புண்ணியம் செய்தேனோ...
பழநி முருகனுக்கு பூஜை செய்து வந்தவர் ஈசான சிவாச்சாரிய சுவாமிகள். இவர் கோயில் பூஜை நடைமுறைகளை விளக்கும் ஆகமங்களைத் தேடி காசிக்குச் சென்றார். அங்கு அகில பாரத ஹிந்து மகாசபையை நிறுவிய மதன்மோகன் மாளவியாவை சந்தித்தார். தன் குருநாதரான ஆறுமுகநாவலர் உபதேசித்த கருத்துக்களை அவருக்கு எடுத்துச் சொன்னார். அப்போது மாளவியா 'இதைக் கேட்க நான் என்ன புண்ணியம் செய்தேனோ' என பெருமிதம் கொண்டார். அந்த ஆன்மிகத் தகவல்கள் இவை. * கடவுள் எங்கும் இருக்கிறார்; அவர் எல்லாம் அறிவார்; இரக்கம் உடையவர்; அவரே நம்மை காக்கிறார்; கடவுளை எந்நாளும் வணங்கு.* பெற்றோர், ஆசிரியரை தினமும் வணங்கு.* ஆசிரியரின் அறிவுரைகளைப் பின்பற்று. * கல்வியே அழியாத செல்வம்.* தினமும் கோயிலில் வழிபாடு செய். * முடிந்த புண்ணிய செயல்களில் ஈடுபடு. * உண்மையைப் பேசு; அளவாகப் பேசு.* உயிர்கள் மீது இரக்கப்படு. அதுவே உயர்ந்த குணம். * பொறாமை, கோபம் பொல்லாதது. அதை விட்டொழி.* அனைவரிடமும் இனிமையாகப் பேசு. * எல்லோரிடமும் அன்பாகப் பழகு. * யாசகம்(பிச்சை) கேட்பவருக்கு ஏதாவது கொடு.* பெரியவர்களைக் கண்டதும் வணங்கு.* தினமும் ஏழைக்கு ஒரு பிடி அரிசி கொடு.* அறிவே மேலான ஆபரணம். * காலையில் எழுந்ததும் கடவுளை தியானம் செய்* பசித்தால் மட்டும் சாப்பிடு. ருசிக்காக சாப்பிடாதே. உணவைச் சிந்தாதே. * குருவின் வார்த்தையை தட்டாதே.* காலம் போனால் வராது; நேரத்தை வீணாக்காதே. * பாவச்செயலைச் செய்யாதே. * மதுவைக் குடிக்காதே. * பிறரை நிந்தனை செய்யாதே. * சூது, களவு, பொய் கூடாது. * பொல்லாதவர்களுடன் நட்பு கொள்ளாதே. * உயிர்களை துன்புறுத்தாதே. * அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படாதே. * எண்ணம், வார்த்தை, செயலால் தீங்கு செய்யாதே. * பொய்சாட்சி சொல்லாதே. * பகல் பொழுதில் துாங்காதே. * அழுக்கு, ஈர ஆடைகளை உடுத்தாதே. * அழுகிய பழங்களை புசிக்காதே. * புகைப்பிடிக்காதே. * படிக்கின்ற போது விளையாடாதே.* எந்த உயிருக்கும் தீங்கு செய்யாதே. * பெரியோர்களின் எதிரே சிரிக்காதே. * மூத்தவர்களை பெயர் சொல்லி அழைக்காதே.