உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / விருந்தினர் பகுதி / மங்கோலியா மண்ணில் மணிமேகலை காப்பியம்: மங்கோலிய பெண் டாக்டரின் தமிழ் இலக்கிய காதல்

மங்கோலியா மண்ணில் மணிமேகலை காப்பியம்: மங்கோலிய பெண் டாக்டரின் தமிழ் இலக்கிய காதல்

தமிழ் இலக்கியங்கள் போல் தொன்மையும், செழுமையும் நிறைந்த தனி சிறப்பு கொண்டவை உலகில் வேறில்லை. முக்காலத்திற்கும் ஏற்ற திருக்குறள்; அறம், பொருள், இன்பம், வீடு போற்றும் ஐம்பெரும் காப்பியங்கள்... என தமிழ் கலாசாரம், பண்பாட்டின் பெருமை போற்றும் படைப்புகள் ஏராளம்.ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை மீது கொண்ட காதலால் மங்கோலியாவின் பெண் டாக்டர் நொமின் செட்செக் தஷ்னியம், அந்நாட்டு மொழியில் மணிமேகலை காப்பியத்தை மொழி பெயர்த்து வெளியிட்டுள்ளார். இதற்கான அனைத்து உதவிகளையும் மத்திய அரசின் தமிழுக்கான செம்மொழி ஆராய்ச்சி நிறுவனம் செய்துள்ளது.

'மணிமேகலை' மீதான காதல் வந்தது குறித்து டாக்டர் நொமின் நம்மிடம்...

மங்கோலிய தலைநகரான உலான்பாட்டாரில் டாக்டராக உள்ளேன். கணவரும் டாக்டர். இந்தியாவின் தமிழ் கலாசாரம் மீது எனக்கு இனம் புரியாத ஈர்ப்பு உண்டு. இந்திய நண்பர்கள் அதிகம் உள்ளனர். அவர்களில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் விஞ்ஞானி ராமசாமி ராஜேஷ்குமார் மூலம் மணிமேகலை காப்பியம் குறித்த கதை, கதாபாத்திரங்களை அறிந்ததில் பெரும் ஆச்சரியமாக இருந்தது.அதில் பவுத்த மத கருத்துகள் நிறைந்திருந்தன. பவுத்த மத நம்பிக்கை கொண்ட எங்கள் நாட்டு மக்களுக்கு இந்த படைப்பின் ஆழ்ந்த கருத்துக்களை கொண்டு சேர்க்க ஆர்வம் எனக்குள் ஏற்பட்டது.இவருடன், தஞ்சை தமிழ்ப் பல்கலை பேராசிரியர் குறிஞ்சிவேந்தன் உதவியால் மத்திய அரசின் தமிழுக்கான செம்மொழி ஆராய்ச்சி நிறுவனம் மூலம் மொழி பெயர்ப்புப் பணிகளை 2020ல் தொடங்கி 3 ஆண்டுகளில் 414 பக்கங்கள் கொண்ட இந்நுாலை எழுதி முடித்தேன். தற்போது பல ஆயிரம் பிரதிகள் வெளியாகியுள்ளன.மங்கோலிய மண்ணுக்கு சொந்தமான பவுத்த கொள்கைகளை தமிழ் மண்ணில் இருந்து கொண்டு வந்துள்ள பெருமை எனக்கு மனம் நிறைவைத் தந்துள்ளது. ஆங்கிலத்தில் கேட்டு மங்கோலிய மொழியில் எழுதியபோது தான் தமிழின் பெருமை, மொழியின் செழுமையை என்னால் உணர முடிந்தது. தமிழின் சுவை, வார்த்தை அமைப்புகள் ஆச்சரியமூட்டியது. உலகம் முழுவதும் சென்று சேர வேண்டிய உன்னத காப்பியம் இது என்கிறார் பெருமையாக.

காண்டம் வாரியாக விவரித்தோம்

பேராசிரியர் குறிஞ்சி வேந்தன், விஞ்ஞானி ராமசாமி ராஜேஷ்குமார்: தமிழ் மீது நொமின் கொண்டுள்ள ஆர்வம் எங்களை பிரமிக்க வைத்தது. அவரது மொழிமாற்றம் செய்யும் முடிவிற்கு மத்திய செம்மொழி நிறுவனமே நிதி ஒதுக்கீடு செய்து உதவிக்கு முன்வந்தது. இதனால் இப்பணி எளிதாக அமைந்தது. மணிமேகலையை காண்டம் வாரியாக ஆங்கிலத்தில் அவருக்கு மொழி பெயர்த்து கூறினோம்.அதை உள்வாங்கி மங்கோலிய மொழியில் அவர் மொழிமாற்றம் செய்தார். ஒரு டாக்டராக 'பிஸி'யாக இருந்தும் இலக்கிய காதலால் சீத்தலை சாத்தனாரின் மணிமேகலை காப்பியம் மங்கோலிய மக்களின் மனங்களில் குடிகொண்டுள்ளது. ஏற்கனவே தெய்வ புலவர் திருவள்ளுவரின் திருக்குறள் உலகப் பொதுமறை நுாலாக உலகம் முழுவதும் புகழ் பெற்று வருகிறது. அதையடுத்து ஐம்பெரும் காப்பியங்களில் தமிழர் தொன்மை, பெருமை போற்றும் சிலப்பதிகாரம், மணிமேகலை காப்பியங்கள் உலகம் முழுவதும் பயணிக்க தொடங்கியுள்ளது தமிழ் மொழிக்கு மேலும் பெருமை சேர்க்கும்.தொடர்புக்கு: 93662 44656


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