எது தொற்றினால் நல்லது?
“நகரத்துக்குன்னு தனித்தன்மை ஏதாவது இருக்கா?” என்று கேட்டான் பாலு.“ஒவ்வொரு ஊருக்கும் ஏதாவது ஒரு தனிச் சிறப்பு அம்சம் இருக்கத்தான் இருக்கும். ஒரு பார்வையில பார்த்தா எல்லா கிராமமும் ஒரே மாதிரிதான் தோன்றும். போய் வசித்துப் பார்த்தா ஒவ்வொரு கிராமத்துலயும் வேறுபாடு இருக்கும். நகரமும் அப்படித்தான். சென்னை, பெங்களூரு, மும்பை, டில்லி, கொல்கத்தா எல்லாமே நகரங்கள்தான். ஆனா ஒண்ணு போல இன்னொண்ணு இல்ல.” என்றார் ஞாநி மாமா.“நம்ம சென்னையோட தனித்தன்மை என்ன?” என்றேன்.“ஒரு சாதாரண மழை வந்தாலே நிறைய தெருவுல தண்ணி தேங்கறதுதான் தனித்தன்மை.”என்றான் பாலு. “மாநகராட்சி ஒழுங்கா வேலை செஞ்சா அந்த தனித்தன்மை போயிடும்” என்றேன்.“எந்த நகரத்துக்கும் தனித்தன்மை அதுல வாழற மக்கள் கிட்ட இருந்துதான் வர முடியும். ஒருத்தருக்கொருத்தர் எப்படி நடந்துக்கறாங்க, பொது இடத்துல எப்படி இருக்காங்க, பிரச்னைன்னு வந்தா என்ன செய்யறாங்க, நகரத்தோட பொது விஷயங்கள்ல எதை ஆதரிக்கறாங்க இந்த மாதிரி அம்சங்களை ஆய்வு செய்துதான் ஒரு நகரத்தோட தனித்தன்மையை முடிவு செய்ய முடியும்.” என்றார் மாமா.“அதுக்கு ஏதாவது படிப்பு இருக்கா?” என்றேன்.“அர்பனிசம்னு ஒரு படிப்பு வெளிநாடுகள்ல இருக்கு. இது டவுன் ப்ளானிங் படிப்பு இல்ல. இதுல நகரத்தைத் திட்டமிட்டுக் கட்டறதுல தொடங்கி ஒரு நகர மக்களுடைய கலாசாரப் பழக்க வழக்கங்கள் வரைக்கும் எல்லாம் அடங்கும்.” என்றார் மாமா.“நல்லா இருக்கே. நான் ஸ்கூல் முடிச்சதும் அந்தப் படிப்பு படிக்கப் போறேன்.”என்றான் பாலு.“பெரிய கண்டுபிடிப்பாளர் ஆகப் போறேன்னு சொன்னியே. அது என்ன ஆச்சு?” என்று சிரித்தேன்.“கண்டுபிடிப்பாளர் ஆகறதுக்கு முழு நேரம் அதையே செய்யணும்னு அவசியம் இல்ல. வேற வேலை பார்த்துக்கிட்டு கூட கண்டுபிடிப்பாளரா இருக்கலாம். ஒரு நடிகை அப்படி இன்வெண்ட்டரா இருந்திருக்காங்க தெரியுமா?” என்றான் பாலு.ஆச்சரியமாக இருந்தது. இப்போது நாம் பயன்படுத்தும் வைஃபை,சி.டி.எம்.ஏ,ப்ளூடூத் தொழில்நுட்பங்களில் எல்லாம் அந்த நடிகை கண்டுபிடித்த கருவியின் கோட்பாடுகள் பயன்படுகின்றனவாம். அந்த நடிகையின் பெயர் ஹெடி லமார். ஆஸ்திரியாவில் பிறந்து அமெரிக்காவில் குடியேறியவர். இரண்டாம் உலக யுத்தத்தின்போது அவருக்குச் சுமார் 30 வயது. அதற்குள் நிறைய படங்கள் நடித்து முடித்துவிட்டார். அவருடைய முதல் கணவர் ஓர் ஆயுத வியாபாரி. அதனால் ஹெடி லமாருக்கு ஆயுதம், யுத்த தொழில்நுட்பம் என்றால் ஆர்வம் அதிகம். நீர் மூழ்கிக் கப்பல்களிலிருந்து செய்தி அனுப்பும் சிக்னல்களை வைத்து, அவை இருக்கும் இடத்தை எதிரிகள் கண்டுபிடித்து அழிக்கிறார்கள் என்று ஒரு செய்தியை லமார் படித்தார். எதிரிகள் கண்டுபிடிக்க முடியாத மாதிரி சிக்னல்களை அனுப்பும் கருவியை அவர் கண்டுபிடித்தார். ஒரே சிக்னலை மாறி மாறி பல அலைவரிசைகளில் அனுப்பினால், எந்த அலைவரிசையிலிருந்து வருகிறது என்று குழப்பம் ஏற்படும் என்ற அடிப்படையில் இந்தக் கருவியை லமார் தன் நண்பர் ஜார்ஜ் அந்தேலுடன் சேர்ந்து உருவாக்கினார். இதற்குக் காப்புரிமையும் பெற்றார்.