எதற்கு வீண் ஆடம்பரம்?
திருமணம், புதுவீடு புகுதல்... இவற்றை எல்லாம் பிரம்மாண்டமாக, ஆடம்பரமாகக் கொண்டாடுகிறார்கள். எங்கள் வீட்டுத் திருமணத்திற்கு சாப்பாட்டிற்கு மட்டுமே ஐந்து லட்சம் செலவழித்தேன். கச்சேரிக்கு வந்தவர் லட்சம் ரூபாய் வாங்கிக் கொண்டார்... பந்தலுக்கு மட்டும் ஐம்பதாயிரம், அலங்காரத்துக்கு 20 ஆயிரம், மண்டபமோ 3 லட்சம் என திருமண பந்த விழாவை ஏலம் விடுகிறார்கள்.பைபிளில் யோவான் 5ம் அதிகாரத்தில், ''ஊர் முழுக்க பண்டிகை கொண்டாடப்பட்ட அந்த வேளையிலும், இயேசுநாதர் பெதஸ்தா குளத்தருகே அமர்ந்து நோயாளியைக் குணப்படுத்திக் கொண்டிருந்தார்,'' என சொல்லப்பட்டிருக்கிறது.இதன் உள்ளர்த்தம் என்ன? விழாக்கள் வருவதே ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்பதற்காகத்தான். கிறிஸ்துமஸ், ஈஸ்டர் இப்படி பல திருநாட்கள் வருகிறது... அன்று ஆடம்பரமாக செலவழித்தது பற்றி வேண்டுமானால் நம்மிடம் கணக்கு இருக்கும்! ஆனால், எத்தனை ஏழைகளுக்கு உதவி செய்தோம் என கணக்கு போட்டுப் பாருங்கள். நம் இல்ல விழாக்களில் விருந்துண்டவர்களில் எத்தனை ஏழைகள் இருந்தனர் என எண்ணிப் பாருங்கள்.ஏழைகள் உயர்த்தப்பட வேண்டும் என்பதற்காகவே விழாக்களை நடத்த வேண்டும். ஆடம்பரமாய் செலவழியும் பணத்தை ஏழை இல்லங்களுக்குக் கொடுப்பதே கருணையுள்ள செயல். விழாக்களை எளிமையாகக் கொண்டாடப் பழகுவோம்.