வார்த்தை விளையாட்டு நாவல்
ஒரு மொழியில் அதிகம் பயன்படுத்தப்படும் எழுத்தைத் தவிர்த்து வாக்கியங்கள் எழுத முடியுமா? முயன்றால், நிச்சயம் ஒரு சில வார்த்தைகள் கொண்ட, ஓரிரு சொற்றொடர்களை எழுதலாம். ஆங்கில மொழியில், அதிகம் பயன்படுத்தப்படும் எழுத்து, E. இதன் தோற்ற விகிதம், 12.70 சதவீதம். அதாவது, எட்டு எழுத்துகள் பயன்படுத்தப்பட்டால், அவற்றில் ஓர் எழுத்து 'E' ஆக இருக்கும். எர்னெஸ்ட் வின்சென்ட் ரைட் (Ernest Vincent Wright) என்ற அமெரிக்க எழுத்தாளர், பல வருடங்கள் முயற்சித்து ஒரு பெரிய சாதனையை நிகழ்த்தினார். 'E' என்ற எழுத்தைப் பயன்படுத்தாமல் 50,000 வார்த்தைகள் கொண்ட, ஒரு முழு நீள நாவலை எழுதினார். காட்ஸ்பி (Gadsby) என்ற அந்த நாவல், 1939ஆம் ஆண்டு வெளிவந்தது. கதாநாயகன் ஜான் காட்ஸ்பியும், அவர் உருவாக்கும் ஒரு இளைஞர் படையும், அழிவின் விளிம்பில் இருக்கும் ஓர் ஊரை மீட்பதுதான் கதை. டைப் ரைட்டரில் இருக்கும் 'E' எழுத்துக்குரிய பொத்தானைப் பயன்படுத்த முடியாத அளவுக்கு, அதைக் கீழே அழுத்திக் கட்டிவிட்டு, நாவலைத் தட்டச்சு செய்ததாக, நாவலின் முன்னுரையில் ஆசிரியர் சொல்லி இருக்கிறார். ஆங்கிலத்தில் இறந்த காலத்தைச் சுட்டும் வினைச்சொற்கள் பெரும்பாலும் 'ed' என்ற விகுதியைக் கொண்டிருக்கும் அல்லவா? அதைப் பயன்படுத்தாமல் தவிர்த்ததுதான், தனக்கு மிகவும் சவாலாக இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 'looked' என்பதை 'did look' என்றும் சொல்லலாம்தானே! அப்படித்தான் சமாளித்திருக்கிறார். இருந்தாலும், 'e' யைப் பயன்படுத்தாமல், அவர் நாவல் எழுதிய விதம், வாசிக்கும்போது உறுத்தவில்லை என்று அறிஞர்கள் சொல்கிறார்கள். எப்படி எழுதப்பட்டு இருக்கும் என்ற உங்கள் ஆர்வம் புரிகிறது. உங்களுக்காக நாவலின் முதல் வாக்கியம் மட்டும் கொடுத்துள்ளோம். 'If youth, throughout all history, had had a champion to stand up for it; to show a doubting world that a child can think; and, possibly, do it practically; you wouldn't constantly run across folks today who claim that 'a child don't know anything'.இப்படிக் குறிப்பிட்ட எழுத்துகளை, தவிர்த்து எழுதப்படும், எழுத்து வடிவத்துக்கு ஆங்கிலத்தில் 'லிப்போகிராம்' (Lipogram) என்று பெயர். இப்போது நமக்குள் ஒரு குட்டி சவால்!ஒரு வாக்கியத்தைப் பாருங்கள்...'அடியேனின் அம்மா எனக்கு அடிக்கடி அன்புடன் அறிவுரை சொல்வார்' இதை 'அ' என்கிற எழுத்து வராமல் எழுத வேண்டும். முடியுமா? முயற்சிக்கலாம்.'என் தாயார் எனக்கு, சந்தர்ப்பம் வரும்போதெல்லாம் பிரியமாக உபதேசம் செய்வார்.' ஓரளவு ஓகேவா?