திருச்செந்துாரின் கடலோரத்தில்....
மே 22, 2024 - வைகாசி விசாகம்* அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடு திருச்செந்துார். * முருகன் அவதரித்த நோக்கமே அசுரர்களை அழிப்பதுதான். அது நிறைவேற்றியது இங்கு தான். * அறுபடை வீடுகளில் பெரிய கோயில் திருச்செந்துார். * அலைவாய், திருச்சீரலைவாய், வெற்றி நகர், வியாழ ேஷத்திரம், அலைவாய்ச் சேறல், செந்தில், திரிபுவனமாதேவி சதுர்வேதி மங்கலம், சிந்துபுரம், ஜெயந்திபுரம், வீரவாகுபட்டினம் என பல பெயர்கள் உண்டு. * திருச்செந்துாரில் பாலசுப்பிரமணிய சுவாமி, சண்முகர் என இரண்டு மூலவர்கள் உள்ளனர். பாலசுப்பிரமணிய சுவாமி கிழக்கு நோக்கியும், சண்முகர் தெற்கு நோக்கியும் உள்ளனர்.* காவல் தெய்வமான வீரபாகுவின் பெயரால் இத்தலம் வீரவாகு பட்டினம் என்றும் அழைக்கப்படுகிறது. வீரபாகுவுக்கு பூஜை முடிந்த பின்னரே முருகனுக்கு பூஜை நடக்கும். * பாலசுப்பிரமணியருக்கு வெள்ளை நிற ஆடையும், சண்முகருக்கு பச்சை நிற ஆடையும் அணிவிக்கின்றனர். * மூலவருக்கு பின்புறம் சுரங்க அறையில் முருகன் வழிபட்ட பஞ்சலிங்கங்களை தரிசிக்கலாம். இந்த அறையை பாம்பறை என்பர். * கோயிலின் இடது பக்கத்தில் வள்ளிக்குகை உள்ளது. இதன் முன்புள்ள சந்தன மலையில் தொட்டில் கட்டினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். * சண்முகர், ஜெயந்தி நாதர், குமர விடங்கர், அலைவாய் பெருமான் என நான்கு உற்ஸவர்கள் இங்குள்ளனர். இவர்களில் குமரவிடங்கரை 'மாப்பிள்ளை சுவாமி' என அழைப்பர். * ராஜகோபுரம் 17ம் நுாற்றாண்டில் கட்டப்பட்டது. 9 அடுக்குகளை கொண்ட இதன் உயரம் 157 அடி.* திருச்செந்துார் மீது அருணகிரி நாதர் 83 திருப்புகழ் பாடல்கள் பாடியுள்ளார். இதை பாடுவோர் கந்தலோகத்தில் வாழும் புண்ணியம் பெறுவர். * பிரணவ மந்திரமான ஓம் எனும் வடிவில் திருச்செந்துார் கோயில் உள்ளது.* மூலவர் முருகனுக்கு தங்க அங்கி அணிவிக்கும் போது மற்ற தெய்வங்களுக்கும் தங்க அங்கி அணிவிக்கப்படுகிறது. * 124 துாண்கள் கொண்ட சண்முக விலாசம் என்னும் மண்டபம் 120 அடி உயரம், 60 அடி அகலம் கொண்டது. * திருச்செந்துாரில் மூலவர் முன்புள்ள இடம் மணியடி. இங்கு நின்று சுவாமியை தரிசிப்பது விசேஷம். * இங்குள்ள நாழிக்கிணற்றில் நீராடிய பிறகே கடலில் நீராட வேண்டும். இதன் ஆழம் 24 அடி.* திருச்செந்துார் கோயில் திருப்பணிக்காக தங்களின் வாழ்நாளை அர்ப்பணித்தவர்கள் மவுனசாமி, காசிநாதசுவாமி, ஆறுமுகசாமி. இவர்களின் சமாதி நாழிக்கிணற்றின் அருகில் உள்ளது.* மன்னார் வளைகுடா கடலில் அலை வரிசையாக மோதும் விதத்தில் கோயில் இருக்கிறது. இதனால் இதை 'திருச்சீர் அலைவாய்' என அழைக்கின்றனர். * கோயிலுக்குச் செல்லும் முன் துாண்டுகை விநாயகரை வழிபட வேண்டும். * மாமரமாக மாறி நின்ற சூரபத்மனை, வேலால் பிளந்த இடம் மாப்பாடு. திருச்செந்துாரில் இருந்து 3 கி.மீ., துாரத்தில் உள்ளது. தற்போது இது 'மணப்பாடு' எனப்படுகிறது. * திருச்செந்துாருக்கு நடுவில் உள்ளது சிவக்கொழுந்தீசுவரர் கோயில். இதற்கு ஆதிமுருகன் கோயில் என்றும் பெயருண்டு. * தெய்வானை திருமணத்தன்று ராஜகோபுரக் கதவு திறக்கப்படும்.* அதிகாலையில் நடக்கும் விஸ்வரூப தரிசனம் (நிர்மால்ய பூஜை) காண்பது சிறப்பு. * ஆதிசங்கரர், குமரகுருபரர், பகழிக்கூத்தர், உக்கிரபாண்டியரின் மகன் போன்ற அருளாளர்கள் இங்கு அருள் பெற்றுள்ளனர். * 'ஆறுமுக நயினார்' என்றும் முருகனுக்கு பெயருண்டு. இப்பகுதியில் ஆறுமுக நயினார் என பெயரிடுவர். * வீரபாண்டிய கட்ட பொம்மனும், அவர் மனைவி ஜக்கம்மாவும் தங்க ஆபரணங்களை காணிக்கையாக வழங்கியுள்ளனர்.* தவக்கோலத்தில் சுப்பிரமணியர் இருப்பதால் காரம், புளி பிரசாதத்தில் சேர்ப்பதில்லை. ஆனால் சண்முகரின் பிரசாதத்தில் உண்டு. * முருகனுக்கு படைக்கப்படும் நைவேத்யம்: சிறுபருப்புக் கஞ்சி, பால்கோவா, வடை, சர்க்கரை பொங்கல், கல்கண்டு, பேரீச்சை, பொரி, தோசை, சுகியன், தேன்குழல், அதிரசம், அப்பம், பிட்டமுது, தினைமாவு. * உச்சிக்கால பூஜைக்கு முன் இலையிட்டு சோறு, மோர்க் குழம்பு, பருப்புப் பொடி, நெய், தயிர், தீர்த்தம் படைத்த பின்னரே மூலவரின் பூஜையை தொடங்குவர். இரவு பூஜையில் பால், சுக்கு, வெந்நீரை நைவேத்யம் செய்வர்.* பிரகாரத் துாண்களில் கந்த சஷ்டி கவசம், உள்பிரகாரங்களில் தல வரலாற்று படங்கள் உள்ளன. * திருச்செந்துாரில் உச்சிக்கால பூஜை முடிந்து மணி ஒலித்த பிறகே வீரபாண்டிய கட்டபொம்மன் மதிய உணவைச் சாப்பிடுவார். * 100 கிலோ எடை கொண்ட மணி ஒன்று ராஜகோபுரம் 9ம் அறையில் பொருத்தப்பட்டுள்ளது.* சூரனை சம்ஹாரம் செய்த முருகன் தாமரையால் சிவபெருமானைப் பூஜித்தார். அதை உணர்த்தும் வகையில் மூலவர் சிலையின் வலக்கையில் தாமரை உள்ளது. * ஆவணி விழாவின் போது மும்மூர்த்தியான பிரம்மா, விஷ்ணு, சிவன் அம்சமாக முருகன் காட்சி தருகிறார். * உச்சிக்கால பூஜை முடிந்ததும் மேளதாளத்துடன் சென்று பால், அன்னத்தை கடலில் கரைப்பார்கள். இதை கங்கை பூஜை என்கின்றனர். * திருச்செந்துாரில் உள்ள தங்க ரதத்தில் அறுபடை வீட்டு முருகன் சிலைகள் அறுங்கோண வடிவத்தில் இடம் பெற்றுள்ளன. * அழகும், இளமையும் கொண்ட திருச்செந்துார் முருகனின் பெருமைகளைக் கேட்டாலும், படித்தாலும் மனதில் நிம்மதி, செல்வ வளம் சேரும்.