உள்ளூர் செய்திகள்

பாரதியாரின் ஆத்திசூடி - 16

சரித்திரத் தேர்ச்சி கொள் பாரத நாட்டின் நாடித்துடிப்பாக இருக்கும் வேதங்கள், சாஸ்திரங்கள், பண்பாட்டை உயிரினும் மேலாக நேசித்தார் பாரதியார். தேசியமும், தெய்வீகமும் இந்த நாட்டு மக்களின் கண்களாக இருக்க வேண்டும் என்பதில் அவர் தீவிரமாக இருந்தார். பூட்டைப் போல மனிதர்கள் இந்த தேசத்திற்கு உண்மையாக இருக்க வேண்டும். பூட்டு உடைந்து போகும்; துருப்பிடித்து போகும்; ஆனால் வேறு எந்த சாவியையும் ஏற்காது. யாரோ தரும் பணம், பதவி, புகழுக்காக, நம் கலாசாரம், பண்பாட்டை பலி ஆக்கக் கூடாது. இந்த நாட்டில் பிறந்த ஒவ்வொருவரும் தேசத்தின் உண்மையான வரலாற்றைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதே மீசைக்கவிஞரின் ஆசை. உலக சரித்திரம் அறியும் முன்பாக உள்ளூர் சரித்திரத்தை அறிய வேண்டும். எத்தனை மாமன்னர்கள், வீராங்கனைகள் இங்கு பிறந்து சாதனை செய்திருக்கிறார்கள். தர்ம சாஸ்திரம், வான சாஸ்திரம், ஜோதிடம், காம சாஸ்திரம், கட்டடக்கலை, சிற்பம், ஓவியம், நாட்டியம், இசை, இலக்கியம் என உலகமே வியந்து பார்க்கும் வரலாறுகள் கொட்டிக் கிடக்கின்றன. நம்மை அடிமை ஆக்கியவர்கள், நம் வளங்களைச் சுரண்டியவர்கள், மதமாற்றம் செய்தவர்கள், நம் பண்பாடு, கலாசாரத்தை அழித்தவர்கள் வரலாற்றைத் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் உண்மை தெரியும். ஆனால் அவர்களைப் பற்றி உதாரண புருஷர்கள் போலே படித்து மனதில் நிற்க வைப்பது தான் வேதனை தரும் விஷயம் என்கிறார் பாரதியார். கம்பன் என்றொரு மானிடன் வாழ்ந்ததும்காளிதாசன் கவிதை புனைந்ததும்உம்பர் வானத்துக் கோளை மீனையும்ஓர்ந்தளந்ததோர் பாஸ்கரன் மாட்சியும்நம்பரும் திறலோடொரு பாணினிஞாலம் மீது இலக்கணம் கண்டதும்இம்பர் வாழ்வின் இறுதி கண்டு உண்மையின்இயல்பு உணர்த்திய சங்கரன் ஏற்றமும்சேரன் தம்பி சிலம்பு இசைத்ததும்தெய்வ வள்ளுவன் வான்மறை தந்ததும்பாரினில் நல்லிசைப் பாண்டிய சோழர்கள்பாரளித்ததும் தருமம் வளர்த்ததும்பேரருட் சுடர்வாள் கொண்டு அசோகனார்பிழைபடாது புவித்தலம் காத்ததும்வீரர் வாழ்த்த மிலேச்சர்தம் தீயகோல்வீழ்த்தி வென்ற சிவாஜியின் வெற்றியும்அன்ன யாவையும் அறிந்திலர் ஆங்கோர்பாரதத்து ஆங்கிலம் பயிற் பள்ளியுள் போகுனர்முன்னர் நாடு திகழ்ந்த பெருமையும்மூண்டிருக்கும் இன்னாளின் இகழ்ச்சியும்பின்னர் நாடுறு பெற்றியும் தேர்கிலார்பேடிக் கல்வி பயின்றுழல் பித்தர்கள்என்ன சொல்லி மற்றெங்கண் உணர்த்துவேன்இங்கு இவர்க்கு எனது உள்ளம் எரிவதேஇந்த தேசத்தின் மாமனிதர்களைப் பற்றி - கம்பன், காளிதாசன், ஆதிசங்கரர், பாணினி, இளங்கோ, வள்ளுவன், பாண்டியன், சோழன், வீர சிவாஜி, அசோகர் என பலர் பற்றி முதலில் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதை அழுத்தமாகத் கூறுகிறார்.'