உள்ளூர் செய்திகள்

400 மடங்கு

ஆழ்வார்கள் பாடிய 4000 பாடல்களை தொகுத்தவர் நாதமுனிகள். இதுவே 'நாலாயிர திவ்ய பிரபந்தம்' எனப்படுகிறது.ஒருமுறை இவர் 'ஆராவமுதே' என்று தொடங்கும் திவ்ய பிரபந்த பாசுரத்தை சிலர் பாடக் கேட்டு மெய்மறந்தார். அதில் 'ஓராயிரத்துள் இப்பத்தும்' என்னும் அடி வந்தது. அவர்களிடம் “அன்பர்களே! நீங்கள் பாடிய பாடலின் பொருள்படி, ஆயிரத்தில் பத்து பாடல் போக மீதி 990 பாடல்கள் எங்கே?” எனக் கேட்டார். அவர்களுக்கு இதற்கான பதில் தெரியவில்லை. ஆனால் அவர்கள் பாசுரங்களைப் பெறுவதற்குரிய வழிமுறையை கூறினர். “மதுரகவியாழ்வார் பாசுரங்களை யார் ஒருவர் 12 ஆயிரம் முறை பாடுகிறாரோ அவர் முன் ஆழ்வாரே தோன்றி அருள்புரிவார்'' என்றனர்.அதன்படி நாதமுனிகள் பத்து பாடல்கள் மூலம் மதுரகவியாழ்வாரின் அருளால் நானுாறு மடங்காக நாலாயிரம் பாசுரங்களை பெற்றார். பாடல்களுக்கு இசையமைத்து 'திவ்யபிரபந்தம்' என்றும் பெயரிட்டார். சீடர்களான உய்யக்கொண்டார், குருகை காவலப்பன், மேலை அகத்தாழ்வான் மூலம் பாசுரங்களை கோயில்களில் பாட ஏற்பாடும் செய்தார்.