ஜோடி போட்ட சொற்கள்!
அதோ, அவர்தான் கதிரவன். இந்த நிறுவனத்தின் தலைவர்.அவருக்குப் பக்கத்தில் ஒரு பெண்மணி நிற்கிறாரே, அவர் பெயர் விமலா. அவர் இந்நிறுவனத்தின் இணைத் தலைவர்.இந்தச் சொல்லின் பொருளென்ன?கதிரவன் தலைவர், அவருக்கு இணையான இன்னொரு தலைவர் விமலா. இருவரும் அந்த நிறுவனத்தில் கிட்டத்தட்ட ஒரேமாதிரியான அதிகாரங்களைக் கொண்டவர்கள்.இதனால்தான், கணவன், மனைவியைக்கூடச் சிலர் 'இணை' என்கிறார்கள். வீட்டில் அவர்கள் இருவரும் சமமல்லவா?இந்த 'இணை'களை இலக்கணத்திலும் காணலாம். ஒன்றுக்கொன்று இணையான/ஒப்பிடத்தக்க/தொடர்புள்ள சொற்களை 'இணைச்சொற்கள்' என்கிறோம். எடுத்துக்காட்டாக:இரவு பகலாகப் பாடுபட்டேன்நியாய தர்மங்களை அறிந்து வாழவேண்டும்முதல் வாக்கியத்தில் இரவு பகல் ஆகியவை இணைச்சொற்கள். இரண்டாவது வாக்கியத்தில், நியாயம் தர்மம் என்பவை இணைச்சொற்கள்.பெயர்ச்சொற்களில் மட்டுமல்ல; வினைச்சொற்களிலும் இணைச்சொற்கள் வருவதுண்டு. எடுத்துக்காட்டாக: ஓங்கி உயர்ந்த மலை: இங்கே ஓங்குதல், உயர்தல் என்பவை இணைச்சொற்கள்.ஓங்குதல், உயர்தல் இரண்டும் கிட்டத்தட்ட ஒரே பொருளைத்தானே தருகின்றன. இவற்றில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தினால் போதாதா?போதும்தான். ஆனால், வாக்கியத்தின் சுவையைக் கூட்டுவதற்காகத்தான் இப்படி இணைச்சொற்களைச் சேர்த்துப் பேசுகிறோம். 'ஓடி விளையாடினேன்' என்று சொல்வதைவிட, 'ஓடி ஆடி விளையாடினேன்' என்றால் கொஞ்சம் சுவை அதிகரித்து விடுகிறதுதானே?இணைச்சொற்களில் இரண்டு வகை:நேர் இணைச்சொற்கள், எதிர் இணைச்சொற்கள்.நேர் இணைச்சொற்கள் என்றால், சொல்லப்படும் இரு சொற்களும், ஒரே பொருளையோ அல்லது ஒன்றுக்கொன்று தொடர்புடைய பொருளையோ குறிப்பிடும். எடுத்துக்காட்டாக: சீரும் சிறப்புமாக வாழ்க: இங்கே சீர், சிறப்பு ஆகியவை, ஒரே பொருளைக் குறிப்பிடுகின்றன பெட்டி படுக்கையோடு புறப்படு: இங்கே பெட்டி, படுக்கை ஆகியவை தொடர்புடையவை: வெளியூர் செல்கிறவர்கள் அவற்றை எடுத்துச்செல்வது வழக்கம்.எதிர் இணைச்சொற்கள் என்றால், சொல்லப்படும் சொற்கள் ஒன்றுக்கொன்று எதிரானவையாக இருக்கும்.எடுத்துக்காட்டாக:தொழிலில் லாபம், நட்டம் வரலாம்: இங்கே லாபம் என்பதும் நட்டம் என்பதும் எதிரெதிரானவை.அந்தக் கடைக்காரர், ஏழை, பணக்காரர் என்று வித்தியாசமே பார்க்கமாட்டார்: இங்கே ஏழை என்பதும் பணக்காரர் என்பதும் எதிரெதிரானவை.நேர், எதிர் இணைச்சொற்களைப் பயன்படுத்துவதால், நம்முடைய எழுத்து அழகாகும்... அட, இந்த வாக்கியத்தில் வரும் 'நேர், எதிர்' என்பவைகூட இணைச்சொற்கள்தான்!- நாகா