உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / விருந்தினர் பகுதி / போட்டோ வித் தம்பதி

போட்டோ வித் தம்பதி

'பளிச்'சென முகம்... 'கிளி(ளுக்)' என சிரிப்பு... என பார்த்தவுடனே புகைப்பட கலைஞர்களுக்கு படம் எடுக்க தோன்றும் உருவம். 'அவுங்களுக்கு ஏன் சிரமம். நானே எடுத்து தருகிறேன்' என நுாறு வாட்ஸ் பல்பு தரும் வெளிச்சம் போல் கலகலவென சிரிக்கிறார் 36 வயதான ஹேமலதா. கணவர் செந்திலுடன் (40), சேர்ந்து போட்டோகிராபி துறையில் கலக்கி வருகிறார். எப்படி ஆர்வம் வந்தது என தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக கேட்டோம்.''ஈரோடு சூரம்பட்டி வலசையில் குடும்பத்துடன் வசிக்கிறோம். கணவர் போட்டோ ஸ்டூடியோ வைத்துள்ளார். 2010ல் திருமணம் ஆனதும் அவருக்கு உதவியாக ஸ்டூடியோவில் இருந்தேன். ஆல்பம் தயாரிப்பது, பிரின்ட் போடுவது போன்ற வேலைகளை செய்தேன். இப்படியே 5 ஆண்டுகள் கழிந்தன. 'கூண்டிற்குள் அடைப்பட்ட கிளி போல் இருக்காதே. வெளியே வந்து பார்' என கணவர், போட்டோ எடுக்க உதவியாளராக என்னை அழைத்துச்சென்றார். அப்படி ஆரம்பித்ததுதான் போட்டோகிராபி தொழில். இன்று அதுவே என் அடையாளமாகிவிட்டது'' என்கிறார் ஹேமலதா.செந்தில் கூறுகையில், ''கணவன், மனைவியாக சென்று போட்டோ எடுக்கும்போது அதை பலரும் ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள். பத்தாம் வகுப்பு படித்துவிட்டு ஸ்டூடியோ ஒன்றில் வேலைக்கு சேர்ந்து தொழில் பழகினேன். பிறகு திருமணம், விழாக்களுக்கு படம் எடுக்க செல்வேன். அவ்வப்போது கேமரா தொழில்நுட்பங்களை ஹேமா(லதா)வுக்கு சொல்லி தருவேன். அதில் கற்றுக்கொண்டு எனக்கு போட்டியாக தொழிலில் கலக்கி வருகிறார்'' என சிரிக்கிறார்.இருவரும் ஒரு நிகழ்ச்சிக்கு சென்றால் ஹேமலதா போட்டோ எடுப்பதையும், செந்தில் வீடியோ எடுப்பதையும் வழக்கமாக கொண்டுள்ளனர். பெண்கள் தொடர்பான விழாக்களுக்கு படம் எடுக்க ஹேமலதாவை பலரும் போட்டி போட்டு அழைக்கின்றனர். இருவரும் தமிழகம் முழுவதும் சுற்றி சுற்றி படம், வீடியோ எடுத்து வருகின்றனர். அச்சமயத்தில் இவர்களது 9, 13 வயது குழந்தைகளை குடும்பத்தினர் பார்த்துக்கொள்கிறார்கள்.''போட்டோ எடுக்க தனியாக செல்லும்போது எனக்குரிய மதிப்பும், மரியாதையையும் விழா நடத்துவோர் தருவது எனக்கு தைரியத்தையும், ஊக்குவிப்பையும் தருகிறது. ஆரம்பத்தில் கூச்சம், தயக்கம் இருந்தது. இன்று என்னால் எந்த சூழலிலும் போட்டோ எடுக்க முடியும். பெண்களால் சாதிக்க முடியாதது எதுவுமில்லை. எந்த தொழிலாக இருந்தாலும் ஆர்வம், விருப்பத்துடன் செய்தால் அதில் பல புதுமைகளை சாதிக்க முடியும். அதற்கான முயற்சியில் கணவர் ஒத்துழைப்புடன் ஈடுபட்டு வருகிறேன்'' என்கிறார் ஹேமலதா.இவர்களை வாழ்த்த 98427 65001


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி