பேபிகளின் செல்ல போட்டோகிராபர் அபிநயா
குழந்தைகளோடு குழந்தையாய் மாறி அவர்களின் ரசனைக்கேற்ற வகையில் போட்டோ எடுப்பதை பேஷனாக செய்கிறார் மதுரை கோச்சடையைச் சேர்ந்த எம்.இ., பட்டதாரி அபிநயா.கல்லுாரியில் ஆசிரியராக சேரும் வாய்ப்பிருந்தும் குழந்தைகள் தான் எனது உன்னத உலகம் என போட்டோக்கள் மூலம் நிரூபித்து வரும் அபிநயாவின் மலரும் நினைவுகள் வண்ணப்பூக்களாய் விரிந்தன.''ஆரம்பத்தில் காட்டுக்குள் சென்று படம் பிடிப்பது புழு, பூச்சி, பறவை, பட்டாம்பூச்சிகளை படம் பிடித்துக் கொண்டிருந்தேன். எனக்கு பெண் குழந்தை பிறந்தபின் ஒவ்வொரு அசைவையும் படம்பிடித்தேன். வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் வைத்தேன். பார்த்தவர்கள் எனது செட்டிங்ஸ் திறமையை வியந்தனர். அந்த அனுபவத்தை முதலீடாக வைத்து தனியாக கேமரா வாங்கி தொழில் துவங்கினேன். குழந்தைகளுக்கான செட்கள், உடைகள் என முதலீடு செய்து ஸ்டூடியோ அமைத்தேன்.பிறந்த குழந்தைகளை போட்டோ எடுப்பது சவாலான அதேநேரம் சுவாரசியமான வேலை. குழந்தையின் எடை, குறைப்பிரசவ குழந்தையா என்பதை கேட்டுக் கொள்வேன். அதற்கேற்ப அவர்களை தயார் செய்ய வேண்டும். குழந்தை பிறந்த 12வது நாளில் இருந்து குழந்தையை போட்டோ எடுக்க பெற்றோர் விரும்புகின்றனர். தீம்களுக்கு ஏற்ப தனித்தனியாக செட் தயாரித்து வைத்துள்ளேன். சில நேரம் பெற்றோர்களே கூகுள், இன்ஸ்டாகிராமில் டிசைன் தீம் பார்த்து அதைப்போன்ற செட்டிங்கில் போட்டோ வேண்டும் என்பர். அதற்கேற்ப பிரத்யேக டிசைன் தயார் செய்வேன்.பிறந்த குழந்தையை ஒருமாதம் வரை பெற்றோர்கள் வெளியில் துாக்கி வரமாட்டார்கள் என்பதால் வீட்டுக்கு எங்களது செட்களை எடுத்துச் சென்று போட்டோ எடுப்பேன். ஸ்டூடியோவிற்கு குழந்தையை அழைத்து வந்தால் விதவிதமான செட்களில் அமரவைத்து, தவழவைத்து, நிற்க வைத்து படம் எடுப்பேன். முருகன், தேன் கூடு, பூசணிக்காய் வடிவம் என 50 வகையான தீம்கள் தயாரித்துள்ளோம். ஹாரிபார்ட்டர் தீம்களை வளர்ந்த சிறுவர், சிறுமிகள் விரும்புகின்றனர். பிறந்தது முதல் ஒன்பது மாத குழந்தைக்கு தேவையான உடைகளையும் தயாரித்து வைத்துள்ளோம்.குழந்தைகளுக்கான போட்டோ ஷூட் எடுப்பது பிரபலமாகி வருகிறது. இன்ஸ்டாவில் தனது குழந்தைகளின் புகைப்படங்களை விதவிதமாக வெளியிடுவதை இன்றைய இளம்தலைமுறை பெற்றோர் பெரிய விஷயமாக பார்க்கின்றனர்.அலைபேசி யுகத்தில் போட்டோகிராபர்களை தேடி வாடிக்கையாளர் வருவது என்பது நாங்கள் தரும் தரத்தை பொறுத்தது. தேனீ போல குழந்தையை படம் பிடிக்க தேனீ போன்ற உடை, சுற்றிலும் பூக்கள், குழந்தையை சுற்றிலும் பொம்மை தேனீக்கள் என அதைச் சார்ந்தே இருக்கும். எல்லாவற்றையும் வீட்டில் தயார் செய்வது பட்ஜெட் அதிகரிக்கும் விஷயம். ஸ்டூடியோவில் சில நிமிடங்களில் குழந்தையை அமரவைத்து படம் பிடிக்கலாம்.எனக்கு பிடித்த துறை அனிமேஷன் தான். ஐந்தாண்டுக்கு முன் எம்.இ., முடித்த போது அனிமேஷன் படிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் இந்த வாய்ப்பை சந்தோஷமாக அனுபவிக்கிறேன். போட்டோகிராபர் என சொல்வதில் எனக்கு பெருமை தான். குழந்தைகளை கையாள்வது ஒரு கலை. அவர்களின் சிரிப்பு, துறுதுறு பார்வையை படம் பிடிப்பது தவம்.பிறந்த குழந்தையை துாங்கும் போது தான் படம் எடுக்க முடியும். போட்டோ சூட் என்றாலே குழந்தையின் நேரத்தை அனுசரித்து தான் வரவேண்டும் என்பதை பெற்றோர்களிடம் முன்கூட்டியே தெரிவித்து விடுவேன். பிறந்த குழந்தை என்றால் நிமிர்ந்து பார்க்க மாட்டார்கள், கை, கால்களை அசைத்து கொண்டே இருப்பதால் துாங்கும் போது எடுப்பது தான் அழகு. மூன்று மாத குழந்தை முகம் பார்க்கும், சொடக்கு போட்டால் பார்வையை திருப்புவர், படம் எடுப்பது அழகாக இருக்கும். ஆறுமாத குழந்தைகள் அழகாக சிரிப்பர், உட்காருவர். அந்த நேரத்தில் விதவிதமாக போட்டோக்கள் எடுத்து நம் நினைவுகளை பத்திரப்படுத்தலாம்.குழந்தைகள் ஒவ்வொரு அடியாக எடுத்து வைப்பதை படம் பிடிப்பது இன்னும் அழகு என்றார்.இவரிடம் பேச63840 23840.