நான் யார்?
இளம் வயதில் இருந்தே தமிழ் மீது அதிகமான பற்று எனக்கு இருந்தது. ஆனால், நான் பிறந்த புதுச்சேரி, பிரெஞ்சுக்காரர்களின் ஆதிக்கத்தில் இருந்ததால் பிரெஞ்சு பள்ளியில்தான் சேர முடிந்தது. அதன் பின்னர், தமிழ்ப் பள்ளியில் சேர வாய்ப்பு கிடைத்ததால் எனக்கு விருப்பமான தமிழ் மொழியில் பாடங்களைக் கற்றேன். சிறு வயதிலேயே அழகான பாடல்களை எழுதும் திறன் பெற்றிருந்தேன். பள்ளிப் படிப்பை நன்கு கற்று 16ஆவது வயதில் புதுச்சேரி கல்லூரியில் சேர்ந்து தமிழ் அறிவை வளர்த்துக்கொண்டேன். விடா முயற்சியாலும் தேர்வில் முழு கவனம் செலுத்தியதாலும் 3 ஆண்டுகள் பயிலக்கூடிய இளங்கலைப் பட்டத்தை 2 ஆண்டுகளில் முடித்து முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்றேன். தமிழில் புலமை இருந்ததால் கல்லூரிப் படிப்பு முடிந்தவுடனே 1919ல் காரைக்கால் அரசினர் கல்லூரியில் தமிழ் ஆசிரியராகப் பணி கிடைத்தது. பழநி அம்மையார் என்பவரை 1920ல் திருமணம் செய்துகொண்டேன். மானசீக குருவாக சுப்ரமணிய பாரதியாரை ஏற்றுக்கொண்டு அவரது பாடலை நண்பனின் திருமணத்தில் பாடிப் பாராட்டுக்கள் பெற்றதோடு பாரதியாரின் நட்பும் கிடைத்தது. தந்தை பெரியார் மற்றும் பல அரசியல் தலைவர்களுடன் இணைந்து போராட்டங்களில் ஈடுபட்டுச் சிறைக்குச் சென்றேன். புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராக 1954ல் தேர்ந்தெடுக்கப்பட்டேன். பாண்டியன் பரிசு, குறிஞ்சித்திட்டு, குடும்ப விளக்கு, இருண்ட வீடு, அழகின் சிரிப்பு, தமிழ் இயக்கம், குயில், பெண்கள் விடுதலை போன்ற பல சிறந்த படைப்புகளைக் கொடுத்தேன். 'புரட்சி கவிஞர்' என்ற பட்டத்தை பெரியாரும் 'புரட்சிக்கவி' என்ற பட்டத்தை அறிஞர் அண்ணாவும் எனக்கு வழங்கினார்கள். தமிழ்நாடு அரசாங்கமும் ஆண்டுதோறும் ஒரு தமிழ்க் கவிஞருக்கு என் பெயரில் விருது வழங்கி வருகிறது.விடை: பாவேந்தர் பாரதிதாசன்