புதிய விஷயங்களை அறிவதில் ஒருவருக்கு என்ன பயன் உள்ளது? புதியவற்றைத் தெரிந்து கொள்வதில் ஒருவன் ஏன் ஆர்வம் காட்ட வேண்டும்?' இப்படி ஒரு கேள்வியை ஒரு மாணவன் கேட்டான்.புதிய சிந்தனைகள், கண்டுபிடிப்புகள், புதிய சக்திகள் எனத் தேடும் போது மனிதனின் வாழ்வுஜொலிக்கிறது. பரபரப்பான மும்பையைச் சேர்ந்த சிறுவன் குக்கிராமம் ஒன்றிற்கு சுற்றுலா சென்றான். அவன் போகும் முன்பு ஆசிரியர் அவனிடம், “கிராமத்தில் நீ கண்ட அரிய காட்சி ஒன்றை ஒரே வரியில் எழுத வேண்டும்” என பிராஜெக்ட் கொடுத்தார்.சிறுவன் கிராமத்திற்குச் சென்றான். வயல்வெளிகளில் சுற்றி விட்டு சில நாட்களுக்குப் பின்னர் ஊர் திரும்பினான். பள்ளியில் தான் பார்த்த அரிய விஷயங்களை விவரித்தான். அதைப் பார்த்த ஆசிரியர் அதிர்ந்து போனார். சிறுவன் எழுதியது இதுதான்: 'இந்தக் கிராமத்தில நிலா ரொம்ப பெருசா இருக்கு' சிறுவன் நிலாவைப் பார்த்த தினம் பவுர்ணமி என்பது ஆசிரியருக்கு புரிந்தது. அந்தச் சிறுவனிடத்தில் மூன்று அறியாமை இருப்பதை காணலாம்.1. பவுர்ணமியன்று நிலா பெரிதாக இருக்கும் என தெரியவில்லை.2. உலகில் இருப்பது ஒரு நிலா தான் என தெரியவில்லை.3. அவனது நகரிலும் மாதந்தோறும் முழு நிலா வருவதை அவன் கவனிக்கவே இல்லை. இதன் மூலம் நாம் அறிவது என்னவென்றால் விசாலமான பார்வையுடன் எல்லா வரலாற்றையும் அறியும் நோக்கம் இருக்க வேண்டும். பழமை என எண்ணாமல், நாம் அறிய வேண்டிய வரலாறு நிறைய உள்ளன. 'பழமை என்றும் பழமையாகாது அன்றைய பழமை இன்றைய புதுமைக்கு அடிப்படை. இதை திருவெம்பாவையில் மாணிக்கவாசகர் அழகாக கூறுகிறார். முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளேபின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே! சிவன் பழமைக்கெல்லாம் பழமை ஆனவன். அதே நேரம் புதுமைக்கெல்லாம் புதுமையானவன் என்கிறான். அதுபோலத்தான் நம் வரலாறும்.இந்தியாவில் இருந்து கல்வி அல்லது பணிக்காக அமெரிக்கா செல்லும் இளைஞர்கள், அமெரிக்காவைப் பற்றி தெரிந்து கொண்டு போவது வழக்கம். ஆனால் அமெரிக்கர்கள் கேட்பது - எங்கள் வரலாறு எங்களுக்குத் தெரியும்; உங்கள் நாட்டு வரலாறு பற்றிச் சொல்லுங்கள் என்றால் நம்மவர்கள் நெளிகிறார்கள். என் தாய் தந்தை பற்றி தெரிந்து கொள்ளாமல் ஊரார் பற்றிப் பேசுவது சரியா? உண்மையான சரித்திரத்தை அறிந்து கொண்டால் தேசத்தின் மீது ஈடுபாடு, அபிமானம் அதிகரிக்கும். நம் சிறப்புகளைப் பற்றி பல புத்தகங்கள் வெளிநாட்டவர் எழுதியது என்பது தான் இதில் முக்கிய விஷயம். நம் இலக்கியங்கள், இதிகாசங்கள், புராணங்கள், வேதங்கள் இவற்றில் என்ன கூறப்பட்டிருக்கின்றன என்பதை அறிய வேண்டும். வரலாறு என்பது இவை எல்லாம் சேர்ந்ததுதான். பல மெய்ஞான தத்துவங்கள், செய்திகள் இன்றைய விஞ்ஞானத்திற்கு அடிப்படையாக இருக்கின்றன என்பது உலகம் அறிந்த உண்மை. ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் முதல் பல அறிவியல் அறிஞர்கள் நம் தேசத்தின் பெருமையை உணர்ந்து பாராட்டி இருக்கிறார்கள்.ஒரு சின்ன உதாரணம் பகவத்கீதை 5000 ஆண்டுகள் முன் பகவான் கிருஷ்ணரால் சொல்லப்பட்டது. அதிக மொழிகளில், அதிக வெளிநாட்டவர்களால் மொழி பெயர்க்கப்பட்ட பெருமை உடையது. வாரன் ஹேஸ்டிங்ஸ் கீதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். மாக்ஸ்முல்லர் ஜெர்மனியில், அவுரங்கசீப் சகோதரன் தாரஷுக், பர்சிய மொழியில் மொழி பெயர்த்தனர். அர்ஜூனன் மனக் குழப்பத்தில் இருந்த போது கிருஷ்ணர் சொல்கிறார். உன் மனம் கண்ணாடியில் துாசி படிந்து இருப்பது போல வீண் சலனங்களால் குழம்பிக் கிடக்கிறது. ஆற்றுநீரில் படகு தத்தளிப்பது போன்ற நிலையில் உள்ளது என்கிறான். கண்ணாடியும் படகும் கண்டுபிடிக்கப்பட்டது எப்போது என்று நாம் பள்ளி பாடங்களில் படிக்கிறோம். ஆனால் 5000 ஆண்டுக்கு முன்பே அதுவும் எழுத்து வடிவம் இல்லாத காலத்தில், செவி வழியாக தொடர்ந்து வந்து சொல்கிறது நம் வரலாறு. இது போல் பல தகவல்கள் இந்த மண்ணின் பெருமையைக் கூறுகிறது என்பதை பாரதியார், பாரத நாடு பழம்பெரும் நாடு நீர் அதன் புதல்வர்இந் நினைவு அகற்றாதீர் என்கிறார். உலக சரித்திரமும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதில் தவறு இல்லை. நெப்போலியன் , சீசர் பற்றிய வரலாறு, எப்படி ஆளக் கூடாது என்பதற்கு உதாரணமான ஹிட்லர், ஸ்டாலின், முசோலினி பற்றிய வரலாறுகளையும் அறிந்து கொள்ள வேண்டும். அதே நேரம் இந்த தேசத்தில் எப்படி எல்லாம் அரசர்கள் இருந்தார்கள். ஹர்ஷவர்த்தன், விஜயநகர மன்னர்கள், இவர்களின் வரலாற்றை நிச்சயமாக தெரிந்து கொள்ள வேண்டும். பொதுவாக பள்ளிகளில் கூட கணக்கு, அறிவியல் என சிறப்பு பாடங்களை படிப்பவர்கள் வரலாற்று பாடத்தை மட்டும் இரண்டாவதாக எண்ணுவார்கள். ஆனால் உண்மையில் வரலாறு நாம் அறியப்பட வேண்டிய ஒன்று. பள்ளி, கல்லுாரி படித்த பின்பு நம் வரலாறுகளை தேடி கண்டுபிடித்து பயில வேண்டும் இதில் தேசத்திற்கு பாடுபட்டவர்கள் உண்மையான ஆன்மிகத்திற்கு பாடுபட்ட குருநாதர்கள் இலக்கிய படைப்பாளிகள் என நிறைய பேர் இருக்கிறார்கள்.- ஆத்திசூடி தொடரும்முனைவர் தென்காசி கணேசன்94447 94010