உள்ளூர் செய்திகள்

காக்கும் கவசம்

திருநெல்வேலியைச் சேர்ந்த வியாபாரி சிவநேசர். பக்தரான இவர் திங்கள் தோறும்(சோமவாரம்) நெல்லையப்பரை தரிசிக்க தவறியதில்லை. வியாபாரத்தின் மூலம் பணம் குவியவே வெளியூரில் கிளைகள் தொடங்கினார். மாதந்தோறும் வெளியூர்களுக்குச் சென்று வசூல் செய்து வந்தார். பணத்தின் பயன் பிறருக்கு கொடுப்பதே என்ற அடிப்படையில் சிவநேசர் அன்னதானம், ஏழைக்கு உதவி, கோயில் திருப்பணி என நற்செயலுக்காக செலவிட்டார். சிவநேசரின் மகன் பழநியப்பனும் தந்தையைப் போல பண்புடன் வளர்ந்தான்.ஒருமுறை சிவநேசருக்கு உடல்நலம் சரியில்லாததால் வசூல் செய்ய மகன் புறப்பட்டான். அவனுக்கு திருநீறு பூசிவிட்டு, ''இந்த திருநீற்றை பெட்டியில் வைத்துக் கொள். பொழுது சாய்ந்தால் பயணத்தை தொடராதே'' என அனுப்பினார். பழனியப்பன் வசூல் செய்து விட்டு தாராபுரத்தை அடைந்தபோது பொழுது சாய்ந்தது. அங்குள்ள கடையின் பொறுப்பாளர் ஊர் எல்லையில் ஒரு மாடி வீட்டில் குடியிருந்தார். அங்கு பணத்துடன் தங்கினான் பழனியப்பன். பொறுப்பாளர் தீய எண்ணத்துடன் பழநியப்பனைக் கொன்று பணத்தை எடுக்க திட்டமிட்டார். வீட்டின் மாடி அறையில் பழனியப்பன் திருநீறு பூசியபடி துாங்கினான். அருகில் பெட்டி இருந்தது. கனவில் துறவி போல தோன்றிய சிவன், ''இங்கு இருக்காதே! எழுந்திரு'' எனச் சொல்லவே விழித்தான். உடம்பெங்கும் வியர்த்தது. அறையை விட்டு வெளியேறி எதிர்வீட்டுத் திண்ணையில் பதுங்கினான். சற்றுநேரத்தில் இருளில் ஒரு உருவம் மாடிக்குச் சென்றது. சிவ...சிவ...என ஜபித்தபடி பழனியப்பன் நின்றிருந்தான். அந்நேரத்தில் அவன் நின்றிருந்த வீட்டின் சொந்தக்காரர் தற்செயலாக வெளியில் வந்தார். நடந்ததை கேட்டு, ''அந்தப் பாதகன் பணத்திற்காக எதுவும் செய்வானே'' என்றபடியே அவனுடன் நடப்பதை கண்காணித்தார். அங்கிருந்து கையில் எதையோ சுமந்தபடி பொறுப்பாளர் வெளியேறுவது தெரிந்தது. இருவரும் ரகசியமாக பின்தொடர்ந்தனர். வீட்டின் கொல்லைப்புறம் சென்ற பொறுப்பாளர், கையில் இருந்ததை அங்கொரு பள்ளத்தில் வீசியது கண்டு, ''என்னடா செய்கிறாய்?'' என எதிர்வீட்டுக்காரர் குரலெழுப்ப பொறுப்பாளர் நடுங்கினார். எதிர் வீட்டுக்காரருடன், பழனியப்பன் நிற்பதைக் கண்டு திடுக்கிட்டார்.பள்ளத்தில் வீசியதை எடுத்துப் பார்த்தார். அது அவரது மகனின் தலையாக இருந்தது. ஆம்... தந்தைக்குத் தெரியாமல் தெருக்கூத்து பார்க்கப் போன அவரது மகன், பழனியப்பன் வெளியேறிதும் அந்த இடத்தில் படுத்திருந்தான். பணத்தை திருட வந்த அவசரத்தில் உண்மை தெரியாமல் தன் மகனையே கொன்று விட்டார்.'கெடுவான் கேடு நினைப்பான்' என்பது இந்த விஷயத்தில் உண்மையாகி விட்டது. நடந்ததை அறிந்த சிவநேசர் நன்றியுணர்வுடன் நெல்லையப்பருக்கு அபிேஷகம் செய்து அடியார்களுக்கு அன்னதானம் அளித்தார். பக்தியும், தர்ம சிந்தனையும் உயிர் காக்கும் கவசங்கள் என்றால் மிகையில்லை.