உள்ளூர் செய்திகள்

ஆக்சிஜன் இல்லாமலா?

பெரும்பான்மை உயிரிகளுக்கு, உணவில் இருந்து ஆற்றல் பெறுவதற்கு ஆக்சிஜன் (Oxygen) அவசியம். சில ஒற்றைச்செல் நுண்ணுயிர்கள் ஆக்சிஜன் இல்லாமல் ஆற்றல் பெறும் வழிமுறைகளைக் கொண்டுள்ளன. பல செல் உயிரிகளில் ஆக்சிஜன் கண்டிப்பாகத் தேவை. ஆனால், இந்தக் கோட்பாட்டை இஸ்ரேலின் டெல் அவிவ் (Tel Aviv University) பல்கலைக்கழக ஆய்வாளர்களின் ஆய்வு அசைத்துப் பார்த்துள்ளது.சால்மன் மீன்களின் (Salmon fish) தசைகளில் ஒட்டுண்ணியாக இருக்கக்கூடிய 'ஹென்னேகுயா சால்மோனிகுலா' (Henneguya salmonicula) என்னும் பல செல் உயிரி, ஆக்சிஜன் சுவாசிக்கும் தேவையே இல்லாமல் இருப்பதைக் கண்டறிந்தார்கள். செல்களின் ஆற்றல் உருவாக்கும் அமைப்பான மைட்டோகான்ட்ரியா (Mitochondria) ஒரு பாக்டீரியாவாக இருந்து செல் உறுப்பாக மாறியது. அதனால் மைட்டோகான்ட்ரியா இருக்கும் எல்லா செல்களிலும், செல்லின் கருவுக்குள் இருப்பது போக தனி டி.என்.ஏ. கூறுகள் இருக்கும். சால்மோனிகுலா ஒட்டுண்ணியை ஆராயும்போது, அதன் செல்களில் செல்லுக்கு வெளியே மைட்டோகான்ட்ரியாவின் டி.என்.ஏ. கூறுகளே இல்லாமல் இருப்பதைக் கண்டறிந்தார்கள். அதனால் அந்த ஒட்டுண்ணியால் ஆக்சிஜனை சுவாசிக்காமலே இருக்க முடியும். இந்த ஒட்டுண்ணி, ஜெல்லி மீன்கள், கடற்சாமந்திகள் (Sea anemone), பவளப்பாறைகள் (Coral) ஆகிய உயிரிகளைக் கொண்ட குடும்பமான நிடாரியா (Cnidarians) என்னும் குடும்பத்தைச் சேர்ந்தது. ஆனால், அதன் ஒட்டுண்ணி வாழ்முறையால் பிற நிடாரியா உயிரிகள் போன்று அல்லாமல், சால்மன் மீனின் உடலுக்குள்ளேயே தன் வாழ்க்கைச் சுழற்சியை முடித்துக் கொள்கிறது.முதல்முறையாக ஒரு பல செல் உயிரி, ஆக்சிஜனைச் சுவாசிக்கும் இயல்பை இழந்திருப்பதைக் கண்டுபிடித்திருப்பது பரிணாமவியலில் பல முக்கிய புரிதல்களை ஏற்படுத்தியுள்ளது. பிற கோள்களின் உயிரிகள் கூட இம்மாதிரி இருக்கலாம் என்று அறிஞர்கள் யூகிக்கின்றனர்.- ராமன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !