உலகின் மிகப்பெரிய ஒலி, ஒளிக் காட்சிகள்
கேரளத்திலுள்ள இடுக்கி அணைக்கட்டின் சுவர்களில், உலகின் மிகப்பெரிய லேசர் ஒலி, ஒளிக் காட்சிகளை அமைக்க கேரள அரசு திட்டமிட்டுள்ளது. மூணாறு, தேக்கடி போன்ற இடங்கள் ஏற்கெனவே சுற்றுலா தலங்களாக விளங்குகின்றன. இடுக்கி அணையின் 500 X 400 அடி அளவுள்ள பிரம்மாண்டச் சுவரில், இந்த காணொளிக் காட்சி அமைக்கப்பட உள்ளது. இதற்கென ரூ.26 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஒரே சமயத்தில், சுமார் 1,000 பேர் வரை அமரக்கூடிய திறந்தவெளி அரங்கமும் கட்டப்பட இருக்கிறது. இதன் அருகிலேயே 2 ஏக்கர் பரப்பளவில் முழுவதும் கண்ணாடியாலான நீர்வாழ் உயிரினங்களின் அருங்காட்சியகம் உருவாக உள்ளது.கேரள மின் வாரியமும், சுற்றுலா வளர்ச்சித் துறையும் இணைந்து, இந்தத் திட்டங்களை உருவாக்கி வருகின்றன. சுற்றுலா பயணிகளுக்கான தங்குமிடங்கள், கேபிள் கார்கள் போன்ற வசதிகளும் அமைக்கப்பட உள்ளன. இது நிறைவேற்றப்பட்டால், உள்ளூர் சுற்றுலா பயணிகள் மட்டுமல்லாது, உலக அளவில் இருந்தும் சுற்றுலா பயணிகள் நிறையப்பேர் வருவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.