சாகித்ய அகாடமியின் சிறுவர் இலக்கியத்திற்கான 'பாலபுரஸ்காருக்கு' அண்மையில் தேர்வு செய்யப்பட்டவர் எழுத்தாளர் யூமா வாசுகி. 'தன்வியின் பிறந்த நாள்' என்ற சிறுகதை தொகுப்பு நுாலுக்காக இந்த விருது வழங்கப்படுகிறது.நாவல், சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு என பல தளங்களில் பங்களிப்பை செய்து வரும் யூமா வாசுகிக்கு இது இரண்டாவது சாகித்ய அகாடமி விருது. ஒரு மலையாள நாவலை தமிழில் மொழி பெயர்த்ததற்காக 2017ல் விருது பெற்றுள்ளார். நுாற்றுக்கும் மேற்பட்ட நுால்களை எழுதியுள்ள இவர், 60க்கும் மேற்பட்ட சிறுவர் இலக்கிய நுால்களை மலையாளத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.இவர் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே செண்டங்காடு அரசு உயர்நிலைப்பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணிபுரிகிறார். இவரது 55வது வயதில் தான் இந்த ஆசிரியர் வேலை கிடைத்தது. அதுவரை பத்திரிகையாளராகவும், பல்வேறு சிறுவர் இதழ்கள் உருவாக்கத்திலும், நுால் பதிப்பக பணியிலும் ஈடுபட்டிருந்தார். இவரோடு ஒரு நேர்காணல்...* யூமா வாசுகி...வாசகர்களை கவரும் வித்தியாசமான பெயராக உள்ளதே...
எனது இயற்பெயர் மாரிமுத்து. நண்பர் யூசுப் பெயரின் முதலெழுத்து, என் பெயரின் முதலெழுத்து, என்னை வளர்த்த வாசுகி என்ற அக்காவின் பெயரை சேர்த்து 'யூமா வாசுகி' என்று வைத்துக்கொண்டேன்.* தஞ்சை தமிழ் மண்ணில் பிறந்து வாழும் உங்களுக்கு மலையாள வாசம் வசமானது எப்படி?
நண்பர் எழுத்தாளர் ஜெயமோகன் தான் காரணம். அவரது குரு நித்யசைதன்ய யதி. இவர் பெரிய ஞானி. மலையாளம், ஆங்கிலத்தில் நுாற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதியுள்ளார். இவரை ஊட்டியில் ஆசிரமத்தில் சந்திக்க போயிருந்தோம். அப்போது சிறுவர்களுக்கான ஒரு மலையாள நுாலை எடுத்து பார்த்துக்கொண்டிருந்தேன். படிக்க முடியாமல் 'பார்த்து'க்கொண்டிருந்த போது, ஜெயமோகன் 'நீங்கள் மலையாளம் கற்றுக்கொண்டால் இந்த வகை அரிய நுால்களையும் படிக்கலாம்' என்று ஆர்வமூட்டினார். அதற்கு பிறகு கடும் முயற்சி செய்து மலையாளம் கற்றுக்கொண்டேன்.மலையாளம் தமிழின் சகோதர மொழி. தமிழுக்கு நெருக்கமான மொழி. எனவே படிப்பது எளிதானது. ஆரம்பத்தில் மலையாள சிறுவர் நுால்களை, இதழ்களை படிக்க ஆரம்பித்தேன். அவை பயனுள்ளதாக இருந்ததால் தமிழில் சிறுவர்கள் படிக்கட்டும் என்று மொழிபெயர்க்க ஆரம்பித்தேன். அதில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து நிறைய நுால்களை மொழிபெயர்த்தேன். நானும் தனியாக தமிழில் நாவல்கள் எழுதத்துவங்கினேன். மலையாள நுால்களை வாங்குவதற்காகவே ஆண்டிற்கு ஒருமுறை கேரளாவிற்கு செல்வேன்.* குழந்தைகளுக்காக எழுதுவது எளிதா...
