குறையில்லா வாழ்வுக்கு...
நவராத்திரியில் கொலு அமைத்து வழிபடுகிறோம். 'கொலு' என்றால் அழகு. பலவித கோலங்களில் அம்மன் அழகுடன் காட்சியளிப்பதால் 'கொலு' எனப் பெயர் வந்தது.கலசத்தில் அம்பிகை: கொலு வைப்பதற்கு முன்பு வீட்டை சுத்தமாக்கி, வண்ணக்கோலமிட வேண்டும். வாசலில் மாவிலைத் தோரணம் கட்ட வேண்டும். மரப்பலகை அல்லது அட்டைகளால் மண்டபம் அமைத்து அதன் நடுவே உயரமான பலகையை சிம்மாசனமாக அமைக்க வேண்டும். அதன் மீது பட்டுப்புடவை விரித்து அம்மன் சிலையை வைக்க வேண்டும். அதன் வலப்புறத்தில் கலசம் வைத்து அதை அம்மனாக கருதி தினமும் வழிபட வேண்டும். அடுக்கும் விதம்: ஒன்று முதல் ஆறாம் படி வரை ஓரறிவு முதல் ஆறறிவு உயிர்களை அடுக்க வேண்டும். முதல்படியில் புல், செடி, கொடிகளும், இரண்டாம் படியில் சங்கு, சிப்பி பொம்மைகளும், மூன்றாம் படியில் ஈ, எறும்பு முதலிய உயிர்களும், நான்காம் படியில் வண்டு, நண்டு போன்றவையும், ஐந்தாம்படியில் பறவை, மிருகங்களும், ஆறாம்படியில் மனிதர்களும், ஏழாம் படியில் முனிவர், மகான் போன்றோரும், எட்டாம் படியில் தேவர்கள், நவக்கிரகங்களும், ஒன்பதாம் படியில் தெய்வச் சிலைகளும் இடம் பெற வேண்டும். இத்துடன் தெப்பக்குளம், கோயில், தோட்டம், சந்தை, திருமண வைபவம், கடைத்தெரு போன்றவற்றையும் அடுக்கலாம். தத்துவம்: கொலு படிகளைப் போல வாழ்வில் மனிதன் பல படிநிலைகளைக் கடக்க வேண்டியிருக்கிறது. மனித நிலையில் இருந்து தெய்வ நிலைக்கு உயர வேண்டும் என்பதே இதன் நோக்கம். ஓரறிவு உயிராக இருந்த நாம் இந்த பிறவியில் ஆறறிவுள்ள மனிதர்களாக இருக்கிறோம். அன்பு வழியில் எல்லா உயிர்களையும் நேசித்து வாழ்ந்தால் அம்பிகை அருளால் தெய்வ நிலைக்கு முன்னேறலாம் என்பதே கொலு தத்துவம். கல்வி, செல்வம், வீரம் ஆகிய மூன்றும் குடும்பத்தில் நிறைந்திருக்கும். வாழ்வில் குறையேதும் இருக்காது.