உள்ளூர் செய்திகள்

வந்தார் தியாகத்தின் தலைவர்

டிச.25 கிறிஸ்துமஸ்ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஆவலோடு எதிர்பார்க்கிறோம். ஆனால், கிறிஸ்துமஸ் பண்டிகை, கொடுக்கும் போதனைகளை பெரும்பாலானோர் கற்றுக் கொள்வதில்லை. இந்த பண்டிகையின் போது மூன்று விஷயங்களை சிந்திக்க வேண்டும். மக்கள் தொகை கணக்கெடுப்புக்காக, மன்னன் அகுஸ்துராயனால் பிறப்பிக்கப்பட்ட கட்டளைக்கு கீழ்ப்படிந்து கன்னிமரியாள் நாசரேத்திலிருந்து பெத்லகேம் சென்றார். அப்போது மரியாள் நிறைமாத கர்ப்பவதியாக இருந்தாள். அவள் கோவேறு கழுதையில் 90 மைல்(135 கி.மீ.,) சவாரி செய்ய வேண்டியிருந்தது. தேவன் தனது குமாரனை பெற்றெடுக்கும் தாயாருக்காக, ஒரு ரதத்தைக் கூட ஏற்பாடு செய்யவில்லை. தங்குவதற்கு சத்திரத்தில் இடம் தரவில்லை. மாட்டுத் தொழுவத்தில் தான் இடம் கொடுத்தார். மரியாள் அங்கேயே தங்கிக் கொண்டாள். அங்கேயே இயேசுவைப் பெற்றெடுத்தாள். தேவனுடைய பிள்ளைக்கே இவ்வளவு தான் வசதி கிடைத்தது! ஆனால், அனேக மக்கள், ''தேவன் எனக்கு பணவசதி கொடுக்கவில்லை, பதவி கொடுக்கவில்லை,'' என்றெல்லாம் முணுமுணுக்கின்றனர். ஆனால், பரிசுத்த மரியாளுக்கு பேறு கால சமயத்தில் உதவி செய்யக்கூட ஒருவரும் இல்லை. அவளே பிள்ளையைப் பெற்றெடுத்து, துணிகளில் சுற்றி முன்னணையிலே கிடத்தினாள். நமது வீட்டில் பிள்ளை பிறந்தால் அதை நமது பணக்கார நண்பர்களுக்குச் சொல்லி அனுப்புவோம். பெரிய பதவியில் உள்ளவர்கள், பணக்காரர்கள் வந்து பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுவோம். அதை பெருமையாக நாலுபேரிடம் சொல்வோம். ஆனால், தேவன் தமது ஒரே பேறான குமாரன் பிறந்ததை சாதாரண எளிய மேய்ப்பருக்கு (ஆடு மேய்ப்பவர்களுக்கு) சொல்லும்படி செய்கிறார். அவர்கள் வந்து பார்த்ததை கவுரவமாக நினைத்தார்.மனித குலம் ரட்சிக்கப்படுவதற்காக, தேவகுமாரன் தமது மகிமையுள்ள தெய்வீக மேன்மையை தியாகம் செய்து, பூலோகத்தில் மனிதனாகப் பிறந்தார். எல்லாரும் காணவும், பழகவும் வேண்டுமானால் எளிய குடும்பத்தில் பிறக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் ஏழை குடும்பத்தைத் தேர்ந்தெடுத்தார். எளிமையை, துன்பத்தைச் சகிக்கும் தன்மையை, பிறரது அநியாயங்களைப் பொறுமையாக ஏற்றுக் கொள்ளும் தன்மையை மனிதகுலத்துக்கு போதித்தார். இதுபோன்ற தியாக சிந்தனை கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடும் ஒவ்வொருவருக்கும் வர வேண்டும். அவ்வாறு செய்தால் தான் கர்த்தரது ஆசியைப் பெற முடியும்.