பயிற்சியால் பார்வை பெறலாம்
மனித மூளையின் வெவ்வேறு பகுதிகளை, தொடர் பயிற்சிகளின் மூலம் மற்ற செயல்களையும் செய்ய வைக்க முடியும் என்று கனடாவின் மெக்கெல் பல்கலைக்கழக (McGill University) ஆய்வு நிறுவியுள்ளது. உதாரணத்திற்கு, மூளையின் மைய டெம்போரல் (Middle Temporal) எனும் பகுதி, நகரும் பொருட்களைப் பார்க்கும் திறனோடு தொடர்புடையது. ஒருவரது மூளையில் இப்பகுதி செயலிழந்து விட்டால், அவரால் நிலையாக இருக்கும் பொருட்களை நன்கு பார்க்க முடியும். ஆனால், நகரும் பொருட்களை பார்ப்பதில் சிக்கல் ஏற்படும். இத்தகைய பார்வைக் குறைபாடு உடையவர்கள், பிரத்யேகமான சில பயிற்சிகளைச் செய்வதன் மூலம் மூளையின் பிற பகுதிகளைத் தூண்டி நகரும் பொருட்களையும் பார்க்க முடியும் என்று ஆய்வாளர்கள் நிரூபித்துள்ளனர். வருங்காலத்தில் மூளையின் எந்தப் பகுதியையும் பயிற்சிகளின் மூலம் எந்த வேலையையும் செய்ய வைக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.