பயந்தால் அன்பில்லை
'பயப்படுபவனிடம் அன்பிருக்காது' என்று கிறிஸ்தவம் கூறுகிறது. அஞ்சா நெஞ்சை உடையவனாக இருந்ததால் தான் நெப்போலியனை 'மாவீரன்' என்கின்றனர். வெற்றி ஒன்றே அவனது குறிக்கோளாக இருந்தது. நெப்போலியனை மிகுந்த திடசாலி என்கிறார்களே! அவரது மனோதிடத்திற்கு ஒரு பரீட்சை வைப்போமே என அவரது தளபதிகள் சிலர் முடிவெடுத்தனர். ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்தனர்.'அனைவரும் டீ அருந்தும் வேளையில், ஒரு பெரிய பீரங்கியிலுள்ள குண்டை வெடிக்கச் செய்ய வேண்டும். அந்தச் சத்தத்தைக் கேட்டு, நெப்போலியன் பதறுவார். அப்போது, அவரது தைரியத்தைப் பற்றி நாம் கேலி பேசலாம்' என முடிவெடுத்தனர். விருந்தில், அனைவரும் டீ கோப்பையை உதட்டில் வைக்கப்போகும் வேளை, பீரங்கி குண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்தது. விருந்திற்கு வந்தவர்கள், எதிரிகள் தான் வந்து விட்டார்களோ என பயந்து, டீ டம்ளர்களை கீழே போட்டு விட்டு ஓடினர். பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த திட்டத்தை அறியாத வீரர்கள், தங்கள் துப்பாக்கிகளுடன் சத்தம் வந்த இடம் நோக்கி ஓடினர்.நெப்போலியனிடமோ எந்த மாற்றமும் இல்லை. டீயை சாவகாசமாக குடித்து முடித்து விட்டு, தளபதிகளிடம், ''ஏதோ சத்தம் கேட்டதே? நீங்கள் கேட்டீர்களா?'' என்றாராம்.குண்டு வெடிக்க ஏற்பாடு செய்திருந்த தளபதிகளின் முகத்தில் ஈயாடவில்லை. விஷயத்தை அவரிடம் சொல்லி, அவரது மனோதிடத்தைப் பாராட்டினர். பயப்படுகிறவர்களிடம் அன்பும் இருக்காது. பயத்தின் காரணமாக தங்கள் கோபத்தையும் வெளிப்படுத்துவார்கள் என்று மனோதத்துவ நிபுணர்களும் கூறுகின்றனர்.''பயப்படுகிறவன், அன்பில் பூரணப்பட்டவன் அல்ல'' என்ற பைபிள் வசனம் நெப்போலியனுக்கு பொருந்தும். நமக்கு...?