UPDATED : பிப் 29, 2024 03:36 PM | ADDED : பிப் 29, 2024 03:34 PM
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று மீனாட்சி-சுந்தரேசுவரரை தரிசித்துவிட்டுச் சென்றுள்ள பிரதமர் மோடி,தனது எக்ஸ் வலைத்தளத்தில் மீனாட்சி அம்மனை தரிசித்தது எனது பாக்கியமே என்று குறிப்பிட்டுள்ளார்.
வழக்கமாக டில்லியில் இருந்து தமிழகம் வரும் பிரதமர் போன்ற விஐபிக்கள் ஒரு விழாவில் மட்டுமே பங்கேற்பர் ஆனால் பிரதமர் மோடி பல நிகழ்வுகளில் உற்சாகம் குறையாமல் பங்குகொண்டார்.
திருவனந்தபுரத்தில் பெரிய விழாவில் கலந்து கொண்டு அங்கு இருந்து கோவை சூலுார் வந்து, சூலுாரில் இருந்து பல்லடத்தில் நடைபெற்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் யாத்திரை நிறைவு விழாவில் கலந்து கொள்ள ஹெலிகாப்டரில் பறந்துவந்தார்.
ஹெலிகாப்டரை விட்டு இறங்கியவர் நேராக மேடைக்கு செல்லாமல், திறந்தவேனில் ஏறி மக்களைப் பார்த்தபடி மக்களுக்கு நடுவே வலம் வந்தபிறகே மேடைக்கு சென்றார்.,அங்கு நீண்ட நேரம் ஒரு எழுச்சி உரை நிகழ்த்திவிட்டு அங்கு இருந்து மதுரைக்கு பறந்தவர் மதுரையில் மாலையில் நடைபெற்ற சிறு குறு தொழில் அதிபர்கள் மாநாட்டில் பங்கு கொண்டார்.
அதன்பிறகு அவர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு இரவு 7:32 க்கு சென்றவர் இரவு 8:03 வரை கோவிலுக்குள் இருந்து கடவுளர்களை தரிசித்து பின் சுற்றிப்பார்த்துவிட்டு திரும்பினார். நெற்றியில் திருநீறு குங்குமம் துலங்க திரும்பியவரை இருபுறமும் திரண்டு நின்ற பொதுமக்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர்.அன்று மதுரையில் ஒய்வு எடுத்துவிட்டு டில்லி திரும்பியவர் தமிழக மக்களின் அன்பிர்க்கு நிறைய நன்றி செலுத்தவேண்டியுள்ளது, அம்மனை தரிசித்தது என பாக்கியமே என்றும் குறிப்பிட்டுள்ளார்.-எல்.முருகராஜ்