உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / விருந்தினர் பகுதி / மகான்களாக மகா நடிப்பு சாய் சத்யாவின் சாதனை

மகான்களாக மகா நடிப்பு சாய் சத்யாவின் சாதனை

ராமகிருஷ்ணராகவும், ஷிர்டி சாய்பாபாவாகவும் தத்ரூபமாக நாடகத்தில் நடித்து, பார்வையாளர்களை பக்தி மழையில் நனைய வைக்கிறார்; மகான்களாக நடித்து அவர்களை நிஜமாகவே நம் மனதில் பதிய வைக்கிறார் இருபத்திரண்டே வயதான சென்னையை சேர்ந்த சாய் சத்யா.மதுரையில் நாடகங்கள் நடிக்க வந்த அவர் தினமலர் சண்டே ஸ்பெஷல் பகுதிக்காக நம்மிடம் பகிர்ந்தவை...இதழியல், மாஸ் கம்யூனிகேஷனில் முதுகலை பயின்றிருக்கிறேன். தற்போது அண்ணாமலை பல்கலையில் நுண்கலையில் முதுகலை பயில்கிறேன்.சிறு வயதில் இருந்தே கதைகள் படிப்பதில், கதாபாத்திரங்களை நடித்துப் பார்ப்பதில் ஆர்வம் இருந்தது. பாம்பே ஞானம் ஆர்ட்ஸ் அகாடமியில், எனது அக்கா சாய் ஸ்ருதி நாடக நடிகையாக உள்ளார். அகாடமி சார்பில் நடந்த நிகழ்வில் அவருடன் பங்கேற்றபோது பாம்பே ஞானத்தின் அறிமுகம் கிடைத்தது. 1989ல் அவரால் தொடங்கப்பட்ட 'மஹாலட்சுமி மகளிர் நாடக குழு'வில் சேர்த்துக் கொண்டார். 2023 ஆகஸ்டில் ராமகிருஷ்ண பரமஹம்சர் நாடகத்தில் சிறிய கதாபாத்திரத்தில் முதன்முறை நடிக்க வாய்ப்பு கிடைத்தது.கதையின் அனைத்து கதாபாத்திரங்களையும் கூர்ந்து கவனித்து நிறைய கற்றுக் கொண்டேன். 2024 செப்டம்பரில் அதே நாடகத்தில் எனக்கு ராமகிருஷ்ணராகவே நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அனுபவம் இல்லாததால் 'லீட் ரோல்' கொடுத்த போது அதிர்ச்சியாக இருந்தது. பாம்பே ஞானம், குழு ஒருங்கிணைப்பாளர் தாரா சீனிவாசன், கலை இயக்குநர் மோகன் பாபு எனக்கு ஊக்கமளித்தனர். நடிப்பில் எவ்வாறு மெருகேற்றலாம் என அறிவுரை வழங்கினர்.குடும்பத்தினருக்கு நான் நடிப்பதை 'சர்ப்ரைஸ்' ஆக வைத்திருந்தேன். நான் நடித்த நாடகத்திற்கு அவர்களை அழைத்திருந்தேன். முதன்மை கதாபாத்திரமாக நடித்ததை பார்த்த அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.எனக்கு வழங்கப்படும் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் முதலில் அதைப் பற்றிப் படித்து தெரிந்து கொள்வேன். அக்கதாபாத்திரத்தை இவ்வாறு வெளிப்படுத்தலாம் என 'டெம்பிளேட்' வைத்துக் கொள்வேன். காட்சிக்கு ஏற்றாற் போல் எப்படி நடிக்க வேண்டும், முக பாவனை வேண்டும் என இயக்குநருடன் ஆலோசிப்பேன்.அனைத்து கதாபாத்திரங்களையும் நன்கு கவனிப்பதால் அவற்றின் வசனங்களும் எனக்கு தெரியும். ஒத்திகையின்போது யாராவது வர முடியாத சூழலில் அவர்களுக்கு பதிலாக நடித்துக் காண்பிப்பேன். மகான்கள் ராமகிருஷ்ணர், ஷிர்டி சாய்பாபாவாக நடித்ததை பாக்கியமாக கருதுகிறேன்.ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் பிடிக்கும். டிகிரி படிக்கும் போது வகுப்பில் ஆசிரியர் உதாரணங்களுடன் கூறுகையில் லயித்து கவனிப்பேன். அதனால் கூட நடிப்பில் ஆர்வம் ஏற்பட்டிருக்கலாம்.புத்தகம் படிக்க பிடிக்கும். மொழிகள் அதிகம் கற்பதில் ஆர்வம் உண்டு. தமிழ், ஆங்கிலம் தவிர ஹிந்தி, ஜெர்மன், பிரெஞ்ச், சமஸ்கிருதம் பேசுவேன். பரதம், கதக் கற்று வருகிறேன்.நாடக குழு முழுக்கவே மகளிர் குழு என்பதால் ஆண் கதாபாத்திரங்களாக நடிக்க தனி பயிற்சி வழங்குவர். எப்படி நிற்க வேண்டும், நடக்க வேண்டும், முகபாவனைகள் கொடுக்க வேண்டும் என நுணுக்கமாக கற்றுக் கொடுப்பர். முதலில் சவாலாக இருந்தாலும் பெண்களுக்கே உரித்தான உடல் பாவனையை உடைத்து ஆண் கதாபாத்திரமாக மாற மெருகேற்றினர். நாடகங்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்ட 'வாய்ஸ் ஓவராக' இருப்பதால் நேர மேலாண்மை, 'டீம் ஒர்க்' முக்கியம். நடிப்பதற்கு முன் மனதை 'ரிலாக்ஸ்' ஆக வைத்துக் கொண்டு கொடுக்கப்பட்ட கதாபாத்திரமாக வாழ்ந்தாலே போதும்.மேடை நாடகங்களை வயதானவர்கள் தான் விரும்பி பார்க்கின்றனர். தற்போது இளைஞர்களிடமும் ஆர்வம் வந்துள்ளது. நாடகக் கலை பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. மேடை கலைஞர்களை மக்கள் ஊக்குவிக்க வேண்டும்.இவ்வாறு தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