உள்ளூர் செய்திகள்

காட்டுயிர் கார்ட்டூனிஸ்ட்

“சிறுவயது முதலே எனக்கு, வன உயிரினங்கள் மீது ஆர்வம் அதிகம். நாக்பூரில் இருந்ததால, அடிக்கடி வனப்பகுதிக்குள் போக முடிஞ்சுது. பெற்றோர் எப்போதும் என் ஆசைக்குத் தடை சொன்னது இல்ல. வனத்துக்குள் போகும்போது நான் கேட்கும் கேள்விகளுக்கு அவங்களால பதில் சொல்ல முடியாது. இருந்தாலும் சளைக்காம கூட்டிக்கிட்டுப் போவாங்க. நான் அங்கு பார்த்தவற்றை வீட்டுக்கு வந்து கார்ட்டூன்களாக வரைவேன். நாளிதழ்களில் வரும் கார்ட்டூன் படங்கள் பெரும்பாலும் அரசியல் சார்ந்து இருக்கும். எனக்கு அந்த ஸ்டைல் பிடிச்சு இருந்தது. அதை ஏன் எனக்குப் பிடிச்ச விஷயத்தோட சேர்த்துச் செய்யக்கூடாதுன்னு தோணுச்சு. அப்படியே செய்ய ஆரம்பித்தேன்,” என நம்மிடம் சரளமாகப் பேசினார் ரோஹன் சக்கரவர்த்தி. 29 வயதாகும் இந்த இளைஞர்தான் இந்தியாவில் வனவிலங்குகளை, இயற்கைக் காட்சிகளை கார்ட்டூன்களாக வரைவதில் முன்னணியில் இருக்கிறார். இதுவரை சுமார் 600 காட்டுயிர் கார்ட்டூன்கள் வரைந்துள்ளார்.“சுற்றுச்சூழலையும் விலங்குகளையும் எப்படியெல்லாம் காப்பாத்தலாம்ங்கறதுதான் என் கார்ட்டூன்களோட அடிநாதம். இந்த மாதிரி கார்ட்டூன் வரைய சிறப்புப் பயிற்சியெல்லாம் தேவையில்லை. எந்த விஷயத்தையும் நல்லா கவனிக்கணும். நான் கார்ட்டூன் வரைய நிறைய விலங்குகள், சூழலியல், பறவைகள் குறித்த புத்தகங்கள், வீடியோக்கள் பார்ப்பேன். அதைத் தாண்டி, காடுகளில் நிறைய நேரம் செலவழிப்பேன். அங்க நடக்கிற விஷயங்களைக் குறிப்புகள் எடுத்துக்கொள்வேன்.எதையும் நேரா சொன்னா ஏத்துக்க மாட்டோம். அதையே கொஞ்சம் நகைச்சுவையோட சொன்னா, எல்லோர் மனசுலையும் நிக்கும். அதுதான் என்னோட டிரிக். நான் வரையும் கார்ட்டூன்களை எல்லாம், 'கிரீன் ஹியூமர்' என்ற வலைப்பதிவில் போடத் தொடங்கினேன். இதனால், நிறைய பேரை சென்றடைய முடிஞ்சது. இன்னிக்கு வெளிநாடுகளில் இருக்கும் காமிக்ஸ் பதிப்பாளர்கள் என்னோட வனவிலங்கு காமிக்ஸை வெளியிடறாங்க. இப்ப டபிள்யூ. டபிள்யூ. எஃப். உடன் இணைந்து ஒரு சுற்றுச்சூழல் பணித்திட்டங்களில் வேலை செய்கிறேன்” என்று முடித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !