காந்தி ஏன் சட்டை அணியவில்லை?
பத்தாம் வகுப்பிற்குள் தமிழாசிரியர் நுழைந்தார். ஒரு மாணவனின் பெயரைச்சொல்லி எழுப்பினார். உடனே அவனும் எழுந்து நின்றான்.''கோபி, நீ உன் சட்டையைக் கழற்று'' என்றார்.''சார்....'' என்றான் அவன் அதிர்வுடன்.மற்ற மாணவ, மாணவியர் முகங்களிலும் அதிர்ச்சி.''இல்ல சார்; வேணாம் சார்'' அவன் கூச்சமும் தயக்கமுமாக நெளிந்தான்.''சட்டையைக் கழற்றுவதில் உனக்கென்ன பிரச்னை?'' ''தெரியலை, ஆனா வேணாம் சார்'' என்றான். வகுப்புத் தோழர்களும், தோழிகளும் தன்னையே உற்றுப் பார்த்துக்கொண்டிருப்பதை அவன் உணர்ந்தான்.எதற்காக ஆசிரியர் இப்படிச் சொல்கிறார் என்றெல்லாம் அவன் யோசிக்கவில்லை. ஆனால், அவர் சொன்னது அவனுக்கு அவமானமாக இருந்தது. வகுப்பில் இத்தனை பேர் இருக்க, தன்னை மட்டும் சட்டையைக் கழற்றச் சொல்வது எவ்வளவு பெரிய அவமானம்? அவன் முகம் இருண்டது. இன்னும் கொஞ்சநேரம் போனால் அழுது விடுவான் போல் தோன்றியது.ஆனால், ஆசிரியர் அதற்கு இடம்கொடுக்கவில்லை. அவனை உட்காரச் சொன்னார். மற்ற மாணவர்களைப் பார்த்து, ''உங்களில் யாருக்கு சட்டையைக் கழற்ற விருப்பமோ அவர்கள் எழுந்து நிற்கலாம்'' என்றார்.ஒருவரும் எழுந்து நிற்கவில்லை. வகுப்பறையே அமைதியாக இருந்தது.ஆசிரியரே பேசினார், ''உங்களில் யாருக்கும் சட்டையைக் கழற்ற விருப்பம் இல்லை; கூச்சம், அச்சம், அவமானம், மரியாதைக்குறைவுன்னு அதை நினைக்கிறீங்க இல்லையா?''ஆமாம் சார்'' மெல்லிய குரலில் மாணவர்கள் அதை ஆமோதித்தனர்.''ஆனால் நம் தேசத்தந்தை மகாத்மா காந்தி அப்படி நினைக்கலை. அவர் வெளிநாடு சென்று சட்டம் பயின்றவர். கோட்டு அணிந்து பழக்கப்பட்டவர். அப்படிப்பட்ட காந்தி, எதற்கு மேல் சட்டை இல்லாமல் இருந்தார்?''ஒரு சில மாணவர்களுக்கு விடை தெரிந்தாலும், ஆசிரியரே சொல்லட்டும் என்று அமைதியாக இருந்தனர்.''காந்தி ஒருமுறை தமிழ் நாட்டுக்கு சுற்றுப்பயணம் வரும்போது, நிறைய ஏழைகள், மேல் சட்டையில்லாமல் வேட்டி, துண்டு மட்டும் அணிந்திருப்பதைப் பார்த்தார். நாட்டில் நிறையப் பேர் சட்டை இல்லாமல் இருக்கும்போது, தனக்கு மட்டும் எதற்கு கோட்டு, சட்டை என்று அன்று முதல் சட்டை அணிவதைத் துறந்தார்....மெத்தப் படித்த அவர், தன் சட்டையைத் துறக்க எவ்வளவு தைரியம், மனஉறுதி இருந்திருக்க வேண்டும்?அதுவும் தனக்காக இல்லாமல், தன் நாட்டு மக்களின் நிலைக்காக அப்படி ஒரு முடிவுக்கு வருவதற்கு நிறைய தியாக மனப்பான்மை இருக்க வேண்டும். அப்படி இருப்பவரால் மட்டும்தான் அத்தகைய ஒரு செயலைச் செய்ய முடியும்.தன்னுடைய இந்தக் கருத்தை அவர் லண்டன் வட்ட மேஜை மாநாட்டிற்குச் செல்லும்போதுகூட மாற்றிக்கொள்ளவில்லை. மேல் சட்டையில்லாமல்தான் வெளிநாடு சென்றார்....''''அதற்காக மட்டும்தான் அவரை மகாத்மான்னு கொண்டாடுகிறோமா?'' யாரோ ஒரு மாணவன் கேட்டான்.''இல்லை, அவரின் அகிம்சை, சத்தியாகிரகப் போராட்டம், தீண்டாமை ஒழிப்பு, தேசவிடுதலைக்குப் பாடுபட்டதுன்னு நிறைய காரணங்களுக்காக அவரைக் கொண்டாடுகிறோம், தேசத்தந்தை என்று போற்றுகிறோம்....'' என்று முடித்தார் ஆசிரியர்.- இ.எஸ்.லலிதாமதி