உள்ளூர் செய்திகள்

பாரதியாரின் ஆத்திசூடி - 1

எண்ணுவது உயர்வு பாரதியாரின் பரிமாணம் பெரியது. கவிதை, கட்டுரை, சுதந்திர கீதங்கள், பாஞ்சாலி சபதம் என பல படைப்புகளை எழுதியவர் அவர். ஆனால் எந்தத் தலைமுறைக்கும் பொருத்தமாக ஒன்றை அவர் தந்திருக்கிறார் என்றால் அது புதிய ஆத்திசூடி தான்.அவ்வையாரின் ஆத்திசூடியை பின்பற்றி 100 ஆண்டுகளுக்கு முன்பே இதை எழுதி விட்டார். இது தனிமனித முன்னேற்றத்திற்கு மட்டுமின்றி நிர்வாகத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.இப்போது வழக்கில் உள்ள 'பன்ஞ்ச் டயலாக்' என்பதில் வாழ்வை புரட்டிப் போடும் அளவிற்கு வார்த்தைகள் இருக்கும். நுாறு ஆண்டுகளுக்கு முன்பே இதை சொன்னவர் பாரதியார். அந்த உபதேசங்களை பின்பற்றுவதே அவருக்கு நாம் செய்யும் அஞ்சலி. தன் மூன்று படைப்புகளுக்கு மட்டும் 'புது அல்லது புதிய' என்னும் சொல்லை அவர் பயன்படுத்தி உள்ளார். அவை - புதிய ஆத்திசூடி, புதிய கோணாங்கி, புதுமைப்பெண்.'திறம் பாட வந்த கவிஞன், அறம் பாட வந்த அறிஞன்' என போற்றப்படும் பாரதியார் நம் தலைவனாகவும் திகழ்கிறார். அவரின் தலைமைப் பண்பு எந்த காலத்திற்கும் பொருத்தமானதாகும். நிர்வாக கோட்பாடுகள் (மேனேஜ்மென்ட் பிரின்சிபல்ஸ்) நிறைந்தது புதிய ஆத்திசூடி.எண்ணுவது உயர்வு இது பாரதியாரின் வைர வரிகள். மனிதன் வெற்றி பெற இரண்டு வார்த்தை போதும். பக்கம் பக்கமாக படிப்பதெல்லாம் அவரவர் விருப்பம். ஆனால் அதிகம் மெனக்கெடாமல் மனிதன் வாழலாம் என்பதை வேதம், ஆத்திசூடி, திருக்குறள் போன்றவை நமக்கு உணர்த்துகிறது. அந்த இரண்டு வார்த்தைகளை சரியாக பின்பற்றினால் நாம் நலமாக வாழலாம். சமஸ்கிருதத்தில் - சத்யம் வத (உண்மை பேசு) தர்மம் சர (தர்மம் செய்) என்பார்கள். அதையே 'அறம் செய்ய விரும்பு' என அவ்வையார் ஆத்திசூடியில் சொல்கிறார்.சத்யமேவ ஜெயதே - வாய்மையே வெல்லும் (தமிழக அரசின் கோபுர சின்னத்தின் கீழ் இருப்பது. எல்.ஐ.சி.,யின் சிம்பல் - 'யோக க்ஷேமம் வஹாம்யகம்' (உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம்) என்பதெல்லாம் புகழ் மிக்க வரிகள். சராசரி உயரம் கொண்டவர் நடிகர் சிவாஜி. ஆனால் அவரின் நடிப்பு கம்பீரமாக இருக்கும். அதற்கு அவர் சொன்ன காரணம், 'நான் அந்த பாத்திரமாகவே மாறி விடுவேன். அதனால் என் உயரம் பிரம்மாண்டமாக தோன்றும்'. உதாரணமாக கட்டபொம்மன், தங்கப்பதக்கம், கவுரவம், உயர்ந்த மனிதன் போன்ற திரைப்படங்கள். எண்ணம் உயர்வானதாக இருக்க வேண்டும். ஆனால் எண்ணம் வெறும் கனவாக இல்லாமல் அதை அவ்வப்போது புதுப்பிக்கவும் வேண்டும். எண்ணமே நம் வாழ்வின் ஆதாரம்! 