எதுவும் நிரந்தரமில்லை; இதுவும் கடந்துபோகும் என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மை. ஆனால், அந்த உண்மையே நம் மனதில் நிரந்தரமாக தங்க மறுக்கிறது. தேவைக்கு அதிகமாக என்பதையும் தாண்டி, பன்மடங்கு அதிகமாக பணத்தை தவறான வழியில் சேர்த்துக் குவித்து வைத்து சிலர், சிறைச்சாலையில் நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கின்றனர்.சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அல்லது தவறான ஆட்களின் முறையற்ற வழி நடத்தல் காரணமாக இழப்பைச் சந்தித்து, கடன் தொல்லைக்கு ஆளானவர்கள், முயற்சித்தால், நிலைமை மாறுவதற்கு வாய்ப்பிருக்கிறது அல்லது தவிர்க்க முடியாதபோது எளிய வாழ்க்கையை ஏற்றுக்கொண்டு வாழ வழியிருக்கிறது என்பதையும் புரிந்து கொள்ளாத கோழைகள், தவறான முடிவுக்கு போகின்றனர். பதவியும், பகட்டும், காசும், பணமும், படைபலமும் சாசுவதம் என்று எண்ணி, அவற்றை அடைவதற்கு எந்த எல்லைக்கும் போகும் பலர், இறுதியில் கிடைக்கும் அவமானத்திற்கு, பிறரைக் குற்றம் சொல்லித் தப்பிக்க முயற்சிக்கின்றனர்.வரி கட்டாமல் பதுக்கி வைத்தவன் பணத்தை, அமலாக்கத்துறை அள்ளிச் செல்கிறது; கடன் தவணையை செலுத்தவில்லை என்பதற்காக, நடுத்தர வர்க்கத்தின் உடைமைகளை, நிதி நிறுவனங்கள் அள்ளிச் செல்கின்றன.இதில், எதைப்பற்றியும் கவலைப்படாமல், சாலையோர நடைபாதை ஏழைகளின் வாழ்க்கைப் பயணம், இனிதே நடந்து கொண்டிருக்கிறது. இந்த மிகப்பெரிய ஏற்றத்தாழ்வை சமன்படுத்துவது தான் தங்களின் ஒரே லட்சியம் என்று சொல்லி, மக்களை ஏமாற்றும் அரசியல்வாதிகள், தங்கள் பைகளை நிரப்பிக் கொண்டிருக்கின்றனர்.டைனமைட் என்ற வெடி பொருளைக் கண்டுபிடித்த ஆல்பிரட் நோபல், பல அரிய கண்டுபிடிப்புகளுக்கு காரணமானவராக இருந்தாலும், வெடிபொருள் கண்டுபிடிப்பே அவருக்கு பணத்தையும், புகழையும் பெற்றுத் தந்தது.அவர் வெடிபொருளைக் கண்டுபிடித்ததன் நோக்கம் பாறைகளை சுலபமாக உடைத்து சாலைகளையும், கால்வாய்களையும் அமைக்க உதவுவதுதான். ஆனால் அது தவறாகப் பயன்படுத்தப்பட்டு, பல உயிர்களின் அழிவுக்கு காரணமானது என்பதால், அவர் உயிரோடு இருந்தபோதே அவரது தம்பி இறந்ததை, அவரே இறந்து விட்டதாக செய்தி வெளியிட்டது, பிரான்ஸ் பத்திரிகை ஒன்று. 'மரணங்களின் வியாபாரி மறைந்தார்' என்று தலைப்பு கொடுத்திருந்தது. அதைக் கண்ட நோபல், மனம் நொந்து, தான் ஈட்டிய பணம் முழுதையும், தர்மகாரியங்களுக்கு எழுதி வைத்து, தன் பெயரில் ஒரு பரிசை ஏற்படுத்தி, சமூக நலன் சம்பந்தப்பட்ட கண்டுபிடிப்புகளுக்கு காரணமானவர்களுக்கு வழங்குமாறு கூறி, மறைந்தார். இன்றோ, உயிருடனிருக்கும்போதே ஊழல் பெரிச்சாளி என்று பெயர் வாங்கினால் கூட உதறித்தள்ளி, 'அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா' என்று, கவுண்டமணி ஸ்டைலில் பதில் கூறி, அனைத்து வெட்கத்தையும் துடைத்துத் துார எறிகின்றனர்.நேர்மையற்ற பலர் நடுவில் நேர்மையான சிலர், கேலிக்குரியவர்களாக இருக்கின்றனர்; வேடிக்கையாகப் பார்க்கப்படுகின்றனர்.செல்வாக்குமிக்க ஊழல் பேர்வழிகள் மீது போடப்படும் வழக்குகள், முன்னுரிமை கொடுத்து விசாரிக்கப்பட்டு, பெரும்பாலும் விடுதலையில் முடிகின்றன; சாமானியர்களின் வழக்குகள் தான் வருடக்கணக்கில் நகர்ந்து கொண்டிருக்கின்றன.'விரகர் இருவர் புகழ்ந்திட வேண்டும்; விரல்நிறைய மோதிரங்கள் வேண்டும்; அரையதனில் பஞ்சேனும் பட்டேனும் வேண்டும்; அவர்தம் கவிதை நஞ்சேனும் வேம்பேனும் நன்று' என்று பாடினார் ஔவையார்.'கவிஞனுக்கு அருகே இருவர் அமர்ந்து கொண்டு, 'ஆஹா... ஓஹோ...' என்று புகழ்ந்தபடியும், விரல்கள் முழுதும் தங்க மோதிரங்கள் அணிந்து கொண்டும், இடுப்பிலே பருத்தியாலும் பட்டாலும் செய்யப்பட்ட வஸ்திரங்களை உடுத்திக் கொண்டும், பகட்டோடு இருக்கும் ஒரு கவிஞனது கவிதை, நஞ்சைப் போல கேடு விளைவிக்கக் கூடியதாக இருந்தாலும், வேம்பைப் போல கசப்பாக இருந்தாலும் அந்த கவிதை அருமையிலும் அருமை என்று, இந்த கேடுகெட்ட உலகம் போற்றும்' என்பது தான் இந்தப் பாடலின் பொருள்.என்றைக்கும் ஏழைச்சொல் அம்பலமேறாது. எங்காவது ஒரு சாமானியரின் குரல் மதிக்கப்படுகிறது என்றால், அவர் ஊடகங்களால் துாக்கிப் பிடிக்கப்பட்டிருக்க வேண்டும் அல்லது அவரது கோரிக்கையை கையிலெடுத்தால், நாம் பிரபலமடைவோம் என்று தெரிந்தால் மட்டுமே, உயர் பொறுப்பில் இருப்பவர்களும், நீதிபதிகளும் தங்கள் கவனத்தை திருப்புகிறார்கள், ஒரு சில விதிவிலக்குகள் நீங்கலாக.கொலைகள், தற்கொலைகள், அலுவலக வளாக தீக்குளிப்புகள் எல்லாம், வேறு வழியில்லாத காரணத்தால், பாதிக்கப்பட்டவர்கள் எடுக்கும் கோர முடிவுகள்.தந்தையையும் தாயையும் கவனிக்காமல் விட்ட காலம் போய், கொலை செய்யும் காலம் வந்துவிட்டது. பெற்ற தாயே குழந்தைகளைக் கொல்லும் கொடுமையும் அதிகமாகி வருகிறது. இப்படி ஒரு சூழ்நிலையை இந்த சமுதாயத்தில் உருவாக்கி விட்டிருப்பதற்காக, ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் அரசியல்வாதிகளும், உயர் பதவியில் அமர்ந்து மரியாதையோடு கூடிய சுகத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிற அதிகாரிகளும், நீதித்துறையும் வருத்தப்பட வேண்டும்.ஒரு சிறுவன் பூனை ஒன்றின் வாலைப் பிடித்துக் கொண்டிருக்க, அந்த பூனை, தன்னை விடுவித்துக்கொள்ள போராடிக் கொண்டிருந்தது. அதைப் பார்த்த ஒரு முதியவர், 'ஏன்டா தம்பி அந்த பூனையைப் பிடித்து இழுத்துக் கொண்டிருக்கிறாய்?' என்று கேட்டார்.'நல்லா பாரு தாத்தா... நான் வெறுமனே அதன் வாலைப் பிடித்துக் கொண்டுதான் இருக்கிறேன்; அதுதான் இழுத்துக் கொண்டிருக்கிறது' என்றானாம் அந்த சிறுவன்.இப்போது, அந்த பூனையின் நிலையில் மக்களும்; சிறுவனைப் போல அரசும், அரசு அதிகாரிகளும்!'எனது உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது' என ஒருவர் மனு கொடுத்தால், அவர் கொலையுண்ட பிறகு தான், மனு வெளி உலகுக்கு தெரிகிறது; கண்டுபிடிக்க எட்டு தனிப்படைகள் அமைக்கப்படுகின்றன.ஒரு திரைப்படத்தில், அத்திப்பட்டி கிராமத்துக்கு தண்ணீர் கிடைக்கவில்லை என்று கவலைப்படும் அதிகாரியிடம், 'அதை விடுங்க... அமைச்சர் வீட்டுக்கு தண்ணி வந்துதான்னு பாருங்க' என ஒரு அதிகாரி சொல்வார். இன்று, அது தான் நம் மாநிலத்தின் நிலை.ஊடகங்களிலும் பெரும்பாலானவை, சாமானியர்களின் பிரச்னைகளை அலசி, ஆராய்ந்து நேரத்தை வீணடித்து, உயர் பொறுப்பில் இருப்பவர்களுடைய பகைமையையும், வெறுப்பையும் சம்பாதித்துக் கொள்ள விரும்புவதில்லை. பிரபலமடைந்த முக்கிய நபர்கள், ஒருவரை ஒருவர் விமர்சித்துக் கொள்வதை, மாறி மாறி வெளியிட்டு, பரபரப்பான சூழ்நிலையை உருவாக்குகின்றன. மக்களும், நகைச்சுவை நாடகங்கள் போல், தங்களின் துன்பத்தை மறந்து, அவற்றை ரசிக்க ஆரம்பித்து விட்டனர்.அரசு, அரசு அதிகாரிகள், தங்களுக்குப் பிடிக்காத அரசியல்வாதிகளை விமர்சிக்கும் தனிநபர்கள், சமூக அக்கறையோடு அதைச் செய்யாமல், பலரையும் கவர்ந்திழுக்க வேண்டும் என்ற நோக்கில், மிகைப்படுத்தி பேசுவது, தகாத வார்த்தைகளை உபயோகிப்பது என்ற ரீதியில் செயல்படுகின்றனர். மக்களும் அது சரி தானோ என்ற மனப்பாங்குக்கு வந்து, அதை பாராட்டி புளகாங்கிதமடைகின்றனர்.இப்படி நடக்கும் தவறுகளையும், ஊழல்களையும் விசாரிப்பதற்கே, அரசு அதிகாரிகளின் நேரம் அதிகமாக செலவிடப்படுகிறது. அதில் ஈடுபட்டிருக்கும் அதிகாரிகளுக்கு, சாதாரண மக்களின் பிரச்னைகளெல்லாம் மிக அற்பமாகத் தோன்றுகின்றன.ஆட்சியின் ஒரு அங்கமாக இருந்த அமைச்சர் ஒருவரால், பாமர மக்களை ஏமாற்றி பல கோடிகள் சுருட்ட முடிகிறது என்றால், உளவுத்துறை என்ன செய்துகொண்டிருந்தது? அவரைச் சுற்றியிருந்த அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருந்தனர்?எம்.ஜி.ஆர்., முதல்வராக இருந்தபோது, உளவுத்துறை அதிகாரி மோகன்தாசை திடீரென தலைமைச் செயலகத்தில் உள்ள தன் அறைக்கு அழைத்தார். அவர் நுழைந்த உடனேயே, 'அப்ப நாம போகலாமா?' என மோகன்தாசிடம் எம்.ஜி.ஆர்., கேட்டார். குழப்பத்துடன் மோகன்தாஸ் புறப்பட்டார்; கார் கடற்கரை சாலையில் செல்லும்போது, காரணத்தைக் கேட்டார் மோகன்தாஸ். எம்.ஜி.ஆர்., சிரித்தபடியே, 'நீங்கள் வந்தபோது என்முன் அமர்ந்திருந்த அமைச்சர்கள் நாலு பேர் மீதும் ஏகப்பட்ட புகார்கள். அவர்களை அழைத்து எச்சரித்திருக்கிறேன்.இப்போ நான் உங்களுடன் சேர்ந்து வருவது, அவர்களுக்கு இன்னும் கொஞ்சம் பயம் ஏற்பட்டிருக்கும். அதற்காகத்தான் அழைத்தேன். நீங்கள் உங்கள் வேலையைப் பாருங்கள்' என்று கூறி, அவரது அலுவலக வாசலில் இறக்கி விட்டுச் சென்று விட்டார்.அவர் அலுவலகம் செல்லும்முன், நான்கு பேர் அவரை, போனில் தொடர்பு கொள்ள முயன்றிருக்கின்றனர். யார் அவர்கள்? எம்.ஜி.ஆர்., முன் அமர்ந்திருந்தவர்கள் தான். அந்த பயம் வேண்டும், அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும்.இங்கேயோ, தலை முதல் கால் வரை அனைத்துமே ஊழலில் திளைக்கத் துவங்கி விட்டன.உயரதிகாரி கொடுத்த ஆக்கிரமிப்பை அகற்றும் உத்தரவை நிறைவேற்ற, ஒரு பெண் சிறப்பு வட்டாட்சியர், 1 கோடி ரூபாய் லஞ்சம் கேட்டு, முன்பணமாக 3 லட்சம் ரூபாய் வாங்கும் போது, லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்.வேறு ஒரு வழக்கில் சிக்கிய, மாநிலக் காவல் தலைமை அதிகாரியாக அமர்ந்திருக்க வேண்டிய ஒரு அதிகாரி, தலைமறைவாகி, தேடப்பட்டு வருகிறார். தற்போதைய நிலையை என்னவென்று சொல்வது!மா.கருணாநிதிகாவல்துறை கண்காணிப்பாளர் (ஓய்வு)