உலகம் தாங்குமா?
“நான் வேறு பள்ளிக்கூடத்துக்குப் போகலாமா என்று யோசிக்கிறேன்” என்றான் பாலு. “ஏன் பாலு? ஆரம்பத்திலேயிருந்து இதே பள்ளிக்கூடத்துல படிக்கறது உனக்குப் போர் அடிக்குதா?” என்று கேட்டேன்.“அதெல்லாம் இல்லை. கிளாஸ்ல உட்காரவே இடம் இல்ல இந்த வருஷம்.” என்றான் பாலு.30 பேர் இருந்த வகுப்பில், புதிதாகப் பத்துப் பேரை சேர்த்துவிட்டார்களாம். ஆனால், புதிதாக ஐந்து டெஸ்க் போட இடம் இல்லை. இரண்டு டெஸ்க் போட்டு எல்லாரையும் 'அட்ஜஸ்ட்' செய்ய சொல்லியிருக்கிறார்கள். “நியாயப்படி இன்னொரு செக்ஷன் தொடங்கி, வகுப்புக்கு 20 பேராகப் பிரித்திருக்கலாம். அப்போது இன்னும் 20 பேரைக்கூட சேர்க்க இடம் இருந்திருக்கும்.” என்ற ஞாநி மாமா, “பாலு, வகுப்பில் நெரிசலுக்கே வேறு பள்ளிக்கூடம் போகலாம் என்கிறாய். நம் நாட்டில் இருக்கும் நெரிசலுக்கு என்ன செய்வாய்?” என்றார்.“அவ்வளவு நெரிசல் இல்லாத இன்னொரு நாட்டுக்குப் போய்விடுவேன். பெரியவன் ஆனதும் அப்படித்தான் செய்யப் போகிறேன்” என்று தன் லட்சியத்தைச் சொன்னான் பாலு.“எல்லா நாடும் நெரிசலாகிவிட்டால் என்ன செய்வாய்? வேறு கிரகத்துக்குப் போவாயா?” என்றேன். “அவ்வளவு சீக்கிரம் இந்த பூமி நெரிசலாகிவிடாது.” என்றான் பாலு. “நெரிசல் மட்டும் பிரச்னை இல்லை பாலு. மக்கள் தொகை அதிகமாக அதிகமாக, இயற்கைச் சூழல் பாதிக்கப்படும். மழை வெயில் எல்லாம் வழக்கமான அளவில் மாறிப்போகும். புவி சூடாகி, உணவு உற்பத்தி, தண்ணீர் அளவு எல்லாம் குறைந்துபோகும். அதுவும் சிக்கல்தானே.” என்றார் மாமா.“அவ்வளவு வேகமாகவா நம் மக்கள் தொகை அதிகரிக்கிறது?” என்று கேட்டான் பாலு. “சொன்னால் நம்ப மாட்டாய். ஐம்பதே ஆண்டுகளில் உலக மக்கள் தொகை இரண்டு மடங்குக்கு மேல் அதிகரித்திருக்கிறது.” என்றார் மாமா. 1950ல் 255 கோடி. 2000த்தில் 608 கோடி” என்றார் மாமா. வாலு மேலும் கொஞ்சம் தகவல்களை அள்ளித்தந்தது. 1900த்தில் 165 கோடியாக இருந்திருக்கிறது. 1950லிருந்து 1975க்குள்தான் மிகமிக அதிகரித்திருக்கிறது.'ஏன்?' என்றேன்.“அந்தக் காலகட்டத்தில்தான் பல நாடுகள் விடுதலையாகின. தொழிற்புரட்சியின் பயன் எல்லாருக்கும் கிடைக்க ஆரம்பித்தது. புதுப்புது தொழில்நுட்பங்கள் வரத் தொடங்கின. அதற்கு, நூறு இருநூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்ததைவிட வாழ்க்கைத்தரம் மேம்பட்டது. சிசு இறப்புவீதம் குறைந்தது. அதெல்லாம்தான் மக்கள் தொகை அதிகரிக்கக் காரணம்” என்றார் மாமா.“ஆனால், பூமியில் மக்கள் தொகை ஒரு சீராக எல்லா பகுதிகளிலும் இல்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும். இப்போது உலக மக்கள் தொகை சுமார் 730 கோடி. இதில் பெரும்பாலானவர்கள் இந்தியர்களும் சீனர்களும்தான். மொத்தத்தில்37 சதவிகிதம். இந்தியாவில் 130 கோடி என்றால், சீனாவில் இன்னும் 6 கோடி அதிகம். ஆனால், மீதி எல்லா நாடுகளும் முப்பத்தைந்து கோடிக்குக் கீழேதான்.!” என்றார் மாமா.