'தாமரை மலரின் உயரம் என்ன' என பள்ளி ஆசிரியர் கேட்ட போது ஒரு மாணவன், 'இரண்டு அடி' என்றான். இன்னொரு மாணவன் 'நான்கு அடி' என்றான். ஒருவன் மட்டும், 'என்னை பொறுத்தவரை இந்தக் கேள்வியே தவறு - தாமரை மலருக்கு ஏது உயரம்? தண்ணீரின் உயரம் தானே தாமரையின் உயரம்' என்றான். தண்ணீருக்கு மேலே இருப்பது ஒன்றே தாமரையின் லட்சியம்! ஆம்! ஒருவனுடைய உயரம் என்பது அவனது எண்ணத்தின் உயரம். இவ்வளவு பெரிய சிந்தனையை இரண்டே அடியில் திருவள்ளுவர், வெள்ளத்தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்உள்ளத்தனையது உயர்வு என்கிறார். எண்ணத்தின் பிறப்பு, இருப்பு, இறப்பு எல்லாமே மனம்தான். அதைப் பொறுத்தே மனிதனின் உயர்வு அமையும். எண்ணமே வாழ்வு என்பது சாதாரணமானது அல்ல. பிறப்பு முதல் இறப்பு வரை ஒருவனின் எண்ணத்தைப் பொறுத்தே வாழ்வு அமைகிறது என்பதை''எண்ணிய முடிதல் வேண்டும் நல்லதே எண்ணல் வேண்டும்திண்ணிய நெஞ்சம் வேண்டும்தெளிந்த நல்லறிவு வேண்டும்'' என்கிறார் பாரதியார். பகவத்கீதையில் எண்ணத்தை பற்றி அர்ஜுனனுக்கு பகவான் கண்ணனும் எடுத்துரைக்கிறார்.'எண்ணம் பெரிதானால் வாழ்வு; அது சுருங்கினால் மரணம்' என்கிறார் விவேகானந்தர். தான் மட்டும் இல்லாமல், இந்திய அணியையும் அதே உயர்வான எண்ணத்தில் வைத்திருந்தார் கிரிக்கெட் வீரர் கபில்தேவ். உலகக் கோப்பையை மட்டுமல்ல உலக சாதனை படைத்தவர் அவர். வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே அவரது மனதில் நிறைந்திருந்தது. 'பூமியில் இருப்பதும், வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே' என்பது போல எண்ணமே வாழ்வின் ஏணி ஆகிறது. வாழ்க்கையை 'என்ன வாழ்க்கை' என்றும், 'ஆஹா... பிரமாதம்' என்றும் எண்ணலாம். கரும்பில் எத்தனை வளைவுகள், எத்தனை முடிச்சுகள். ஆனால் அதன் உள்ளே போனால் எத்தனை இனிப்பு! நம் வாழ்வும் அப்படித்தான். பிறரை ஏமாற்றத் தோன்றும்எண்ணம் தீமையை தரும்.எண்ணத்தில் கவனமாய் இரு; அதுவே வார்த்தையாகும். வார்த்தையில் கவனமாய் இரு; அதுவே செயலாகும். செயலில் கவனமாய் இரு; அதுவே பழக்கம் ஆகும். பழக்கத்தில் கவனமாய் இரு; அதுவே செயல்பாடாகும். எனவே தான் எண்ணுவது உயர்வு என்கிறார் பாரதியார். எண்ணுவதற்கு ஏற்ப செயல்படவும் வேண்டும். வெறும் கனவுகள், கனவாகவே போய் விடும். கடமை, பொறுமை, உழைப்பு சேரும் போது எண்ணம் வெற்றி பெறும். இதுதான் நம் புராணம், வரலாறு, தலைவர்களின் வாழ்க்கை, கல்வியாளர்கள், தொழிலதிபர்கள் தந்த பாடம். -ஆத்திசூடி தொடரும்தென்காசி கணேசன்94447 94010