உள்ளூர் செய்திகள்

மூன்று பெண்கள், மூன்று சாதனைகள்

அறிவியல் ஆராய்ச்சிகள் மேற்கொள்வதில் பெண்களின் பங்களிப்பு அபரிமிதமானது. அதற்கு உரிய அங்கீகாரம் கிடைக்கிறதோ இல்லையோ, தங்களுடைய முயற்சிகளில் பெண்கள் முடிசூடிக்கொண்டே இருக்கிறார்கள். உலக அளவில் புகழ்பெற்றுள்ள மூன்று ஆய்வாளர்களை இந்த வாரம் பார்ப்போம்.கேப்ரியலா கொன்ஸாலே (Gabriela Gonzalez)வயது: 52பிறந்த நாடு: அர்ஜென்டினாசாதனைகள்: உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானி ஐன்ஸ்டீன், ஈர்ப்பு அலைகள் எனப்படும் Gravitational field waves, இந்தப் பிரபஞ்சத்தில் இருக்க வேண்டும் என்றார். நீளம், உயரம், அகலம் ஆகிய மூன்று பரிமாணங்களைக் (3 dimensions) கொண்டது வெளி (Space); இந்த முப்பரிமாண வெளியுடன், ஒற்றைப் பரிமாணம் கொண்ட காலத்தை (Time) பிணைத்து, நான்கு பரிமாணங்கள் கொண்ட தொடரகமாக (Continnum) இந்தப் பிரபஞ்சத்தில் கால வெளி (Space time) இருக்கிறது. இந்தக் கால வெளியில்தான், கோள்கள் சுழற்சி, நட்சத்திர வெடிப்பு, கருந்துளைகள் மோதல் போன்ற நிகழ்வுகள் நடக்கின்றன. பொருட்கள் நகரும்போது, கால வெளி பரப்பு அதிர்ந்து, ஈர்ப்பு அலைகள் தோன்றும். இவை எல்லாம் ஐன்ஸ்டீனின் தத்துவம் வழங்கிய படிப்பினைகள். இந்த ஈர்ப்பு அலைகள் உண்மையிலேயே இருக்கின்றனவா என்பதை நிறுவ நூறாண்டுகளுக்கும் மேலாக விஞ்ஞானிகள் திணறி வந்தார்கள். கடந்த 1993ம் ஆண்டில் இருந்து அலைகளை நிறுவ, தீவிர முயற்சிகள் நடந்து வந்தன. அப்போது கேப்ரியலா கொன்ஸாலே கல்லூரி மாணவி. அவர் அர்ஜென்டினாவின் கொர்டோபா பல்கலைக்கழகத்தில் படித்த காலத்தில் அங்கு, ஐன்ஸ்டீனின் சார்பியல் தத்துவத்தைக் கரைத்துக் குடித்திருந்த பேராசிரியர்களும், ஆய்வாளர்களும் இருந்தார்கள். விளைவாக, ஐன்ஸ்டீனின் கோட்பாட்டால் கவரப்பட்டார் கேப்ரியலா. அதே துறையில் ஆராய்ச்சியாளராக விளங்கிய ஜார்ஜ் புலின் (Jorge Pullin) என்பவரைத் திருமணம் செய்துகொண்டு, அவருடன் மேற்படிப்பு நிமித்தமாக அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள சிராகூஸ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார், கேப்ரியலா. அங்கு பீட்டர் சால்சன் (Peter Saulson) என்ற அவரது ஆசிரியர், ஈர்ப்பு அலைகளை அளக்கும் லைகோ என்ற கருவியை (LIGO) அமைக்கும் திட்டம் பற்றி அறிமுகப்படுத்தினார்.தனது முயற்சி பற்றி: 'அந்தக் கருவி, பல மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கக்கூடிய ஒரு கருந்துளை, கால வெளியில் ஏற்படுத்தும் அதிர்வுகளின் விளைவாகத் தோன்றும் ஈர்ப்புக் கவர்ச்சி அலைகளை, பூமியில் உள்ள ஒரு கருவி பதிவு செய்யும் என்ற தகவல் என்னை ஆட்கொண்டது. அந்த முயற்சியில் நான் பங்குபெற வேண்டும் என்று அன்று முடிவெடுத்தேன்', என்கிறார் கேப்ரியலா. கடந்த 2016ம் ஆண்டில், ஈர்ப்பு அலைகள் இருப்பதை உறுதி செய்த 1000 விஞ்ஞானிகள் கொண்ட குழுவின் தலைவர், இவர்.