கேளுங்க சொல்கிறோம்
எம்.பிருந்தா, கோவில்பட்டி, துாத்துக்குடி.*கும்பகோணத்தை 'குடமூக்கு' என்பது ஏன்?பிரளயம் முடிந்ததும் மீண்டும் உலகைப் படைக்க அமுத கலசத்தை அம்பெய்து உடைத்தார் சிவன். அக்குடத்தின் மூக்குப்பகுதி விழுந்த இடமே 'குடமூக்கு' என்னும் கும்பகோணம். இங்கு சிவன் அருள்புரிகிறார். கே.ஷிவானி, மடிவாலா, பெங்களூரு.*மாசிமகம், மகாமகம் இரண்டும் ஒன்றா...இல்லை. ஆண்டுக்கு ஒருமுறை மாசியில் வருவது மாசிமகம். 12 ஆண்டுக்கு ஒருமுறை கும்ப ராசியில் குருபகவான் தங்கும் போது வருவது மகாமகம். வி.பிரணவ், ஸ்ரீவில்லிபுத்துார், விருதுநகர்.*சப்தரிஷிகளின் பெயர்கள் என்னென்ன?சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர், கபிலர், ரிபு, பஞ்சசிகர் கே.அபிராமி, சின்னமனுார், தேனி.*மாசிமகத்தில் புனித நதியில் நீராடுவது அவசியமா... சிவன் உடைத்த குடத்தில் இருந்த அமுதம் சிந்திய இடம் மகாமகக்குளம். மாசிமகத்தன்று எல்லா நதிகளும் இங்கு நீராடி புனிதம் அடைவதால் நாமும் நீராடுவது அவசியம். எம்.ஆர்த்தி, பல்லடம், திருப்பூர்.*சஞ்சீவி ஆஞ்சநேயர் படத்தை வீட்டில் வழிபடலாமா...சஞ்சீவி ஆஞ்சநேயர், பட்டாபிேஷக ராமர், தாண்டவமாடும் நடராஜர், குழலுாதும் கிருஷ்ணர், பத்ரகாளி படங்களை வீட்டில் வழிபடலாம். பி.ஸ்ரீதேவி, களியக்காவிளை, கன்னியாகுமரி.*உறியடி உற்ஸவம் நடத்துவது ஏன்?கடவுள் அருளால் தடைகளை தகர்த்து, குறிக்கோளை அடைய வேண்டும் என உணர்த்துவது உறியடி உற்ஸவம். எல்.வைதேகி, கருவடிப்பாளையம், புதுச்சேரி.*மகத்தில் பிறந்தால் ஜெகத்தை ஆளலாம் என்கிறார்களே...தட்சன் மகளாக பார்வதி அவதரித்தது மாசிமகத்தில் தான். அவளே ராஜ ராஜேஸ்வரியாக உலகை ஆள்கிறாள். அதனால் இந்த பழமொழி உண்டானது. குடும்ப நிர்வாகத்தை நடத்துவதும் ஜெகத்தை ஆள்வது போலத்தான். எம்.ராகவன், ஸ்ரீபெரும்புதுார், காஞ்சிபுரம்.*சிலர் விளம்பர நோக்கில் சேவையில் ஈடுபடுகிறார்களே...விளம்பரம் இன்றி தொண்டு செய்பவரை கடவுளே பெருமைப்படுத்துவார். ஆனால் விளம்பர நோக்குடன் சேவையில் ஈடுபடக் கூடாது சி.சசிதரன், கல்யாண்புரி, டில்லி.*கம்ப சூத்திரம் என்றால் என்ன?கம்பரின் ராமாயணப் பாடல்கள் நயம் மிக்கவை. சிறப்பு பாடமாகத் தமிழை படிப்பவர்களுக்கு அதில் இருந்து விசேஷ பயிற்சி கொடுப்பர். அந்த பாடல்களுக்கு 'கம்ப சூத்திரம்' என்று பெயர்.