நமது தேவை அவருக்கு தெரியும்
''கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும் (மத்தேயு7:7) என்கிறார் இயேசுநாதர்.ஒரு குறிப்பிட்ட பொருள் வேண்டும், நோய்களில் இருந்து விடுதலை வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இல்லாத மனிதர்களே இல்லை. ''நீங்கள் என்ன தேவையிருந்தாலும் அதைக் கேளுங்கள், அப்பொழுது பெற்றுக்கொள்வீர்கள்,'' என்று அவர் சொல்கிறார்.இந்த வேத வசனத்தைக் கவனமாக வாசிக்கும்பொழுது, ''நமக்கு இன்னது தேவை என்பதை பரமபிதா அறிந்திருக்கிறார்,'' என்று ஆண்டவருடைய வார்த்தை சொல்கிறது. ''நீங்கள் வேண்டிக் கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர்-கர்த்தர்- அறிந்திருக்கிறார்'' (மத்தேயு6:8) என்கிறது பைபிள். அவ்வாறு, கர்த்தர் அறிந்திருந்த போதிலும் கூட, ''நீங்கள் கேட்கும் பொழுது தான் பெற்றுக் கொள்வீர்கள்,'' என்று ஆண்டவர் சொல்கிறார். நமக்கு இன்ன பொருள் தேவை, இன்ன விஷயத்தில் அமைதி தேவை, இன்ன விஷயத்திற்கு தீர்வு தேவை என்பதெல்லாம் ஆண்டவருக்குத் தெரியும். ஆனாலும், கூட நாம் ஜெபிக்க வேண்டும், கேட்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.ஒரு சிலர், ''எனக்கு என்ன தேவையென்று ஆண்டவருக்கு தெரியுமே! நான் ஏன் கேட்க வேண்டும்? அவரே எனக்குத் தரட்டுமே,'' என்று எண்ணுகிறார்கள். ஆனால், அந்தத் தேவைக்காக தன்னைப் பணிந்து ஜெபிக்கிறானா என ஆண்டவர் எதிர்பார்க்கிறார். '''கேட்கிற எவனும் பெற்றுக்கொள்கிறான்,'' என்று அவர் கூறுகிறார். எனவே, நமது தேவையை ஆண்டவரிடத்தில் கேட்க வேண்டும். அவர் அதைத் தரும் வரையில் தொடர்ந்து ஜெபிக்க வேண்டும்''நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்,'' (யோவான் 15:7) என்கிறார் இயேசுகிறிஸ்து.