எலனா ஏப்ரில் (Elena Aprile)வயது: 63பிறந்த நாடு: இத்தாலிசாதனை: இந்தப் பிரபஞ்சத்தின் கால் வாசி நிறையும், ஆற்றலும், டார்க் மேட்டர் (Dark matter) எனப்படும் கரும்பொருளால் ஆனது என்கிறார்கள் விஞ்ஞானிகள். இந்தக் கரும்பொருள் எந்த விதமான மின்காந்த அலைகளையும் வெளியிடாது, மின்காந்த அலைகளுடன் வினை புரியாது. எலனா ஏப்ரில், க்ஸெனான் (Xenon) திரவத்தைப் பயன்படுத்தி கரும்பொருள் இருப்பதை நிறுவும் ஆராய்ச்சியின் முன்னோடி. துகள்கள் (Particles) பற்றிய உலகளாவிய ஆராய்ச்சிகளை முன்னெடுக்கும் அணு ஆராய்ச்சிக்கான ஐரோப்பிய மையம் (CERN), அமெரிக்க விண்வெளி மையமான நாசா அமைப்பு, போன்ற முக்கிய ஆராய்ச்சி நிலையங்களின் திட்ட மேலாளராகப் பணியாற்றியுள்ளார்.தன்னை செதுக்கிய விஷயம் பற்றி: “ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்காக தான் சேர்ன் நிறுவனத்தில் சேர்ந்தபோது, எனது தலைவர் சொன்ன விஷயங்கள் என்னை ஓர் ஆராய்ச்சியாளராகப் பலப்படுத்தியது. 'நீ சாப்பிட்டால் என்ன, சாப்பிடாவிட்டால் என்ன? தூங்கினால் என்ன, தூங்காவிட்டால் என்ன? உனக்குக் குழந்தை இருக்கிறதா? குடும்பம் இருக்கிறதா? இதைப் பற்றியெல்லாம் எனக்குக் கவலை இல்லை. நான் கொடுத்த வேலை என்னாயிற்று?', என்றுதான் அவர் ஆராய்ச்சியாளர்களைப் பற்றிக் கேட்பார். எல்லாரையும் போல, 9-5 மணி வேலை நமக்குக் கிடையாது. அது வேலை இல்லை; தேடல் என்பது புரிந்தது'. என்கிறார் எலனா.எலனா, இரவு பகல் பாராது அயராது உழைத்ததன் விளைவாக, பிரபஞ்சத்தைப் பற்றிய பல முக்கிய கண்டுபிடிப்புகள் நிகழ்ந்து வருகின்றன.ஹெலன் க்வின் (Helan Quinn)வயது: 74. பிறந்த நாடு: ஆஸ்திரேலியா.சாதனை: இந்தப் பிரபஞ்சத்தைக் கட்டமைக்கும் அடிப்படைத் துகள்களைப் பற்றி, பல்வேறு முக்கிய இயற்பியல் கோட்பாடுகளை நிறுவி உள்ளார். உலகின் முக்கிய ஆராய்ச்சிக் கல்வி நிலையங்களில், கல்வி கற்பித்து, பல ஆராய்ச்சியாளர்களை உருவாக்கி வருகிறார். அமெரிக்க மாகாணங்களில், அறிவியல் கல்வி எப்படி இருக்க வேண்டும் என்பதை வரையறுத்துக் கொடுத்து, மாற்றங்களை உருவாக்கி வருகிறார். தனது வாய்ப்புகள் பற்றி: 'அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தபோது, எனக்கு, ஆராய்ச்சியைத் தேர்ந்தெடுப்பதா அல்லது பள்ளி ஆசிரியர் ஆகிவிடுவதா என்ற குழப்பம் இருந்தது. எனது ஆலோசகர், 'பொதுவாகப் பெண்கள் திருமணமாகி படிப்பைப் பாதியில் விட்டுச் சென்றுவிடுவதால், உயர்கல்வி நிலையங்கள் பெண்களைச் சேர்த்துக்கொள்ள தயங்குகின்றன. ஆனால், உன்னைப் பற்றி நாங்கள் கவலைப்படத் தேவையில்லை' என்று குறிப்பிட்டார்.நான் திருமணமே செய்துகொள்ள முடியாது என்கிறாரோ என்று வியந்தேன்”. இருந்தாலும், ஹெலன் தனக்குக் கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு, 1960களில் இருந்து தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு சாதித்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !