UPDATED : ஏப் 12, 2024 05:34 PM | ADDED : ஏப் 12, 2024 04:10 PM
நடந்து கொண்டு இருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தை கலகலப்பாக்குபவர்கள் கலைஞர்கள்தான்.அதிலும் பிரதமர் மோடி வருகிறார் என்றால் கரகம்,காவடி, செண்டை மேளம், காளி நடனம், மயில்நடனம் என்று பல்வேறு நடன கலைஞர்களின் பங்களிப்பு இருக்கிறது. கடந்த வாரம் பிரதமர் சென்னை பாண்டி பஜார் ரோடு ஷோவில் கலந்து கொண்ட போது அவரை வரவேற்கும் விதத்தில் மயில் நடனமாடிய கலைஞர்கள் நடனம் பார்வையாளர்களை பலரையும் கவர்ந்தது. பல்வேறு கடவுளர்களின் உருவங்கள் தரித்து நடனமாடியவர்களின் நடனமும் ஆவேசமாக இருந்தது.
முதல்வர் ஸ்டாலின் வருகிறார் என்றால் கட்டாயம் மஞ்சள் துண்டு அணிந்த கருணாநிதி வேடமிட்டு ஓருவர் முன் சென்று வாக்கு கேட்பார்., ஆனால் இவரை மிஞ்சும் வகையில் அமைச்சர் மஸ்தான் வாக்காளர்களுக்காக வடை சுடுவது, அவர்களுக்கு ஐஸ் ஊட்டிவிடுவது என்று எல்லா வேலைகளையும் செய்து காமெடி செய்கிறார்.இபிஎஸ் என்றால் இருக்கவே இருக்கிறார்கள் எம்ஜிஆர்.,ஜெயலலிதா வேடமிட்டு நடனமாடும் கலைஞர்கள்.தேமுதிக..வினருக்கு விஜயகாந்த் வேடமிட்டவர்கள் நன்றாக கைகொடுக்கின்றனர்.
ஒபிஎஸ்க்கு இப்போதைக்கு பலாப்பழ சின்னத்தை கொண்டு செல்வதே பெரும்பாடாக இருக்கிறது ஆகவே கலைக்கு கொஞ்சம் பஞ்சம்தான்.கம்யூனிச மேடையில் எப்போதும் போல தப்பாட்ட கலைஞர்கள் இடம் பெற்றுவிடுகின்றனர்.மொத்தத்தில் இந்த தேர்தலில் நமது நாட்டுப்புற கலைஞர்கள் பிசியாகவே இருக்கின்றனர் வாய்ப்பும் வருகிறது வருமானமும் வருகிறது.வாங்கிய காசுக்கு வஞ்சனையில்லாமல் நடனமாடி மக்களை கலகலப்பாக்கியும் வருகின்றனர்.