கடலில் நின்றன. சிறிய படகுகளில் மிளகை ஏற்றிக்கொண்டுபோய் கப்பல்களில் இறக்கினர். அதற்கு ஈடாய், பொன் நாணயங்களை அந்தக் கப்பல்கள் கொண்டு வந்தன. ''மிளகின் கதையையும், சிறப்பையும் கேட்ட கோகுல், இனி அதை ஒதுக்கி குப்பையில் போட மாட்டான்தானே!