என்ன இல்ல சென்னையில?
இன்று, சென்னைக்கு வயது 377!சென்னையை அறிமுகம் செய்ய, சென்ட்ரல் ரயில் நிலையத்தையும் 16 மாடி எல்.ஐ.சி. கட்டடத்தையும்தான் பழைய தமிழ் சினிமாக்களில் முதலில் காட்டுவார்கள். ஆனால், பெரிய பெரிய ஷாப்பிங் மால்களும் மென்பொருள் நிறுவனங்களும்தான் இன்று சென்னையின் அடையாளங்கள்! குதிரை வண்டிகள் ஓடிய சாலையில் வெளிநாட்டு கார்கள் தவழ்கின்றன; மருத்துவம், தொழில்நுட்பம் என எல்லா நவீன வசதிகளுடன் 'வந்தாரை வாழவைக்கும் சென்னை' நகரம் உருவான வரலாறு தெரியுமா?!தென்னிந்தியாவின் வாசலாக இருக்கும் சென்னையை, கி.பி. முதல் நூற்றாண்டிலேயே உலக வணிகர்கள் தேடி வந்துள்ளார்கள். ஆங்கிலேயர் கால்பதித்த 17ஆம் நூற்றாண்டிற்குப் பிறகுதான், சென்னையின் அடையாளங்கள் மாறத் தொடங்கின. போர்த்துகீசியர்கள், 16ஆம் நூற்றாண்டில் சென்னைக்கு வந்து, 1522ல் 'சாந்தோம்' துறைமுகத்தை நிறுவினார்கள். அவர்கள்தான் இந்தப் பகுதியை 'மெட்ராஸ்' என அழைத்தார்கள்.ஆகஸ்ட் 22, 1639ல் கிழக்கிந்திய கம்பெனியைச் சேர்ந்த பிரான்சிஸ் டே, ஆண்ட்ரூ கோகன் ஆகியோர் வெங்கடப்பர் என்பவரிடம் இருந்து நிலம் வாங்கி, செயின்ட் ஜார்ஜ் கோட்டையைக் கட்டினார்கள். வெங்கடப்பரின் தந்தை பெயர் சென்னப்பர். அவருடைய நினைவாகவே கோட்டைக்கு வடக்கே உள்ள ஊருக்கு 'சென்னைப் பட்டினம்' என்று பெயரிட்டார்கள்.இரண்டாம் ஜேம்ஸ் மன்னர், 1688ல் 'இந்தியாவின் முதல் நகராட்சி' என மதராஸ் பகுதியை அறிவித்தார். ராபர்ட் கிளைவ் தனது ராணுவத் தளமாக இந்த நகரைத் தேர்ந்தெடுத்து 'மதராஸ் மாகாணம்' என்று பெயரிட்டார்.சிறு சிறு கிராமங்களாக, ஏரிகளாக, தோப்புகளாக இருந்த பகுதிகள் ஒன்றிணைந்து முக்கியமான மாநகரமாக மாறி இருக்கும் சென்னை யாருக்குச் சொந்தம்?! சென்னை என்பது தமிழக மக்களால் மட்டுமல்ல, குஜராத்தி, ராஜஸ்தான், பீகார், ஒடிசா வங்காளம், பஞ்சாபி என எல்லாப் பகுதி இந்திய மக்களாலும் நிரம்பி இருக்கிறது. இந்தப் பன்முகம் கூட சென்னையின் ஒரு அடையாளம்தான்!சென்னை தினம் ஆகஸ்ட் 22* 'மதராஸ் மாகாணம்' என்றழைக்கப்பட்ட மாநிலம் 1969ல் 'தமிழ்நாடு' எனப் பெயர் மாற்றப்பட்டது.* மெட்ராஸ் என அழைக்கப்பட்டுவந்த நகரம் 1996 ஜூலை 17ல், 'சென்னை' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.* ஆகஸ்ட் 22, 1639ல் சென்னை உருவான தினம் 'மெட்ராஸ் டே' என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. பழைய கிராமங்களான மயிலை, திருவல்லிக்கேணி எல்லாம் ஆயிர வருட வரலாறு உண்டு.