உள்ளூர் செய்திகள்

நம் கோரிக்கையும் ஏற்கப்படும்

நம்முடைய விண்ணப்பங்களுக்கு பதில் அளிக்கும் கடவுளாக இயேசு இருக்கிறார் என்பதற்கு எசேக்கியா அரசனின் வாழ்வு ஒரு சான்றாக இருக்கிறது.யூதேயா நாட்டை எசேக்கியா ஆண்டு வந்தான். அவன் உண்மையுள்ளவனாக, அநேக சீர்திருத்தங்களை தன்னுடைய நாட்டில் செய்து வந்தான். ஆண்டியாக இருந்தாலும், அரசனாக இருந்தாலும் வியாதி என்பது அனைவருக்கும் வரக்கூடிய ஒன்று தானே! ஒருசமயம், அந்த மன்னனும் வியாதிப்படுக்கையில் போராடிக் கொண்டிருந்தான்.அப்போது ஏசாயா என்னும் இறை வாக்கினர் அங்கு வந்தார். அவர் எசேக்கியா அரசனிடம், ''நீர் உமது வீட்டுக் காரியங்களை ஒழுங்குபடுத்தும். நீர் பிழைக்க மாட்டீர்; மரித்துப் போவீர்,'' என்றான். வியாதியின் வேதனை ஒருபுறம். கடவுளிடம் இருந்து வந்த மரணச் செய்தி ஒருபுறம். இந்த இக்கட்டான சூழ்நிலையில் நம்பிக்கையற்ற சூழ்நிலைக்கு தள்ளப்பட்டான். மரண பயம் அவனைச் சூழ்ந்து கொண்டது. குடும்ப பாரங்கள் ஒருபுறம்... மறுபுறம் தான் நேசித்துப் பாதுகாத்து வந்த நாட்டு மக்கள்...இவற்றையெல்லாம் கடந்து செல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது. அதேநேரம், மரணம் எப்படி இருக்கும் என்று சோதித்துப் பார்க்க முடியுமா? முடியாது. அவ்வளவு தான்.மனிதனின் பலம், வீரம், பணம், பதவி, அறிவு, அழகு, அந்தஸ்து அத்தனையும் மரணத்திற்கு முன்னே எங்கே நிற்கும்? இதுபற்றி நினைத்துப் பார்க்க முடியாதவனாய் சுவர்புறமாகத் திரும்பினான் எசேக்கியா. துக்கம் தொண்டையை அடைத்ததால் அழ ஆரம்பித்தான். அழுகை என்பது கண்ணீர் விடுவது மட்டுமல்ல. அது ஒரு தாகத்தை குறிப்பிடுவதாகும். ''மான்கள் நீரோடையை வாஞ்சித்து கதறுவது போல, என் ஆத்துமா தேவனை நோக்கி வாஞ்சித்து கதறுகிறது'' என்கிறார் தாவீது. அழுகை என்பது வாழ ஆசைப்படுவதாகும். எசேக்கியா மன்னனின் கண்ணீரையும், விண்ணப்பத்தையும் கண்ட கடவுள் அவனுக்கு 15 ஆண்டு காலம் வாழ அருள்செய்தார். மன்னனுக்கு உதவி செய்த தேவன், நம்முடைய விண்ணப்பத்தையும் கேட்டு வாழ்வுக்கு வேண்டிய உதவிகளை நிச்சயம் கொடுப்பார்.