UPDATED : ஜூலை 08, 2024 04:35 PM | ADDED : ஜூலை 08, 2024 04:32 PM
ஒவ்வொரு மாநிலத்திலும் நடக்கும் ஒவ்வொரு திருவிழாவிற்கும் ஒரு விசேஷம் உண்டு.
தெலுங்கானா மாநில தலைநகரில் உள்ள கோல்கொண்டா கோட்டையில் நேற்று நடந்த 'கோல்கொண்டா போனலு திருவிழா' இந்தப் பகுதியில் வெகுபிரசித்தமாகும்.
ஆம் நுாற்றாண்டில் ஹைதராபாத்தில் பரவிய பிளாக் நோயை கட்டுப்படுத்தக் கோரி மகாகாளியிடம் சிறப்பு வேண்டுதல் வைத்தனர் அந்த வேண்டுதல் நிறைவேறியதும் மிகப்பெரிய அளவில் அன்னதானம் நடத்தி அம்மனை அலங்கரித்து அம்மனின் கருணைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் வழிபாடு செய்தனர்.
அந்தப் பழக்கம் அன்று தொட்டு இன்று வரை நடக்கிறது.
அதிகாலை ஐந்து மணி முதலே பக்தர்கள் கோல்கொண்டா கோட்டையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருக்கும் அம்மனை தரிசிக்க வருகின்றனர்.விரதமிருக்கும் பக்தர்கள் புதுப்பானையில் சமைத்து அந்த உணவை எடுத்துக் கொண்டு வந்து அம்மனுக்கு சமர்ப்பித்து வழிபாடு செய்கின்றனர்.அப்படி வரும் பெண்கள் சிலருக்கு அருள் வந்து ஆடுவதும் சாதாரணமாக நடக்கும்.
விழாவிற்கு சிறப்பு சேர்க்க பொட்டு ராஜூக்கள் என்று அழைக்கப்படும் நாட்டுப்புற நடனக்கலைஞர்கள் கையில் சாட்டையுடன் வண்ணம் பூசிய உடம்புடன் மேளதாளத்திற்கு ஏற்ப ஆவேச நடனமாடியபடி வருகின்றனர்.
நேற்று கோல்கொண்டாவில் துவங்கிய இந்தப் போனலு திருவிழா அம்மன் இருக்குமிடங்களில் எல்லாம் அமர்க்களமாக தொடர உள்ளது.-எல்.முருகராஜ்.