உள்ளூர் செய்திகள்

ஆனந்தக் கண்ணீர்

ஏழை ஒருவர் கிராமத்திற்கு வந்த அறிஞர் ஒருவரை வீட்டிற்கு சாப்பிட அழைத்தார். உணவில் காளான் இடம் பெற்றிருந்தது. பறித்து பலநாள் ஆனதால் அது விஷமாகி விட்டிருந்தது. அதை உண்டதும் கசப்பு சுவையை உணர்ந்தார் அறிஞர். ஆனால் அருகில் நின்று விசிறி வீசிய ஏழையைக் கண்ட அறிஞர் . காளான் பற்றி ஏதும் சொல்லாமல் சாப்பிட்டு விட்டு புறப்பட்டார். காளான் தன் வேலையைக் காட்டத் தொடங்கியது. அறிஞர் சுயநினைவை இழந்தார். அவரது சீடர்கள் மூலிகைச்சாறு கொடுத்து விஷத்தை முறித்தனர். விஷயத்தை கேள்விப்பட்ட ஏழை பரபரப்புடன் ஓடி வந்தார். அவரிடம் அறிஞர், “ மரணத்தை யாரும் தடுக்க முடியாது. இன்று இல்லாவிட்டால் என்றாவது ஒருநாள் அது வந்தே தீரும். காளான் கசப்பாக இருந்தால் என்ன? உன் அன்பு தான் என் மனதிற்கு பெரிதாகப்பட்டது'' என்றார் அறிஞர். ஏழையின் கண்களில் கண்ணீர் பெருகியது.