உள்ளூர் செய்திகள்

வெப்பமண்டல மழைக்காடுகள்! புவியியல் காரணங்கள்!

வெப்பமண்டல மழைக்காடுகள், பூமத்திய ரேகையின் அருகில் கடகரேகைக்கும், மகர ரேகைக்கும் இடைப்பட்ட பகுதியில் மட்டுமே அமைந்திருக்கின்றன. அது ஏன்? உயிர்கள் வாழத் தகுதியான இடமாக பூமி விளங்குகிறது. அதற்கு முக்கிய காரணம், சூரியனிலிருந்து பூமி கச்சிதமான தூரத்தில் அமைந்திருப்பதே ஆகும். சூரியனில் இருந்து வரும் வெப்பமும், வெளிச்சமும் உயிரினங்களின் மூல ஆற்றலாகும்.ஆனால், சூரியனிலிருந்து கிடைக்கும் ஆற்றல், பூமியின் அனைத்துப் பகுதிகளிலும் ஒரே மாதிரிக் கிடைப்பதில்லை. பூமியின் துருவங்கள் சில காலம் அதிக வெப்பமும், சில காலங்களில் சொற்ப வெப்பமும் பெற்று, பருவ மாறுதல்களுக்கு உள்ளாகின்றன. இதற்கு, பூமியின் சுழல் அச்சு (Spin Axis) தோராயமாக 23 டிகிரி சாய்ந்து இருப்பதே காரணம். ஆனால், பூமத்திய ரேகை அமைந்துள்ள பகுதிகளில் (Equitorial Region) அதாவது, புவியின் மத்தியப் பகுதியில் பருவங்கள் அதிகம் மாறுவதில்லை. இங்கே இரண்டே பருவம் தான். 1. மழைக்காலம் 2. கோடைக்காலம்.இந்தப் பூமத்திய ரேகைப் பகுதி சூரியனின் ஆற்றலை, ஆண்டு முழுக்க அதிகம் பெறுகிறது. அதனால், இப்பகுதி அதிக வெப்பநிலையைக் கொண்டிருக்கும். வெப்பநிலை அதிகமாக இருப்பதால், ஆவியாதலும் அதிகம் இருக்கும். இதன் காரணமாக, மழைப்பொழிவு அதிகரிக்கும்.அதனால், இங்கே ஆண்டின் பெரும்பகுதி, மழைக்காலமாகவே இருக்கும். இப்பகுதிகளை வெப்பமண்டலம் என்கிறோம். அதிக மழையும், அதிக வெப்பமும், பூமத்திய ரேகையைச் சூழ்ந்துள்ள பகுதிகள் (கடகரேகைக்குள் - tropic of cancer) பெறுகின்றன. இதனால், உயிரினங்கள் உயிர் வாழ மிகத் தகுதியான பகுதிகளாக இப்பகுதி உள்ளது. அடர்த்தியான காடுகள் (வெப்பமண்டல மழைக்காடுகள் - Tropical rainforest) இங்கே உருவாகவும் இதுவே காரணம். தென் அமெரிக்காவில் அமைந்துள்ள 'அமேசான்' காடுகள், மத்திய ஆப்பிரிக்காவின் 'காங்கோ மழைக்காடுகள்' இவ்வகையைச் சார்ந்தவையே. இந்தியா, வியட்நாம், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் சிறிய மழைக்காடுகள் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !