உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / விருந்தினர் பகுதி / கலையால் வாழும் கவிஞர்...

கலையால் வாழும் கவிஞர்...

சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் பட்டிமன்ற பேச்சால் மக்களின் மனதை வென்றவர்... சிறந்த நடிகர், இலக்கியவாதி, ஆசிரியர் என பன்முகம் கொண்ட கவிஞர் மூரா...தினமலர் 'சண்டேஸ்பெஷல்' பகுதிக்காக நம்மிடம் பகிர்ந்தவை... என் இயற்பெயர் மூ. ராஜசேகர். சொந்த ஊர் தேனி மாவட்டம் ஜக்கம்பட்டி. அப்பா மூர்த்தி, ஜக்கம்பட்டி ஹிந்து உயர்தர ஆரம்ப பாடசாலையில் தலைமை ஆசிரியராக பணியாற்றினார். அம்மா பாலின் சந்திரமதி, அதே பள்ளியில் ஆசிரியராக பணியாற்றினார். நான் மதுரை மாவட்டம் மதிச்சியம் தனம் நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி 2015ல் ஓய்வு பெற்றேன்.இன்று நான் மேடைப்பேச்சில் சாதிக்க காரணம் உண்டு. பள்ளிப்பருவத்தில் பேச்சுப் போட்டிக்காக பாரதியார் பற்றி என் அப்பா எழுதிக் கொடுத்ததை மனப்பாடம் செய்தேன். மேடையில் இரண்டு வரிக்கு மேல்பேச முடியவில்லை. அப்பாவிடம் அழுதேன். 'சங்கடப்படாதே. கேலி செய்தவனிடம் எப்படி கை தட்டு வாங்குவது என யோசி. மனப்பாடம் செய்யாமல் குறிப்பு எழுதிக்கொள். சம்பவங்களை சொல்கிறேன். நீ மறந்தாலும் அடுத்த சம்பவம் ஞாபகத்திற்கு வரும்' எனக் கூறி எனக்கு பயிற்சி அளித்தார்.பின் எந்த மேடையில் என்ன தலைப்பு கொடுத்தாலும் என்னால் பேச முடிந்தது. காரணம் புத்தகங்களை படிப்பது தான். வாழ்க்கையில் ஜெயிக்க வாசிப்பு அவசியம். இரவில் ஒருமணி நேரம் வாசிப்பேன். காலையில் 5:30 மணிக்கெல்லாம் எழுந்து 10 பக்கமாவது படித்துவிடுவேன். ஒருநாளைக்கு குறைந்தபட்சம் 3 பக்கங்களையாவது ஆழமாக படிக்கவேண்டும். அதை மனதில் நிறுத்த வேண்டும். அப்போது தான் எந்த மேடை ஏறினாலும் கண்முன்னே காட்சிகளாக விரியும்.

கவிஞர் ஆனது எப்படி

8ம் வகுப்பு படிக்கும் போது தோழியை பார்த்து முதன் முதலாக ஒரு கவிதை எழுதினேன். அது தமிழாசிரியரிடம் சிக்கி தலையில் கொட்டு விழுந்தது. பின் அவர் என்னை அழைத்து உனக்கு தமிழ் அழகாக எழுத வருகிறது. நிறைய எழுதி என்னிடம் மட்டும் கொடு. நான் திருத்தித் தருகிறேன் என்றார். அவர் கொடுத்த ஊக்கத்தால் கவிதைகள், கதைகள் எழுதினேன். கவிதை போட்டியில் திரைப்படக் கவிஞர் நா. காமராசரின் 'கருப்பு மலர்கள்' புத்தகம் பரிசாக பெற்றது முதல், கவிஞர் மூரா என என்னை அடையாளப்படுத்திக் கொண்டேன். 3 கவிதை நுால்கள் எழுதியுள்ளேன்.ஒருமுறை குன்றக்குடி அடிகளார் என் பட்டிமன்ற பேச்சை கேட்டு வயிறு குலுங்க சிரித்தார். பின் என்னை அழைத்து, 'நம் நோக்கம் சிரிக்க வைப்பது மட்டுமல்லாமல் சிந்திக்க வைப்பதாகவும் இருக்க வேண்டும்' என்றார். அன்று முதல் என் பேச்சுகளில் சமூகம் சார்ந்த விஷயங்களை அதிகம் வெளிப்படுத்த துவங்கினேன்.

நாடக நடிகராக

மாணவராக இருந்த போது நாடகங்களில் நடித்திருக்கிறேன். பின் ஆல் இந்தியா ரேடியோவில் தேர்வாகி ரேடியோ நாடக நடிகரானேன். 'துாங்காநகரம்' திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. நாடக அனுபவம் இருந்ததால் இயக்குனர் கவுரவ் சொல்வதை உள்வாங்கி நடித்தேன். 'நீங்கள் ஒன் டேக் ஆர்டிஸ்ட்' என இயக்குனர் என்னை பாராட்டினார். பின் வீட்டில் சம்மதிக்காததால் சினிமாவில் நடிப்பை தொடரவில்லை.'என் உயிர் மேடையில் தான் பிரிய வேண்டும்' என வீட்டில் சத்தியம் வாங்கியதால் இன்று வரை பட்டிமன்றங்களுக்கு என்னை அனுமதிக்கின்றனர். முதுமையாகாமல், துவண்டுவிடாமல் சுறுசுறுப்பாக நிமிர்ந்து நிற்கிறேன் எனில் எனக்குள் இருக்கும் கலைதான் என்னை வாழ வைக்கிறது. ஆசிரியர் பணியில் ஓய்வு பெற்று தற்போது தனியாக குழு அமைத்து நடுவராக பட்டிமன்றங்கள் நடத்தி வருகிறேன். வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக, யாரையும் புண்படுத்தாமல், ஜாதி, மதபேதங்கள் இல்லாமல் சகோதரத்துவம், மனிதநேயத்துடன் வாழ்ந்து வருகிறேன். இதுவே அழகான வாழ்க்கை!இவ்வாறு கூறினார்.இவரை வாழ்த்த 94862 07737


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை