UPDATED : ஆக 23, 2026 05:23 PM | ADDED : ஆக 22, 2026 03:40 PM
தற்போது ட்ரெண்டில் இருக்கும் புதுவரவு அழகு சாதனங்களில், 'லிப் பீல்' அல்லது 'பீல் ஆப் லிப்ஸ்டிக்' முக்கிய இடம் பிடித்துள்ளது. வழக்கமான லிப்ஸ்டிக் போல இல்லாமல், இதை பயன்படுத்தும் முறையும் சற்று வித்தியாசமானது. ஜெல் வடிவில் இருக்கும் லிப் பீல் ஜெல்லை உதட்டில் சீராக தடவி, சில நிமிடங்கள் காயவிட வேண்டும். ஜெல் நன்றாக காய்ந்ததும், அதை மெதுவாக உரித்து எடுத்தால் போதும். உதட்டில் அழகான, இயற்கையான நிறம் படிந்துவிடும் என்கிறார் அழகு கலை நிபுணர் ரம்யா. சாப்பிட்டாலும், தண்ணீர் குடித்தாலும் உதட்டில் படிந்த நிறம் எளிதில் அழியாது. லிப்ஸ்டிக் பயன்படுத்தியது போன்ற தோற்றம் இல்லாமல், உதடுகளின் இயற்கையான நிறம் போலவே இருக்கும். மாஸ்க் அணிந்தாலும், ஆடைகளில் உதடு பட்டாலும் நிறம் ஒட்டாது. முதலில் உதடுகளை 'ஸ்கரப்' செய்து சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர், லிப் பீல் ஜெல்லை உதட்டின் வடிவத்திற்கு ஏற்ப சீராக தடவ வேண்டும். 5 முதல் 10 நிமிடங்கள் வரை நன்றாக காயவிட வேண்டும். காய்ந்ததும், உதட்டின் ஓரத்தில் இருந்து மெதுவாக உரித்து எடுக்கலாம். இறுதியாக, உதடுகள் மென்மையாக இருக்க 'லிப் பாம்' அல்லது 'லிப் கிளாஸ்' பயன்படுத்தலாம். அடிக்கடி டச் அப் செய்ய வேண்டியதில்லை என்பதே லிப் பீலின் முக்கிய சிறப்பாகும்.