UPDATED : செப் 15, 2026 05:20 PM | ADDED : செப் 15, 2026 05:18 PM
திருமலையில் பிரம்மோற்சவத்திற்கான புனித விதைத் தெளிப்புச் சடங்கான 'அங்குரார்ப்பணம்' விமரிசையாக நடைபெற்று முடிந்தது.இந்த ஆண்டுக்கான வருடாந்திர பிரம்மோற்சவம் செப்டம்பர் 15 முதல் 23 வரை நடைபெறவுள்ளது.இச்சடங்கின் ஒரு பகுதியாக, ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியின் படைத்தளபதியான ஸ்ரீ விஷ்வக்சேனர், பிரம்மோற்சவ ஏற்பாடுகளை மேற்பார்வையிடும் வகையில் நான்கு மாட வீதிகளில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டார். யாகசாலையில் பூமிதேவிக்கு சிறப்புப் பிரார்த்தனைகள் செய்யப்பட்டு, புனித மண்ணில் நவதானியங்கள் விதைக்கப்பட்டன.கருட சேவை நாளன்று அன்னப்பிரசாத விநியோகம் 38 சதவீதமும், ஸ்ரீவாரி பிரசாதம் 30 சதவீதமும், குடிநீர் மற்றும் பானங்கள் 50 சதவீதமும் உயர்த்தப்படும். ஆந்திர பிரதேச அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 500 கூடுதல் சேவைகள் உட்பட மொத்தம் 3,100 பேருந்து நடைகள் இயக்கப்படும்.செவ்வாய்க்கிழமை மாலை 6:21 மணி முதல் 6:35 மணிக்கு இடைப்பட்ட சுப மீன லக்னத்தில் துஜாரோஹணம் (கொடியேற்றம்) நடைபெறவுள்ளது. ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு மாநில அரசின் சார்பில் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமிக்கு பட்டு வஸ்திரங்களைச் சமர்ப்பிப்பார்.செப்டம்பர் 16 அன்று, பக்தர் அனுபவ மையம் , எஸ்பி அருங்காட்சியகம் , மின்சாரப் பேருந்துகள், நந்தகம் செயலி மற்றும் பக்தர்களுக்கான குழு காப்பீட்டுத் திட்டம் ஆகியவற்றை முதல்வர் தொடக்கி வைக்கவுள்ளார்.அங்குரார்ப்பணம் என்பது மங்களகரமான விதைகளை விதைப்பதைக் குறிக்கிறது, இதுவே பிரம்மோற்சவக் கொண்டாட்டங்களின் தொடக்கமாகும். வேத மந்திரங்கள் மற்றும் புனிதச் சடங்குகளுக்கு இடையே சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு நடத்தப்படும் இச்சடங்கு, பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெற முப்பது முக்கோடி தேவர்களின் ஆசிகளையும் பெற நடத்தப்படுகிறது.