“எல்லா நாடுகளுக்கும் மொத்த மக்கள் தொகையை சமமாகப் பகிர்ந்து விநியோகித்து நாம் குடியேற்றிவிட முடியாதா? அப்போது எல்லாருக்கும் எல்லாம் ஓரளவு கிடைக்கும் இல்லையா?” என்றேன். மாமா பலமாகச் சிரித்தார். “அதை இந்தியாவுக்குள்ளேயேகூட மாநிலத்துக்கு மாநிலம் நாம் செய்ய முடியாது. உலகம் முழுக்க, விதவிதமான மொழிகள், பண்பாடுகள். ஒவ்வொருத்தரும் அவரவர் உரிமைக்காகப் போராடுவார்கள். நீ சொல்வதுபோல செய்வதென்றால், நாடுகளே இருக்காது. ஒரே உலகமாகிவிடுவோம். உலக அரசாங்கம்தான். அதெல்லாம் சிலருடைய லட்சியக் கனவாக இருந்திருக்கிறது. ஆனால் நடக்கிற காரியம் இல்லை.” என்றார்.“அப்படிச் செய்ய உலகத்துக்கே ஒரு பிக் பாஸ் வேண்டும்” என்றான் பாலு. “எல்லா நாடுகளிலும் நல்ல தலைவர்கள் இருந்தாலே போதும். அவர்கள் ஒருவரோடொருவர் ஒத்துழைக்க வழி செய்வார்கள். இதுவரை அப்படி உலகத்தில் அமையவில்லை. ஒவ்வொரு வட்டாரத்திலும், தானே பிக் பாஸ், பிக் பிரதர் ஆகமுடியுமா என்று நினைத்தவர்கள்தான், ஹிட்லர் மாதிரி இருந்திருக்கிறார்கள். பொது மக்களை எப்படியெல்லாம் கண்காணிக்கலாம் என்று எல்லா தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தியிருக்கிறார்கள்.” என்றார் மாமா.'அது என்ன பிக் பிரதர்?' என்றேன். “ஜார்ஜ் ஆர்வெல் என்ற எழுத்தாளர் உருவாக்கிய பாத்திரம் அது. ஒரு வீட்டில் தம்பி தங்கைகளை எப்போதுமே பெரிய அண்ணன் கண்காணித்துக் கொண்டே இருப்பதாகத் தோன்றும். அதுவே, ஒரு நாட்டில் நடந்தால்? எல்லா மக்களையும் யாரோ கவனித்து கண்காணித்துக் கொண்டே இருக்கிறார்கள் என்ற பயத்தை ஏற்படுத்தி, ஆட்சி நடந்தால் அது எவ்வளவு கொடுமையாக இருக்கும். அப்படிப்பட்ட சூழல் எதிர்காலத்தில் ஏற்படும் என்ற அடிப்படையில், 1984 என்று ஒரு நாவலை ஆர்வெல் எழுதினார். அதில்தான் பிக் பிரதர் என்பதைப் பயன்படுத்தினார். அதே வார்த்தையை வைத்துக்கொண்டு அமெரிக்காவில் டி.வி. ஷோ நடத்தினார்கள். அதுதான் நம்ம ஊரில் பிக் பாஸ் ஆகிவிட்டது.”“நமக்குத் தேவை மிக் பிரதரோ பிக் பாஸோ அல்ல; ஈக்வல் பிரதர்தான் பாலு மாதிரி” என்றேன். “உலகத்துக்கே அது தேவைப்படுகிறது” என்றார் மாமா. “எதிர்காலத்தில் அது நான் தான்” என்றான் பாலு வழக்கம் போல. “ பார்த்தியா ஒரு நொடியில பிக் பிரதரா மாறிட்டியே” என்றேன். எல்லாரும் சிரித்தோம்.வாலுபீடியா 1: இந்தியாவின் மக்கள் தொகை 1,600ம் ஆண்டு வரை, வெறும் 10 கோடிதான். 1947ல் 35 கோடி. 1987ல் உலக மக்கள் தொகை 500 கோடி ஆன நாள் ஜூலை 11. அதுவே உலக மக்கள் தொகை நாளாக அனுசரிக்கப்படுகிறது.வாலுபீடியா 2: ஜார்ஜ் ஆர்வெலின் (1903 - -1950) நிஜப் பெயர் எரிக் பிளேய்ர். அவர் பத்திரிகையாளராகவும் கட்டுரையாளராகவும் புகழ் பெற்றவர். இறப்புக்குப் பின், நாவலாசிரியராகப் பெரும் புகழ் கிடைத்தது. அவர் அப்பா இந்தியாவில் கொஞ்ச நாள் வேலை பார்த்தார். ஆர்வெல் பிஹாரில்தான் பிறந்தார். கொடுங்கோல் அதிகாரத்தை எதிர்த்து எழுதிய ஆர்வெல், சிறிது காலம் பர்மாவில் காவல் துறை அதிகாரியாக வேலை செய்திருக்கிறார்.