உள்ளூர் செய்திகள்

பாபிலோன் தொங்கும் தோட்டம்

வேதத்தில் (பைபிள்) கூறப்பட்டுள்ள பெரிய நகரம் பாபிலோன். இங்கு புகழ்பெற்ற தொங்கும் தோட்டம் ஒன்று இருந்தது. தானியேல் 4:30ல் ''இது என் வல்லமையின் பராக்கிரமத்தினால் என் மகிமையின் பிரதாபத்துக் கென்று, ராஜ்யத்துக்கு நான் கட்டின மகாபாபிலோன் அல்லவா என்று சொன்னான்'' என்று இதைப் பற்றி கூறப்பட்டுள்ளது. தற்போதைய ஈராக் நாட்டில் யூப்ரடீஸ் நதிக்கரையில் இந்நகரம் இருந்தது. ஆதியாகமம் 11:2-9ல் கூறப்பட்டுள்ள ''பாபேல் கோபுரம்'' கட்டப்பட்டிருந்த இடத்தில் தான் இந்த நகரம் அமைக்கப்பட்டது. நேபோபலேஷார்ஸ் என்ற மன்னர் காலத்தில் தொடங்கி, நேபுகாத்நேச்சர் காலத்தில் கட்டி முடிக்கப்பட்டது. ராபர்ட் கோல்டேவீ என்ற ஜெர்மன் ஆராய்ச்சியாளர் தன் குழுவினருடன் 1899 முதல் 1917 வரை புதைபொருள் ஆராய்ச்சியில் ஈடுபட்டார். பாபிலோன் நகரம் பெரிய சதுரவடிவில் பக்கத்திற்கு 22 கி.மீ., அளவில் இருந்தது. 88 கி.மீ, சுற்றளவில் கோட்டைச்சுவர் இருந்தது. இந்த சுவரின் அகலம் 85 அடி. உயரம் பல அடுக்குகளாக 340 அடி. கோட்டையின் நுழைவுவாசலில் உட்புறமாக திறக்கும் வகையில் பிரம்மாண்டமான இரும்புக்கதவுகள் இருந்தன. 23 அடி அகலம் கொண்ட உள்கோட்டைச் சுவரும் இருந்தது. யூப்ரடீஸ் நதி பாபிலோன் நகரின் வடக்கிலிருந்து தெற்கு நோக்கிப் பாய்ந்தது. பாபிலோன் என்றாலே உலக அதிசயமான தொங்கும்தோட்டம் தான் நினைவுக்கு வரும். இந்த தோட்டத்தை 'மேதியா' மலைப்பிரதேசத்தில் பிறந்து, பாலைவன நகரமான பாபிலோனுக்கு திருமணமாகி வந்த ராணி அமிட்டீஸ், எப்போதும் குளிர்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக அமைத்தார். பாபிலோன் நகரின் வடக்குப் பகுதியில் யூப்ரடீஸ் நதிக்கரை ஓரமாக இருந்த கட்டடங்களின் மீது பெரிய மரங்கள், கனி தரும் செடி, கொடிகள் நடப்பட்டன. நதியிலிருந்து குழாய்கள் மூலம் நீர் பாய்ச்சப்பட்டது. அமிட்டீஸின் மகன், பேரன் செய்த தவறால் அந்த மகாபாபிலோன் நகரமானது ஏசாயா 45: 1-3ல் கூறியபடி, கி.மு. 539ல் 'கோரஸ்' என்ற பெர்சிய பேரரசனால் அழிக்கப்பட்டது.