குழந்தைகளை கூர்ந்து நோக்கினால் அவர்களின் நடவடிக்கையில் கவித்துவம் இருக்கும். எனவே எழுதும் போதும் நமக்கு அளவற்ற கவித்துவம் தேவைப்படும். வார்த்தைகள் அவர்களுக்கு புரிய வேண்டும். கதைகளை அவர்கள் மனதில் எளிதாக பதிய வைக்க வேண்டும்.பெரியவர்களுக்கு எழுதும் போது சுதந்திரம் இருக்கும். எப்படி வேண்டுமானாலும் வார்த்தைகளை கையாளலாம். எந்த கருவையும் கதையில் வைக்கலாம். குழந்தைகளுக்கு சொல்லும் போது, அடிப்படையில் கற்பனை ஆற்றல் தேவைப்படும். விஷயங்களை நுட்பமாக சொல்ல வேண்டும். மொழிநடையை கவனமாக கையாள வேண்டும்.* பள்ளிக் குழந்தைகள், பாடப்புத்தகத்தை தவிர கதை நுால்கள் படிப்பது குறைந்து விட்டது என்ற பொதுக்கருத்து இருக்கும் போது, குழந்தை இலக்கியத்திற்கு முக்கியத்துவம் இருக்கிறதா?
நிச்சயமாக நிறைய நுால்கள் குழந்தைகளுக்கு தேவைப்படுகிறது. பள்ளியில் நுாலக பொறுப்பையும் நான் பார்க்கிறேன். வாசிப்பு இயக்கம் பேரில் தமிழக அரசு 150க்கும் மேற்பட்ட சிறு, சிறு வண்ணப்புத்தகங்களை வெளியிட்டுள்ளது. அவற்றை சிறுவர்கள் விரும்பி படிக்கிறார்கள், மீண்டும் கேட்டு வாங்கி படிக்கிறார்கள்.குழந்தைகளுக்கு சிறுவர் இதழ்படிக்க ஆசை தான். தமிழகத்தில் வெளிவந்த பல சிறுவர் இதழ்கள் இப்போது வெளிவருவது இல்லை. ஊடகங்களின் வணிக நோக்கு காரணமாக நிறுத்தப்பட்டன.கேரளாவில் பாலசாகித்ய இன்ஸ்டிடியூட் என்ற சிறுவர் இலக்கிய நிறுவனத்தை அரசே நடத்துகிறது. நிறைய நுால்கள் அதில் வெளிவருகின்றன. ஒரு சிறுவர் மாத இதழையும் அரசே வெளியிடுகிறது. இதனால் சிறுவர்களுக்காகவும் எழுதுவதற்கு மலையாளத்தின் பிரபல எழுத்தாளர்கள் விரும்புகின்றனர்.* சிறுவர்களுக்கு அறிவியல் ரீதியாக அல்லது கற்பனையாக என்று எந்த மாதிரி கதைகளை எழுதுகிறீர்கள்?
விருது பெறும் 'தன்வியின் பிறந்தநாள்' நுாலில் 10 கதைகள் உள்ளன. குடும்ப உறவுகள், பள்ளிக்கூட சூழல், சுற்றுச்சூழல், மாற்றுத்திறன் குழந்தை, பிராணிகள் - குழந்தைகள் உறவு பற்றியெல்லாம் கதை எழுதியிருக்கிறேன். பல பரிமாணங்களில் எழுத விரும்புகிறேன். சிறுவர்களுக்கான தனிப்பாடல்களும் எழுதியுள்ளேன். இன்னும் தொகுக்கவில்லை.
* சிறுவர் இலக்கியத்தில் இன்னும் என்ன புதுமை செய்ய திட்டம்...
திட்டம் என்பதே என் வாழ்வில் இல்லை. தற்செயலாக தான் எதுவும் நடக்கிறது. இப்படியே கலை, இலக்கிய சூழலில் வாழவே எப்போதும் விரும்புகிறேன்.