“பாலு, அவங்க படம்லாம் நடிச்சு முடிச்சுட்டு அப்பறமாதான் இன்வெண்ட்டர் ஆகியிருக்காங்க. அதனால முதல்ல வேற ஏதாவது செய். அப்பறம் இன்வெண்ட்டலாம்.” என்றேன்.“நான் என்ன செய்தாலும் அது லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான பேருக்குப் பயன்படற மாதிரி இருக்கணும். அந்த மாதிரி ஒரு துறையிலதான் வேலை செய்யணும்” என்றான் பாலு.“ அப்ப நீ நிமோனியா சம்பந்தமாதான் ஏதாவது செய்யணும்” என்றார் மாமா. “நிமோனியா உலகத்துல 45 கோடி பேரைத் தாக்குது. அதுல குழந்தைங்க மட்டும் 15 கோடி. வருடத்துக்கு 40 லட்சம் பேர் அதுல செத்துப் போறாங்க. இந்தியால மட்டும் 4 கோடி 30 லட்சம் பேர் நிமோனியால பாதிக்கப்படறாங்க. அஞ்சு வயசுக்குள்ள செத்துப் போற குழந்தைங்கள்ல 95 சதவிகிதம் பேருக்கு நிமோனியாதான்.” என்றார் மாமா.“நிமோனியா டெங்கு மாதிரி ஒரு காய்ச்சல்தானே?” என்றேன்.“இல்லை. நிமோன் என்றால் லத்தீன் மொழியில் நுரையீரல் என்று அர்த்தம். நுரையீரல் பாதிப்புதான் நிமோனியா. மூச்சு திணறல், இருமல், காய்ச்சல் எல்லாம் இருக்கும். சில பாக்டீரியா, சில வைரஸ் ஆகியவற்றால் வருகிறது. இந்தச் தொற்று எந்த இடத்திலும் வரலாம். முன் எச்சரிக்கை என்பது நுரையீரல்களை ஆரோக்கியமாக வைத்திருப்பது. நல்ல மூச்சுப் பயிற்சி செய்து நுரையீரலை விரிவடைய செய்யலாம். தொற்று வராமல் இருக்க முக்கியமான முன் எச்சரிக்கை நடவடிக்கை எப்போதும் ஒழுங்காக கை கழுவுவது. நிமோனியாவுக்குத் தடுப்பூசிகள் இருக்கின்றன.” என்றார் மாமா.“நான் நிமோனியா விழிப்புணர்ச்சி ஏற்படுத்தப் போகிறேன்.” என்றான் பாலு.“அதற்கு முதலில் சக மனிதர்களிடம் பரிவு இருக்க வேண்டும். வெறுமே கடனே என்று பிரசாரம் செய்யக் கூடாது”என்றேன். “அதற்காகத்தான் உலக பரிவு தினம் கொண்டாடுகிறார்கள். அன்றைக்கு ஏதாவது ஒரு சக மனிதரிடம் பரிவு காட்டவேண்டும். சந்திக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு பிக் ஹக் கொடுங்கள். கட்டித் தழுவி அன்பை வெளிப்படுத்துங்கள் என்கிறார்கள்.” என்று மாமா சொன்னதும், “அய்யோ, ஏதாவது தொற்று வந்துவிட்டால்?”என்றான் பாலு.“அப்படி பயந்து உலகில் வாழவே முடியாது. ஒரு அறைக்குள் தனியே பூட்டிக் கொண்டு இருந்தால் கூட ஏதாவது வரும். மனிதர்கள் ஒருவருக்கொருவர் அன்பு காட்டுவது தொற்றினால் நல்லது.” என்றார் மாமா.குறைந்தபட்சம் இனி யாரை எதிரே சந்தித்தாலும் புன்னகையாவது செய்வது என்று சமரசமாக முடிவு செய்தோம்.வாலுபீடியா 1: உலக நகரியல் (அர்பனிசம்) நாள் - நவம்பர் 8உலக கண்டுபிடிப்பாளர் தினம் - நவம்பர் 10(நடிகை ஹெடி லமார் பிறந்த நாள்)உலக நிமோனியா விழிப்புணர்வு தினம் - நவம்பர் 12உலக பரிவு தினம் - நவம்பர் 13வாலுபீடியா 2: நிமோனியாவில் இறந்த பிரபலங்கள்: எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய், விஞ்ஞான எழுத்தாளர் கார்ல் சாகன், அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன், சிங்கப்பூர் அதிபர் லீ க்வான் யூ, கிரிக்கெட் வீரர் பிராட்மான்.