உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / விருந்தினர் பகுதி / ஒலிம்பிக் கனவில் அனுஷ்கா ஜெனிபரும் அஞ்சனாவும்

ஒலிம்பிக் கனவில் அனுஷ்கா ஜெனிபரும் அஞ்சனாவும்

'ஒலிம்பிக்கில் விளையாடி சாதிப்பதே இலக்கு' என்கின்றனர் சர்வதேச போட்டிக்கு தயாராகி வரும் மதுரை பாட்மின்டன் தோழியர் அனுஷ்கா ஜெனிபரும், அஞ்சனாவும். பத்தாம் வகுப்பில் படித்தவாறு, பங்கேற்கும் போட்டிகளில் எல்லாம் பதக்க வேட்டையாடுகின்றனர்.அனுஷ்கா ஜெனிபரின் தந்தை ஆனந்த், தாய் சாமுண்டீஸ்வரி மின்வாரிய பொறியாளர்கள். அஞ்சனாவின் தந்தை மணிகண்டன் வர்த்தக பிரமுகர். தாய் இல்லத்தரசி. இத்தகைய பின்னணியுள்ள இருவரும், தினமும் 10 மணி நேரம் பாட்மின்டன் கோர்ட்டில் பந்தாடுகின்றனர். மகள் எந்நேரமும் விளையாட்டே கதி என இருக்க அனுஷ்காவின் பெற்றோர் சொந்த வீட்டைவிட்டு பயிற்சிக்கூடம் அருகே வாடகை வீட்டில் வசிக்கின்றனர்.அனுஷ்காவுக்கு 3 ஆண்டுகளாக பங்கேற்கும் எல்லா போட்டிகளிலும் வெற்றிதான். பள்ளி, மாவட்ட அளவில் கலக்கியவர், சென்னையில் மாநில 'கலப்பு இரட்டையர்' போட்டியில் 2 முறை தங்கம் வென்றார். 2024 ஜூனில் கோவா, ஜூலையில் ஐதராபாத், செப்டம்பரில் விஜயவாடாவில் நடந்த தேசிய கலப்பு இரட்டையர் அனைத்திலும் தங்கம் வென்றார்.சென்னையில் நடந்த இரட்டையர் போட்டியில் தங்கம், மற்றொரு இரட்டையர் போட்டியில் வெண்கலம் வென்றுள்ளார். சென்னையில் முதலமைச்சர் சுழற்கேடய இரட்டையர் போட்டியிலும் தங்கம் வென்றார். அடுத்து அவரது பார்வை சர்வதேசம் பக்கம் திரும்பியது.'ஏசியன் பாட்மின்டன் சேம்பியன்ஷிப்' அமைப்பு சார்பில் சீனாவின் செங்குடு நகரில் திறமையை காட்டியும் வெற்றி நழுவியது. அது அவரது மன உறுதியை கூர்தீட்டியது. அடுத்த மாதம் மலேசியா, இந்தோனேஷியாவில் நடக்கும் சர்வதேச போட்டிக்காக தயாராகி வருகிறார்.தோழி அஞ்சனாவும் விஜயவாடாவில் நடந்த தேசிய மகளிர் இரட்டையரில் வெள்ளி, சென்னையில் தேசிய மகளிர் இரட்டையர் பிரிவில் வெண்கலம், ஜெய்ப்பூரில் மகளிர் இரட்டையரில் வெள்ளி என கலக்குகிறார்.இருவருக்குமான பயிற்சியாளர்கள் சரவணன், நவீன் கூறுகையில், ''கிரிக்கெட்டுக்கு அடுத்து பாட்மின்டன்தான் பிரபலமாக உள்ளது. பி.வி.சிந்து, சாய்னாநேவல் வந்தபின் ஏராளமான வீராங்கனைகள் போட்டியில் உள்ளனர். அனுஷ்கா ஜெனிபர், அஞ்சனாவிடம் ஆர்வமும், உறுதியும் உள்ளதால் ஒலிம்பிக் கனவு நிறைவேற வாய்ப்புள்ளது. மதுரையின் ஜெர்லின் அனிகாதான் ஒலிம்பிக் காதுகேளாதோர் போட்டியில் 3 தங்கம் வென்றார். இவர்களும் 14, 17 வயது பிரிவுகளில் இந்திய அளவில் முதல் ராங்கில் உள்ளதால் நிச்சயம் வெல்வர்'' என்றார்.இவர்களை வாழ்த்த: gmail.com


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி