கேளுங்க சொல்கிறோம்!
** விநாயகருக்காக அருகம்புல் மாலை வாங்கி வைத்திருந்தேன். மாடு பிடுங்கித் தின்றுவிட்டது. இதனால் தோஷம் நேருமா?சு.சம்பூரணி, மதுரைமாட்டுக்கு புல் கொடுப்பதை 'கோக்ராஸம்' என்னும் விசேஷ தர்மமாக சாஸ்திரம் குறிப்பிடுகிறது.பசுவைப் பார்த்தாலே தோஷம் விலகும் போது, அதற்கு புல், அகத்திக்கீரை, பழம் கொடுத்தாலோ, அது தானாக எடுத்துக் கொண்டாலோ நன்மை உண்டாகும். லட்சுமி கடாட்சம் நிலைக்கும். சுக்கிரனால் ஏற்படும் தோஷம் நீங்கி வளம் மிக்க வாழ்வு அமையும். இன்னொரு மாலை வாங்கி விநாயகருக்கு சூட்டி விடுங்கள்.* சர்க்கரை நோய் இருப்பதால், காலை டிபனை முடித்தபின் வீட்டு பூஜையைச் செய்கிறேன். இது சரியா? வி.சிதம்பரம், கோவைதாராளமாக சாப்பிட்ட பிறகே பூஜை செய்யுங்கள். வழிபாட்டை தவறாமல் செய்தாலே போதும். * விஞ்ஞான வளர்ச்சியால் ஆன்மிக ஈடுபாடு குறைந்துள்ளதா?எஸ்.முரளி, குறிஞ்சிப்பாடிவிஞ்ஞானம் உண்மையை வெளியுலகில் தேட முயற்சிக்கிறது. ஆன்மிகமோ உண்மையை தனக்குள்ளேயே தேடுகிறது. கண்ணுக்குப் புலப்படாத அருட்சக்தி இருப்பதை விஞ்ஞானிகளும் ஒப்புக் கொள்வர். ஆன்மிகத்தில் மூடநம்பிக்கை சேரும் போது மட்டுமே விஞ்ஞானம் அதை மறுக்கிறது. * பக்தியில் ஈடுபட முடியாது என்று மறுக்கும் இளைஞர்கள் பற்றி...நா.சத்தியமூர்த்தி, போரூர்ஆடம்பரம், கவர்ச்சி என இந்தக் காலத்தில் இளைஞர்கள் மணிக்கணக்காக பயனற்ற விஷயத்தில் ஈடுபடுகின்றனர். தினமும் அரை நிமிடமாவது கடவுளை நினைக்க வேண்டும் என்கிறார் அருணகிரிநாதர். காலையில் எழும் போது 'முருகா, ஜனார்த்தனா, நமசிவாய' என்று ஒரு விநாடி கூட சொல்லவா இவர்களுக்கு நேரமிருக்காது... பக்தி இல்லாதவனை உயிரற்ற ஜடப்பொருளாகவும், அறிவற்ற முட்டாளாகவும் குறிப்பிடுகிறார் அருணகிரியார். இளமையில் பொருளுடன் அருளையும் தேட வேண்டியது கடமை. * கோவிலில் மூலவரை அர்ச்சித்த பின் நவக்கிரக அர்ச்சனை செய்யலாமா? ஏ.உஷாராணி, திருப்பூர்மூலவருக்கு அர்ச்சனை செய்த பிறகே நவக்கிரகங்களுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். நவக்கிரகங்களுக்கு என தனியாக அர்ச்சனை செய்ய விரும்பினாலும், மூலவரைத் தரிசித்த பிறகு செய்வது அவசியம்.* கோவிலில் பிறர் ஏற்றி வைத்த விளக்கு அணைந்திருந்தால் அதை நாம் ஏற்றலாமா? பி.சுமதி, கோவூர்மிகவும் புண்ணியம். வேதாரண்யம் மறைநாதசுவாமி கோவில் கருவறையில் ஒரு எலி திரிந்து கொண்டிருந்தது. அங்கே விளக்கு அணையும் நிலையில் இருந்தது. அதிலிருந்த நெய்யைக் குடிப்பதற்காக விளக்கில் எலி ஏற, அதன் மூக்கு திரியில் பட்டு அணைய இருந்த தீபம் சுடர் விட்டு பிரகாசித்தது. அந்த புண்ணியம் காரணமாக மறுபிறவியில் மகாபலி சக்கரவர்த்தியாக பிறப்பு எடுத்து, திருமாலின் திருவடியை அடையும் பேறு பெற்றது. இதன் அடிப்படையில், அணைந்த தீபத்தை ஏற்றி வைப்போருக்கு சக்கரவர்த்தி யோகம் உண்டாகும் என்பதை அறிய முடிகிறது.