பிரச்னைகளுடன் மோதிப்பார்
1761ம் ஆண்டில் வில்லியம்கேரி என்பவர் இந்தியா வந்தார். மொழிகளை எளிதாகக் கற்கும் திறமை அவரிடம் இருந்ததால், பரிசுத்த வேதாகமத்தை (பைபிள்) இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கும் பணியில் ஈடுபட்டார். 1812ல், வில்லியம்கேரி தயாரித்த கைப்பிரதிகளும், அச்சகமும் எதிர்பாராத வகையில் நெருப்புக்கு இரையாகி விட்டது. அவரின் இறைத்தொண்டிற்கு இடையூறு வந்ததே என்று பலரும் ஏங்கினர். ஆயினும் கேரி சற்றும் கவலைப்படவில்லை. ''நீங்கள் அமர்ந்திருந்து, நானே தேவனென்று அறிந்து கொள்ளுங்கள்''(சங்.46:10) என்னும் வசனத்தின் படி, ஆர்வமுடன் ஒரு பிரசங்கம் ஆற்றினார். இஷ்டப்படி நம்மை நடத்துவதற்கு இறைவனுக்கு உரிமையுண்டு. அவருடைய சித்தத்திற்கு உடன்பட வேண்டியதே நமக்கு கடமை என்பது பிரசங்கத்தின் கருப்பொருளாக இருந்தது.வேதத்தின் மேல் பிரியமாயிருந்த கேரியின் உள்ளத்தை அறிந்து, புதிய அச்சு இயந்திரங்களை மக்கள் வாங்கிக் கொடுத்தனர். அதன் விளைவாக சமஸ்கிருதம், வங்காளம், இந்தி, பஞ்சாபி, மராத்தி, ஒரியா உள்ளிட்ட 34 மொழிகளில் வேதத்தை மொழி பெயர்த்து வெளியிட்டார். முன்பை விட பெரிய அச்சகம் உருவானது. மிகப்பெரிய சாதனை படைத்தார். இவர் மொழிபெயர்த்த சமஸ்கிருத வேதாகமம், நாராயண வர்மன் திலக் என்ற பெரியவரை கவர்ந்தது. அவர் தமிழ் வித்வான் கிருஷ்ணபிள்ளையைப் போன்று, இயேசுவை வர்ணித்து நூற்றுக்கணக்கான கவிதைகளை மராத்தியில் எழுதினார். வாழ்க்கையில் பிரச்னை என்பது சகஜமாய் நேரக்கூடிய ஒன்று தான். ஆனால், கலங்காத மனதுடன், அவற்றுடன் மோதி வெற்றி கொள்ள, கேரியின் வாழ்க்கை நமக்கு உதாரணமாய் இருக்கிறது.