உள்ளூர் செய்திகள்

கொசுவுக்கு மனித ரத்தம் பிடிப்பது ஏன்?

உலகில் எத்தனையோ உயிரினங்கள் இருக்க கொசுக்கள் மனிதர்களை மட்டும் தேடித்தேடிக் கடித்து ரத்தத்தை விரும்பி உறிஞ்சுகின்றன என்பது ஆச்சரியமான விஷயம்! யானை போன்ற விலங்குகள் மனித வாடையை பல அடி தொலைவில் நடமாட்டம் இருக்கும்போதே கண்டுபிடித்துவிடுகின்றன. நாம் கூட வாசனையை வைத்து உணவுகளைப் பற்றித் தெரிந்துகொள்கிறோம். கொசுக்களுக்கு ஏன் மனித ரத்தம் பிடிக்கிறது என்பதைப்பற்றி நியூயார்க் ராக்ஃபெல்லர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உயிரியல் ஆய்வாளர் 'லெஸ்லி வோஷல்' (Leslie Vosshall) தலைமையிலான குழு ஆய்வு செய்தது. இதன் முடிவுகள் ஆச்சரியமானவை. மனிதர்களின் உடலில் 'சல்கேடோன்' என்ற வேதியியல் நொதி, வியர்வைச் சுரப்புகளில் வெளிப்படுகிறது. மனிதர்களை நோக்கி கொசுக்களை ஈர்ப்பதில் இதுவே முக்கியப்பங்கு வகிக்கிறது. விலங்குகளின் ரத்தத்தைவிட மனித ரத்தத்தை நோக்கி ஈர்க்கப்பட்ட கொசுக்கள் தம் இனத்தைப் பெருக்குவதற்கான சகல ஏற்பாடுகளையும் மனிதர்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் அமைத்துக்கொள்ள இதுவே காரணம். விலங்குகளைப்போல தடித்த தோல் மனிதர்களுக்கு இல்லை என்பதாலும், மனிதர்கள் கூட்டம் கூட்டமாக வசிப்பதாலும் அவை மனிதர்களைத் தங்கள் உணவுக்கான முக்கிய காரணியாகத் தேர்ந்தெடுத்துக்கொண்டன. சுமார் 14 விதமான கொசுக்களின் மரபியல் கூறுகளை ஆராய்ந்து கொசுக்களுக்கும் மனிதர்களுக்குமான இந்தத் தொடர்பைக் கண்டறிந்துள்ளது இந்த ஆய்வுக்குழு. குறிப்பாக, 'Orco' (Codes for an Odor Receptor - கோட்ஸ் ஃபார் அன் ஆடர் ரிசப்டர்) என்ற மனித மரபணுக்கூற்றின் மூலம் இதை உறுதி செய்துள்ளனர். கொசுக்களின் மரபணுக்களில் மனித உடலில் வெளிப்படும் 'சல்கேடோன்' நொதி வாசனை பதிந்துள்ளதே கொசுக்கள் மனிதர்களைத் தேடி வருவதன் காரணம். முக்கியமாக, உலகம் முழுவதும் உள்ள டெங்குவைப் பரப்பும் 'ஏடிஸ் எஜிப்டி' (Aedes Aegypti) கொசுக்கள் மனிதர்களைக் கடித்து ரத்தம் உறிஞ்ச இந்த சுரப்பியின் வாசனையே காரணமாகிறது. மரபணு மாற்றம் மூலம் மனித உடலில் 'சல்கேடோன்' சுரப்பியின் வாசனையை மாற்றம் செய்ய முடியுமா என்பது குறித்தும் இந்த ஆய்வுக்குழு தனது ஆராய்ச்சியைத் தொடர்ந்து வருகிறது. அதில் வெற்றியடைந்துவிட்டால் எதிர்காலத்தில் கொசுக்களுக்கு மனித ரத்தம் பிடிக்காமல் போகிற நிலையும் வரக்கூடிய வாய்ப்புள்ளது.- ப.கோபாலகிருஷ்ணன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !