தேவனை அடைய தகுதி என்ன?
ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப் பார்க்கிலும், ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும்,'' என்றார் (மாற்கு 10:25) இயேசுகிறிஸ்துவின் இந்த உபதேசம் பல சமயங்களில் தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறது. இந்த வசனத்தில் 'ஐசுவரியவான்'...அதாவது பணக்காரன் என்றால் யார்? சைக்கிளில் செல்பவரை விட, மோட்டார் சைக்கிளில் செல்பவரும், மோட்டாரில் செல்பவரை விட காரில் செல்பவரும் பணக்காரராக உலக வழக்கில் கருதப்படுகிறார். பணத்தின் அளவைக் கொண்டே ஒருவர் பணக்காரரா இல்லையா என்பது நிர்ணயிக்கப்படுகிறது. பைபிளில், யோபு, ஆபிரகாம், சாலமோன் போன்ற பல ஐசுவரியவான்களைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள் பரலோகத்திற்கு செல்வது எளிதானதா? கடினமானதா?இயேசுகிறிஸ்து ஐசுவரியவான்கள் பரலோகத்துக்குச் செல்லவே முடியாது என்று கூறவில்லை. 'கடினம்' என்று தான் சொல்கிறார். ஊசியின் காது என்பதை ஆங்கிலத்தில், 'ஐ ஆப் தி நீடில்' என்பர். 'ஐ' என்றால் 'கண்'. ஆனால், தமிழில் 'ஊசியின் காது' என்கிறோம். எனவே, இந்த வசனம் இது ஊசியையும், அதன் துவாரத்தையும் குறிக்கவில்லை.முற்காலத்தில், சூரியன் அஸ்தமனமானதும், கோட்டையின் பிரதான வாசல் கதவுகள் மூடப்பட்டு விடும். இரவு வேளையில், வெளியூரிலிருந்து வரும் பணக்காரர்கள், ஒட்டகத்தில் தங்கள் சரக்குகளோடு பட்டணத்திற்குள் செல்ல, 'திட்டிவாசல்' எனப்படும் சிறிய கதவு திறந்து விடப்படும். இந்த கதவுகள் வழியே, ஒட்டகங்கள் போன்ற விநோத உடல்வாகு கொண்ட மிருகங்கள் உள்ளே செல்ல மிகவும் சிரமப்படும். இதைத்தான் 'ஐசுவரியவானோடு' ஒப்பிடுகிறார் இயேசு.தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க உனக்கு உண்டானவைகளை விற்று தரித்திரருக்கு கொடு (மாற்கு 10:21) என்று ஒருவனிடத்தில் கூறிவிட்டு, 'ஐசுவரியமுள்ளனவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது எவ்வளவு அரிதாயிருக்கிறது'(மாற்கு 10:23) என்று தன் சீடரித்தில், நாம் மேலே பார்த்ததைக் கூறினார். ஒருவன் தேவனுடைய ராஜ்யத்திற்குச் செல்வது கடவுளுடைய கிருபையே.ஐசுவரியவானாக இருந்தாலும் சரி, வேறு யாராக இருந்தாலும் சரி...முதலில் கடவுளைத் தேட வேண்டும். முதலில் தேவனையும், அவருடைய நீதியையும் தேடும்போது மற்றவை கூட கொடுக்கப்படும் என்கிறார் இயேசுகிறிஸ்து.ஐசுவரியவான் எனப்படும் பணக்காரர்கள், கடவுளுக்கு முதலிடம் கொடுங்கள். தேவனுடைய சுத்த கிருபையே அவர்களை பரலோகத்திற்கு அழைத்துச் செல்லும் என்பதில் ஐயமில்லை.