சுதந்திர போரின் ஆரம்பம் வேலூர்
சுதந்திரத்திற்கு வித்திட்ட நகர் வேலூர் . சிப்பாய்க் கலகம் (Sepoy Mutiny) கி.பி. 1806இல் இந்த நகரில்தான் நடைபெற்றது. தமிழகத்தின் ஒரு மாவட்டமாகவும் இருக்கிறது. முன்பு வட ஆற்காடு என்று அழைக்கப்பட்டது. பழங்காலத்தில் தொண்ட மண்டலம் என்று பெயர். வேலூர் நகரில் அகழியுடன் கூடிய பெரிய கோட்டை ஒன்று உள்ளது.இந்தக் கோட்டை கி.பி. 1556ஆம் ஆண்டு விஜயநகர வம்சத்தைச் சேர்ந்த அரசர்களால் கட்டப்பட்டது. பின்னர் பீஜப்பூர் சுல்தான்கள், மராட்டியர்கள், கர்நாடக நவாப்கள் எனப் பல மன்னர்கள் இந்தக் கோட்டையைக் கைப்பற்றி ஆட்சி செய்தனர். கடைசியாக ஆங்கிலேயர்கள் வசம் இருந்தது. திப்பு சுல்தான் போரில் இறந்த பிறகு அவரது குடும்பத்தினர் வேலூர் கோட்டையில்தான் ஆங்கிலேயர்களால் சிறை வைக்கப்பட்டிருந்தனர். சோழ, பல்லவர்களும் இந்த நிலப்பகுதியை ஆட்சி செய்திருக்கிறார்கள். நவாப்களின் சார்பாக ஆற்காட்டைத் தலைமையிடமாகக் கொண்டு நிர்வாகம் செய்தவர் சதத் உல்லா-கான் (கி.பி. 1713). அவன் செஞ்சியை ஆட்சி செய்த ராஜா தேசிங்கு மீது படை எடுத்துச் சென்று வென்றார். போரில் ராஜா தேசிங்கு கொல்லப்பட்டார். அவர் மனைவி ராணிபாய் அப்போது இருந்த கொடிய வழக்கப்படி உடன்கட்டை ஏறினார். அந்த ராணியின் நினைவாக உருவாக்கப்பட்ட நகர்தான் இந்த மாவட்டத்தில் உள்ள ராணிப்பேட்டை.பாலாறு இந்த மாவட்டத்தில்தான் ஓடுகிறது. தூய்மைக்குப் பெயர்போன இந்த நதி, தற்போது ஆம்பூர், ராணிப்பேட்டை போன்ற நகரங்களில் இயங்கும் தோல் கழிவுகளால் மாசு அடைந்துள்ளது. நிலத்தடி நீரும் மாசு நிறைந்தாகவே இருக்கிறது.இந்த மாவட்டத்தில் வேலூர், காட்பாடி, குடியாத்தம், திருப்பத்தூர் என மொத்தம் 13 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. ஐடா ஸ்கடர் அம்மையார் நிறுவிய சி.எம்.சி. மருத்துவமனை இந்த நகரில்தான் உள்ளது. வேலூர் கோட்டையில் உள்ள ஜலகண்டீஸ்வரர் கோயில், நகரில் உள்ள பொற்கோயில், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில் போன்றவை இந்த மாவட்டத்துக்குப் புகழ் சேர்ப்பவை.